(Reading time: 149 - 298 minutes)

 “என்ன ஆகணுமாம். உங்களுக்குதான் இது புது செய்தி. எனக்கு ஏற்கனவே டெலிகாஸ்ட் ஆகிவிட்டது.  ஏதோ கெஞ்சினாரே என்று அமைதியாக இருந்தேன்.” தொடர்ந்து,

“இன்னும் கதையை கேளுங்கள் அத்தை. இந்த வனமலையை ஆபத்திலிருந்து காப்பாற்றி தருவதாக வாக்கு வேறு தந்திருக்கிறார். சிரிப்புதான் வருகிறது”

“அவன் சொன்னானா? அப்படியெனில் அவனுடைய வாக்கை காப்பாற்றுவான். என் பிள்ளை எப்போதுமே வாக்கு தவறமாட்டான்”

“அவர் தனுவுடன் உலக சுற்றுப் பயணம் தொடங்கிவிட்டார். ஆகாயத்தை கூர்ந்து கவனித்தால் அவர் செல்லும் விமானத்தில் இருந்து உங்களுக்கு கையை ஆட்டினாலும் ஆட்டுவார்”

“உனக்கு கேலியாக இருக்கிறதா? முடிவில் நான்தான் ஜெயிக்கப்போகிறேன். பார்க்கலாமா?” சீதாம்மா சவால் விட்டார். “இதென்ன மாமியார் மருமகள் சண்டையா  நடக்கிறது?.” என்று அங்கு வந்த ரெமி குறுக்கிட,

“என் பிள்ளைக்காக நான் யாரிடம் வேண்டுமானாலும் சண்டையிடுவேன்.” 

“அதுதான் அப்பா பேயறைந்தது போல் இருக்கிறாரா?. கொழு மோர் வைத்து கொடுங்கம்மா” என்று கேலி செய்துவிட்டு மதுவை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.

“விக்ரம் என்னிடம் இதையேதான் கூறினார். கண்டிப்பாக நமக்கு சாதகமாகவே அண்ணன் செய்வார் என்றார். நீ இடையில் வந்ததுகள் சொல்வதையெல்லாம் கேட்டு மனம் தளரக்கூடாது. அன்றைக்கு என் நிச்சயத்தின்போது அண்ணனிடம் முகம் முழுவதும் வெட்கச்சிவப்பு பூச நீ பேசிக் கொண்டிருந்தது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அந்த கோலமும் நினைப்பும் மாறக்கூடாது. நீ என்றும் என் செல்ல அண்ணிதான்” என்றவள், மதுமதியின் கன்னத்தில்  முத்தமிட்டு சென்றாள்.

மீண்டும் அலைப்பேசி ஒலிக்க, ‘தனவர்சினி’, அவள் சலித்துக் கொண்டாள். “தனு, நீ எந்த கழுதையோடு சுற்றி எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று சொல்லிவிட்டேன் அல்லவா? மரியாதையாக ஃபோனை வை” என்று கத்தினாள்.

“இந்த கழுதை என்றது என்னைத்தானா?. இந்த வாரக் கோட்டா முடிந்துவிட்டது. உன்னிடம் திட்டு வாங்காவிடில் ஒரே கெட்ட விசயமாக நடக்கிறது. இனி சரியாகிவிடும்” சத்யனின் குரல் கேட்டு மனம் மழைமேகத்தை தேடியது.

“இப்போ எதுக்கு கால் செய்யணும்?. அதான் மாமாவிடம் மாட்டியாகிவிட்டதே?”

“அது தனு ஒரு விசயம் சொன்னாள்.  என்றென்றைக்கும் நீதான் என்னுடைய வொய்ப்பூ என்று  மிரட்டினாயாமே?. அவள் என்னிடம் சொல்லவும் நான் பயந்துவிட்டேன்”

“சொல்லியாகிவிட்டதல்லவா? இப்போது ஃபோனை வையுங்கள். நாம் கோர்ட்டில் சந்திக்கலாம்.”

“அதென்ன விவாகரத்து கேஸா.  கோர்ட்டில் நாம் சந்தித்துக் கொள்ள. இன்றைக்கே உன்னை சாட்சி சொல்லவிடமாட்டேன் என்று கூறினேன் அல்லவா. செய்துவிட்டேன்தானே. எப்டி..?” தொடர்ந்து,

“சரி, அப்பாவிடம் நான் பேச வேண்டும். நீ அலைபேசியை அவரிடம்கொண்டு செல்கிறாயா?. நான் அழைத்தால் எடுக்க மாட்டார்”

“நான் தந்தால் மட்டும் பேசுவாரா?”

“ஒரு முயற்சி செய்.. அவர் இருதய நோயாளியல்லவா. கொஞ்சம் அமைதிபடுத்த முயற்சிக்கிறேன்.”

அவள் அலைப்பேசியை அவரிடம் கொண்டு சென்று  நீட்டினாள். “சத்யன் உங்களிடம் பேச வேண்டுமாம்”

“துரோகிகளுடன் நான் பேச மாட்டேன்” என்று அவர் கத்தினார்.

“கேட்டதா?.  நான் சொன்னேனல்லவா?. மாமா உங்களுடன் பேச மாட்டாராம்.” என்று சொன்னாள்.

“நீ சொன்னது சரிதான். சரி… நான் ரெமியிடம் என் சார்பாக உனக்கு ஒன்று தரச் சொன்னேன் தந்துவிட்டாளா?” திடீரென்று அவன் கேட்கவும், அசந்தர்ப்பமாக ரெமி அவளை முத்தமிட்டது நினைவிற்கு வந்தது. “கன்னத்தில்ல்ல்” என்று அவன் உறுதிபடுத்த, முகம் சட்டென சிவந்தது. அவன் சார்பாகவா அவள் தந்தாள். வெட்கம் கவிழ முணுமுணுத்து திரும்பினாள்.

“நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?.  மாமாவிற்கு முன் இப்படி பேசுகிறீர்கள்/”

“அவர் கவனிக்க வேண்டும் என்றுதான் பேசினேன்.  நீ வெட்கப்பட்டிருப்பாய். அதை அவர் பார்த்து மனம் குளிர்ந்திருப்பார். உன்னை நான் பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்றும் நம்புவார். அவருக்கு ஆறுதலாகவும் இருக்கும்.”

அவள் திரும்பி விஸ்வநாதனை பார்த்தாள். அவன் சொன்னது சரியே. கோபமுகம் மாறி, இதழில் புன்னகை தவழ அறையில் இருந்த பிள்ளையார் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். பல்பு போடுகின்ற வேலையையும் ஃப்யூஸ் பிடுங்கும் வேலையையும் அவனால்தான் ஒருமிக்க செய்யமுடியும்.

“நான் போட்ட ஸ்கெட்ச் சரிதானே?. ஒரு வாரத்திற்கு தாங்கும்.  அப்புறம், அடுத்த வாரம் மஞ்சள் தண்ணீரை கரைத்து ரெடியாக வைத்திரு. மாமன் வருவேனல்லவா, அப்போது என் தலையில் ஊற்றவேண்டும் செல்லம்” என்று சிரிக்கும் குரலில் கூறினான். ”குட் நைட்”  தொடர்பை துண்டித்துவிட்டான்.

அவளிடம் இப்படியெல்லாம் பேச அவனுக்கு எவ்வளவு தைரியம்?. மாமாகூட மகிழ்ந்து போனாரே. எல்லாம் இந்த உரிமை எருமை செய்கிற வேலை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.