(Reading time: 149 - 298 minutes)

 “நான் அதனை வழிமொழிகிறேன்.” என்று சத்யன் கை தட்டினான். ரெமி ஒரு கேக்கை கொண்டு வந்து வைத்தாள்.  மதுமதி அதனை வெட்டி அனைவருக்கும் தந்தாள்.

“இதுவரை உன்னுடைய ப்ளான். இது என்னுடைய ப்ளான்…” சத்யனிடம் கூறிய விக்ரம், மதுமதியிடம் ஒரு பரிசினை நீட்டினான்.

“என்ன அண்ணா,” என்று ஆர்வமாக பிரித்தாள்.

அது ஒரு புகைப்படம்… இல்லை… புகைப்படங்களின் தொகுப்பு… இல்லை… புகைப்படங்களின் படம்…? சுவற்றில் மாட்டும் வகையில் அமைந்திருந்த அந்த போட்டோவில், மதுமதியின் சிறிய வயது புகைப்படம் முதல் விக்ரமின் நிச்சயத்தில் கலந்து கொண்ட புகைப்படம்வரை இடம் பெற்றிருந்தது. கொசுவர்த்தி சுருள் கொளுத்தாமலே நினைவலைகளை கடந்த காலத்திற்கு கொண்டு சென்றது.

“இதுதான் குட்டி மதுவா… பல்லை பார். அப்போதும் கோலிகுண்டு சைஸ் கண்தானா” சத்யன் ஆர்வமாக பார்வையிட,

“அண்ணா, இது நான்தான். ஒண்ணாம் கிளாஸில் படித்தபோது எடுத்தது…” என்றாள் ரெமி.

“அப்போதிருந்தே தோழிகளா?. “

“ஆமாம் சத்யன், தாத்தா மட்டும் உன்னை அழைத்து சென்றிருக்காவிடில், மதுவுடைய சிறிய வயது நண்பனாக நீ இருந்திருப்பாய்” சீதா கூறினார்.

“எவ்வளவு  பெரிய இழப்பு… “ சோகமாக கூறியவன் “அப்போதிருந்தே ஒழுங்காக காபி போட கற்று தந்திருப்பேன்” என்று முடித்தான்..

“ஆமாம், சார் டிப்ளமா இன் காபி மேக்கிங் வாங்கியிருக்கார்.” மது கேலி செய்தாள். ஒரு குறிப்பிட்ட படத்தை பார்த்த சத்யன் திகைப்புடன் கேட்டான்.

“மது நீ எப்போதாவது குறிஞ்சிபாடி பக்கம் சென்றிருக்கிறாயா?”

“ம், யோசிக்கணும்…” என்றாள். “நாம் வினாயகம் மாமா திருமணத்திற்கு அங்குதானே சென்றோம். அப்போது நீ எட்டாவது படித்துக் கொண்டிருந்தாய்” விக்ரம் எடுத்து கொடுத்தான்

“ம், எப்போதண்ணா…?”

“அப்போதுகூட நீ ஏரிக்குள் விழுந்துவிட்டாயே…” என்று சத்யன்  நினைவூட்ட,

“ஆமாம், நினைவிற்கு வந்துவிட்டது.  நான் ஏரியில் விழுந்தது உங்களுக்கு எப்படி தெரியும்?  அப்போது ஒருவர்…” அவளை தடுத்த சத்யன்,

“போதும். உன்னை காப்பாற்றியவனைபற்றி வர்ணனை தந்துவிடாதே. நீ குதிரையையே கழுதை என்பாய்.. எனக்கு மானக்கேடாகிவிடும்” எண்றான்.    

“அது நீங்களா..?” என்று வாய் பிளந்தவள், அன்றைய அவனுடைய ஒல்லியான உடல் அமைப்பை நினைத்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“அண்ணா, ரொம்பவும் அழகாக இருந்திருப்பீர்கள் போலேயே” என்று நித்யன் கூற,

“மது, நீ வாயை திறக்காமலே என்னை அசிங்கப்படுத்திவிட்டாய்.” சத்யன் சலித்துக் கொண்டான்

“இல்லை சாரி…” என்று வாயை மூடிக் கொண்டாள்.

“இது என்ன புது செய்தி சத்யா.?” சீதா வினவ,

“நானா… ஒரு மோகினிப் பேயின் மாயையில் சிக்கிக் கொண்டு… காலமெல்லாம் கனவு கண்டு கொண்டு இருந்தேன்….” என்று இழுத்தான். மதுமதிக்கு புரிந்துவிட்டது. அவள்தான் அவனுடைய பெண்ணை பிடித்து தள்ளும் பிரச்சினைக்கும் காரணமா?

“இப்போது நனவிலும் சிக்கிக் கொண்டாகிவிட்டது” என்று முடித்தான்..

“பேயிடம் மாட்டினால் என்ன ஆகும் தெரியுமா?” மது மிரட்ட,

“கெட்ட வார்த்தைகளாலே திட்டி இரும்புக் கரண்டியை கொண்டு அடிக்க வரும் “ என்ற சத்யன் சிரித்தான்.

“மகனே என்ன நடந்தாலும் சரி. மனைவி கையால் அடி மட்டும் வாங்கிவிடாதே. நம் பரம்பரைக்கே இழுக்கு.” விஸ்வனாதன் கூறவும்,

“நான் நல்ல பையன் அப்பா.  என்னைபற்றி எந்த கேள்வியோ சந்தேகமோ எழாது.”

“அந்த மியாமி பீச்..” என்றவளின் வாயை பொத்தி, “வா, நாம் லெஹங்கா வாங்கி்வரலாம்..” என்று இழுத்துச் சென்றான்.

“மியாமியில் என்னவாம். சொல்லிவிட்டு செல்” உரத்த குரலில் கேட்ட தந்தையிடம்.

“அங்கு நிறைய வெள்ளை சுறாக்கள் வருமாம்” என்று தெரிவித்தான்.

“அத்தனையும் பிகினி அணிந்திருக்குமாம்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் முடித்தாள். 

“என் வாழ்க்கையை புரட்டி போட்ட பச்சை மோகினியைவிட அவை நல்லவை.” என்று சிரித்தான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.