(Reading time: 149 - 298 minutes)

 “உன் காதல் தோல்விக்காக ஆறுதல் கூறலாம் என்று வந்தால்… சிலிப்பிக் கொள்கிறாய்” அவளை நோக்கி வலது காலை எடுத்து வைக்க… மதுமதி அருகிலிருந்த பெரிய இரும்பு அரிகரண்டியை எடுத்து வீச எத்தனிக்க… திடீரென்று அவன் பின்னோக்கி இழுத்து வீசப்பட்டான். இரண்டு கைகளையும்  கொண்டு இரும்பு கரண்டியை பிடித்து உயர்த்தி வாள் போல் பிடித்திருந்த அவள் திகைக்க,

“அப்படியே என் மண்டையில் போடு. உன்னிடம் அடி வாங்காததுதான் பாக்கி” சத்யனின் குரல் கேட்டு சிரிப்பு வந்தது.

“தனியாக இருக்க வேண்டாம் என்று சொன்னேன் அல்லவா?” இரும்பு கேட்டை தாண்டி ஓடிக் கொண்டிருந்த ரகுவை பார்த்தவள்…

“அதுதான் நீங்கள் சமயத்தில் வந்து பல்….வாள்….தேவனிடமிருந்து என்னை காத்து விட்டீர்களே. என்ன ஒரு வீரம்.” சிலாகித்தாள்

“என்ன செய்வது என் வீரத்தை இப்படித்தான் கோமாளிகளை துரத்தி காட்ட வேண்டியிருக்கிறது. இதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் நடிகரையா அழைத்து வரமுடியும்?.” என்றவன்,

“ஏம்மா, எனக்கெல்லாம் காபி தரமாட்டாயா?.” என்றபடி பால் வைத்திருந்த அடுப்பை பற்ற வைத்தான்.

“அப்படியே நான் காபி கேட்டாலும் யாரிடமாவது லஞ்சம் வாங்கிக் கொண்டு கையில் காபியை தந்து என் அறைக்கு அனுப்பிவிடுகிறாய்”

“ஓ நான் அனுப்பி வைத்ததால்தான் அப்படி தூக்கி பிடித்து சுற்றி விளையாடினீர்களா.? தெரிந்திருந்தால், அதெற்கெல்லாம் சேர்த்து பைசா வசூல் செய்திருப்பேன்”

“அடுத்த முறை ஆன்லைனில் முன்பதிவு செய்து வசூல் செய்துவிடு”

“சரி, ஏன் அப்படி செய்தீர்கள்?”

“நான் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு உனக்காக காத்திருந்தேன். பின்னால் அவள் வந்து கட்டிப்பிடிக்கவும், நீ என்று நினைத்துவிட்டேன்,”

“நான் சிக்கியிருந்தால்,  சிறு குழந்தையை உருட்டி புரட்டி தொக்கு எடுப்பார்களே, அதுபோல செய்திருப்பீர்கள்.  நான் தப்பித்தேன்“

“நான் மாட்டிக் கொண்டேன். ஆமாம், அது என்ன ரகு ‘உன் காதல் தோல்வி’ என்றான்..” என்று வினவியவன்,

“அவன் ஒரு முட்டாள். உளறிவிட்டான்” என்று மது பதிலளித்தாள்.

“எது உளறல்… காதல் என்பது உளறலா.. தோற்றுவிட்டது என்பது உளறலா…”

“மொத்தமும் உளறல்தான்”.

“பிறகு ஏன் அவ்வாறு சொன்னான் என்று  அவனிடம் தெளிவு பெற்று வருகிறேன். பாரேன் ஒரு முட்டாளுக்கு தெரிந்த விசயம்கூட எனக்குத் தெரியவில்லை.” அவன் கிளம்ப., அவனை தடுத்து, அவள் கலந்திருந்த காபியை நீட்டி,

“வனமலை வழக்கிற்கு செல்லவில்லையா?”

”அதற்கு முன் உன்னிடம் ஒரு விசயம் கேட்க வேண்டும்.”

அப்போது அலைப்பேசி ஒலித்தது. அவள் எடுத்து பேசினாள்.

“மதும்மா, நம்முடைய பக்கம் தீர்ப்பாகிவிட்டது. அதற்கு காரணம், மலைமைந்தர்கள் அமைப்பின் சார்பாக ஆஜர்படுத்திய ஒரு சாட்சிதான்.  நீ கூறிய அந்த சர்வேயர் பரந்தாமன் சார் லண்டனிலிருந்து வந்து சாட்சி கூறினார்.. நான் பிறகு பேசுகிறேன்…”

“பரந்தாமன் சாரிடம் அவர் செய்த ஆய்வின்  நகல்கள் இருந்தன. பொதுவாகவே அரசு அதிகாரிகள் ரிடையர் ஆகும் முன் முக்கியமான தஸ்தாவேஜ்களின் நகலை எடுத்து வைத்திருப்பார்கள். பின்னர் அவர்களுக்கு சிக்கல் ஏதும் வந்தால் பயன்படுத்திக் கொள்வார்கள். பரந்தாமன் சாரிடம் அது இருந்தது. அசல் ரிப்போர்ட்டை மாற்றி வைத்து செய்த தில்லுமுல்லு வெளியாகிவிட்டது. வழக்கின் திசை மாறிவிட்டது. இப்போது உன் வனமலைக்கு முழு பாதுகாப்பு கிடைத்துவிட்டது.”

பெருமூச்செடுத்து தளர்ந்து நின்றாள். எத்தனை பெரிய போராட்டம்!. முடிவிற்கு வந்துவிட்டது. கையெடுத்து அவனை கும்பிட்டாள்.

“நன்றி சத்யன். தெய்வம்போல் வந்து உதவி செய்துவிட்டீர்கள்.”

“தெய்வமா… அப்படியே கழற்றிவிடப் பார்க்கிறாயே… இந்த ட்விஸ்ட்டால் எனக்கு எவ்வளவு கோடி நஷ்டம் தெரியுமா?”

“எத்தனை பேரின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியுள்ளீர்கள். உங்களுக்கு இனிமேல் தொட்ட அனைத்தும் வெற்றியாகும். அத்தனை பேருடைய வாழ்த்தும் உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை தேடித்தரும்.”

“அவ்வளவுதானா…?” அவன் சோகமாக கேட்க,

“வேறு என்ன செய்ய வேண்டும்…” என்றாள்.

“நான் என்னுடைய பெரும்பாலான பணத்தை இதில் முடக்கியுள்ளேன். அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியே வந்தாலும் உனக்கு பாதுகாப்பு இருக்காது என்று எண்ணினேன்.  கத்தியின் கைப்பிடி நம்மிடம் இருப்பது நல்லது என்று  நினைத்தேன். இப்போது அது பங்குதாரர்  நிறுவனம் இல்லை. மற்றவருடைய முதலீட்டையும் நானே பொறுப்பேற்று திருப்பி தந்துவிட்டேன். பணம் பறிபோன கோபத்தில் உனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக் கூடாதல்லாவா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.