(Reading time: 149 - 298 minutes)

.மதுமதிக்கு குழப்பம் மிகுந்திருந்தது. ஜேடி மைன்ஸ்ஸில் சத்யனும் முக்கியமான பங்குதாரர். முதலில் அவளை அழைத்து பேரம் பேசினார்கள்… பிறகு அதிரடி சட்டங்கள் போட்டு போராட்டத்தை ஒடுக்கினர்… அவள் மீது கொலைவெறி தாக்குதலும் நடந்தது… கடைசியில் அவளுடைய வாழ்க்கையையும் பறித்தாகிவிட்டது. இத்தனைக்கும் பின்னால் ஜட்ஜ் அங்கிளின் மகன் சத்யனும் இருக்கிறான். இடையில் நல்ல பிள்ளைபோல அவனுடைய குடும்பத்திற்கே அல்வா கிண்டி தந்திருக்கிறான். இத்தனை நாள் வராதவன் இப்போது ஏன் வந்தான் என்று ஒரு கேள்விகூட கேட்கத் தோன்றவில்லையே. அவனுடைய இந்த பந்துமித்ர துரோகத்தை எப்படி அங்கிளிடம் சொல்வது.  

 வேண்டாம், சொல்லத் தேவையில்லை.  அவளை எதுவும் கட்டுப்படுத்தாது. அவள் ஒரு விசயத்தை உறுதியாக நம்புகிறாள். அதனை கடைசிவரை காப்பது என்று முடிவெடுத்து போராடுவாள். போர்களத்தில் வாளெடுத்து தோள் கொடுக்கும் நண்பனாக அவனை நினைத்தது தவறு. இனி அவள் தனியே  போராடுவாள். அங்கிளிடம் அவளாக சொல்ல மாட்டாள். அவருக்கு தெரியும்போது, அவன் தன் முயற்சியில் தோற்றுப்போய் பழைய இடத்திற்கே சென்றிருப்பான்.

னமலை சம்பந்தப்பட்ட வழக்கின் அடுத்த ஹியரிங் இரண்டு நாட்களில் இருப்பதாக முத்து அண்ணன் கூறினார். அவள் அன்று சாட்சி சொல்லியாக வேண்டும். அவளுடைய வாதம் உண்மை என்று நிருபிக்கும் ஆதாரம் அவளிடம் இல்லை என்றாலும்… பொய் என்று நிருபிக்கும் ஆதாரத்தை அவர்கள் சமர்பிக்க வேண்டும். இது விசயமாக  நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி புது ஜியாலஜிக்கல் ரிப்போர்ட் தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கனிமவளத்துறை அதிகாரிக்கு உத்தரவிடலாம். அல்லது ஏற்கனவே இருக்கும் ரிப்போர்ட்டின் உண்மை தன்மையை ஆராயச் சொல்லி ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்படலாம்.. அவர்கள் புது ரிப்போர்ட்டை தயார் செய்யலாம். எப்படியிருந்தாலும் வழக்கு இழுத்தடிக்கும்.

இடையில் ரெமியின் திருமண ஏற்பாடுகளும் விரைவுற்றன. ரெமியோ, அவளுக்கு அண்ணன்-அண்ணி ஸ்தானத்தில் இருந்து சத்யனும்-மதுமதியும் செய்யப்போகும் சடங்குகளை எண்ணி ஆனந்தப்பட்டாள். அண்ணன் அவள் திருமணத்தை  நடத்தவென்றே வந்திருப்பதாக மகிழ்ந்திருந்தாள். சத்யனின் தில்லுமுல்லு தெரிந்தால் இந்த பெண் என்ன ஆவாளோ என்று மதுமதி நினைத்தாள்.

மறுநாள் வழக்கின் வாய்தா நாள். அவள்  நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அன்றிரவு சத்யன் அவளிடம் பேச அவளை தோட்டத்திற்கு அழைத்திருந்தான். அவன் என்ன சிங்கமா…?  அவள் அவனை பார்க்கச் சென்றாள்..

“நீ நாளைக்கு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம்” அவன் கூற, அவள் இதற்காகத்தானே காத்திருந்தாள்.

“கட்டளையிடுங்கள் கண்ணாளனே, தங்கள் உத்தரவை மீற மாட்டேன்” அவளுடைய பதிலிலேயே ஏழுகடல் தாண்டி அவள் குதிப்பது தெரிந்தது.

“சத்ய தேவதை! நான் சொன்னது அந்த காதில் விழவில்லை என்று தெரிகிறது. நீ நாளை சாட்சி சொல்ல போகக்கூடாது. ஏனெனில்….”

“நான் போனால், பாடுபட்டு போட்ட திட்டமெல்லாம் வீணாகிவிடுமே.. தங்களை அவ்வளவு பெரிய .இக்கட்டில் தள்ளிவிடமாட்டேன்”..

“நீ என்ன சொல்கிறாயோ அதற்கு எதிராகவே நடப்பாய் என்று எனக்குத் தெரியும்”

“சகவாச தோஷமாக இருக்கும்.”

“என்னை சொல்கிறாயா? நான் பேச்சு மாறப்போவதில்லை.”

“பிறகு ஏன் என்னை தடுக்க வேண்டும்…”

“கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பது சாத்தியம் இல்லை என்பதால்தான். உன்னுடைய சாட்சி அடிப்படையே இல்லாதது. அங்கிள் சொன்னார் அசரரீ சொன்னது என்பதெல்லாம் செல்லாது. என்றாவது ஒருநாள் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளது”

“வேறுவழியில்லையே. கடைசிவரை முயற்சிப்பது என்பதுதான் எங்கள் முடிவு.”

“நான் என்ன சொல்கிறேன் என்றால், அது உன்னை பணயம் வைத்து செய்ய வேண்டிய வேலையில்லை. அதற்கு வேறு ஆள் இருக்கிறார். அவர் சொன்னால் கதை மாறும். நீ இந்த அபாய வளையத்தில் இருந்து வெளிவரவேண்டும் மது. உனக்கு இனியொரு ஆபத்து வரக்கூடாது.”

“ஓநாய்.. எதற்காக அழுகிறதாம்…?”

“நீ திருந்த மாட்டாய். நாளை நீ எப்படி போவாய் என்று நானும் பார்க்கிறேன். அப்படியே போனாலும் கூண்டில் ஏறவிடமாட்டேன். திரும்பவும் உன் கையினை பிடித்து வீட்டிற்கு இழுத்துக் கொண்டு வரத்தான் போகிறேன்”

என் கையினை பிடிப்பானா…? அது என்ன மாதிரி தவம் செய்த கை… அந்த கைக்கே கற்பு உண்டு. ஒருவனுக்கு மட்டுமே சொந்தம் என்று சாசனம் செய்யப்பட்டது. இவன் தொடுவானா… எரித்துவிடமாட்டாள். மனதில் நினைத்ததை பார்வையாக அவனிடம் வீச, அதையும் இப்போதே பார்த்துவிடலாம் என்று அவனும் முடிவெடுக்க, அவளை இழுத்து கையைபற்றினான். மென்மையாக கரத்தினை பற்றிக் கொண்டான். அவளின் நினைவு பெட்டகத்தினுள் பொக்கிஷம் போல் வைத்திருந்த உணர்வுகள் வெளி வந்தன. அதே மென்மையான ஆனால் வலிய பிடிக்குள் அவள் கரம் சிக்கியிருந்தது. இதென்ன… இந்நேரம் அவன் எரிந்து சாம்பலாகியிருக்க வேண்டாமா.. அவளாவது நெருப்பின் வெக்கையை உணர்ந்திருக்க வேண்டாமா… குறைந்தபட்சம் ஓங்கி ஒரு அறைவிட்டிருக்க வேண்டாமா…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.