(Reading time: 149 - 298 minutes)

அவ்வளவு பெரிய வழக்கறிஞரை டெல்லியில் வரவழைத்தது யார்? ஒரு பெரிய தொகையினை வாங்காமல் தீபக் சர்மா ஆஜராக மாட்டார். இது ஒருவேளை சதி வேலையாக இருக்குமோ. அவள் யோசித்த போதே அடுத்த வழக்கு ஆரம்பித்தது. அது ஜேடி மைன்ஸ் அரசை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கு. அவர்களுடைய வழக்கறிஞர்  எழுந்து,

“நீதியரசருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் ஜேடி மைன்ஸ் சார்பாக வாதாட வந்துள்ளேன். நான் என் வாதத்தை தொடங்கலாமா?”

“யெஸ் தொடங்குங்கள்”

“மை லார்ட். ஜேடி மைன்ஸ் சட்டப்படி பதியப்பட்ட  நிறுவனம். இருபது கோடி முதலீட்டில் கிரானைட் குவாரி நடத்த அனுமதிபெற்ற நிறுவனம். வனமலை கிரானைட் குவாரியை முறைப்படி ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் குவாரி அமைக்க அரசின் அனுமதி பெற்று ஏலத்தில் எடுத்து ஒரு வருடம் ஆகிறது. அவர்களால் இன்னும் குவாரியை ஆரம்பிக்க முடியவில்லை. மிகப் பெரிய தொகை இதில் முதலீடாக முடக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ள பங்குதாரர்கள் பெரும்பாலானோர் பெரிய அளவில் கட்டிடம்கட்டும்  நிறுவனங்களையும்  நடத்தி வருகின்றனர்.  அவர்களுடைய தொழிலுக்கு துணையாக இந்த குவாரி பிஸினெஸ்ஸையும் ஆரம்பித்துள்ளனர். அந்த தொழிலும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது. கனம் நீதிபதி அவர்கள், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு பொறுப்பினை ஏற்று எங்களுக்கு குவாரி நடத்த ஆவண செய்யுமாறு உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ”

“மிஸ்டர் ஜெயகர்., இப்போதுதான் இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அவகாசம் கேட்டுள்ளனர் ஜேடி மைன்ஸில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்யுங்கள்- நான் அவர்களை பார்க்க விரும்புகிறேன். இங்கு வந்திருக்கிறார்களா?”

“யெஸ் யுவர் ஆனர். சிலர் வந்திருக்கிறார்கள்.” இந்த திருப்பம் சத்யன் எதிர்பாராதது. இப்போதைக்கு வழக்கை பதிவு செய்தால் போதும் என்று நினைத்திருந்தான். இப்போது வசமாக சிக்கிக் கொண்டான். நீதிபதியின் உத்தரவை அடுத்து மாதவன், வீரய்யன் மற்றும் சத்யன்  நீதிபதியின் முன்  ஆஜரானார்கள். வழக்கின் விவரங்களை ஆராய்ந்த நீதிபதி,

“நீங்கள்தான் ஜேடி மைன்ஸ்ஸின் பங்குதாரர்களா?. உங்கள் பெயரை சொல்லுங்கள்”

“நான் ரங்கா புரமோட்டர்ஸ் உரிமையாளர். மாதவன் ”

“நான் அரந்தை கிரானைட்ஸ் உரிமையாளர் வீரய்யன் ”

“நான் விஸ்வா கன்ஸ்டரக்சன்ஸ் உரிமையாளர் சத்யசந்திரன் ”

“இதோ அவர்களுடைய அடையாள சான்றுகள்” என்று அவரிடம் ஜெயகர் சமர்பித்தார்.

.”மற்றவர்கள் பற்றிய விவரங்களையும் அவர்களின் மற்ற தொழில் தொடர்பான தஸ்தாவேஜுகளையும் தாக்கல் செய்யுங்கள்.  . இந்த வழக்கையும் பிப்ரவரி இருபதாம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்” என்றவர், அரசு சார்பாக வந்திருந்த வழக்கறிஞரை பார்த்து,

“நீங்கள் இந்த வழக்குகளுக்கான உங்கள் பதிலை கோர்ட்டில் சமர்பிக்க உத்தரவிடுகிறேன். வழக்கின் தன்மை கருதி இது தொடர்பாக வனமலை பாதுகாவலர் அமைப்பினர் தொடர்ந்த வழக்கையும் வரும் இருபதாம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்.  அன்று அனைவரும் தங்களுடைய கடைசி வாதங்களையும் ஆதாரங்களையும் சாட்சிகளையும் சமர்பிக்க  உத்தரவிடுகிறேன்..” முடித்தவர் மதிய இடைவேளைக்காக எழுந்தார்.

கோர்ட் அறையிலிருந்து வெளியே வந்த சத்யன் எதிர்பார்த்தபடியே விஸ்வநாதன் அவனுடைய காரின் அருகில் தீப்பிழம்பாய் நின்றார். சற்று தொலைவில் மற்றவர்கள் நிற்க,

“நீயும் அந்த மலைவெட்டி குரூப்தானா?. என்னிடம் ஏன் சொல்லவில்லை” அதுதான் சிங்கத்தின் கர்ஜனையா…

“அப்பா…” அவன் ஆரம்பிக்கும் முன்,

“இதற்காகவே நீ இங்கு வந்திருக்கிறாய்.  நான் சற்று யோசித்திருக்க வேண்டும். முட்டாளாகிப் போனேன்”

“அப்படியில்லை.”

“இனி என்ன கதை வைத்திருக்கிறாய். திட்டமிட்டு மதுவையும் திருமணம் செய்து கொண்டாய். அவளை எங்கேயாவது கொண்டு சென்று கொலை செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளாயா?”

“அப்பா… “அவன் குரலை உயர்த்தினான். “நான் மதுமதிக்கு பாதுகாவலாகவே இருந்திருக்கிறேன் அவள் என் மனைவி…”

“அப்படியா… அவ்வாறெனில் காலையில் வந்தவள் யார்? அவளுடன் அறையில் என்ன செய்து கொண்டிருந்தாய்? மது உன் மனைவியென்றால், அவள் எதற்கு…? உன் அம்மாவின் புத்தி – மற்றவர் வாழ்க்கையுடன் விளையாடும் புத்தி- உனக்கும் வந்துவிட்டது அல்லவா?. என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாதே. இந்த வழக்கை எப்படி நடத்துவது என்று எனக்குத் தெரியும்” வெறுப்புடன் கூறினார். அவருடைய பழிச்சொல்லால் அதிர்ச்சியுற்ற அவன் திகைத்து  நிற்க, அவர் மதுமதியை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பிவிட்டார்.

இனி அவன் வீட்டிற்கும் செல்ல முடியாது. யாரையும் சந்திக்க முடியாது. பத்து நாட்களுக்குள் அவன் அனைத்தையும் சரி செய்ய வேண்டும்.  காரில் ஏறியவன், சென்னை நோக்கி கிளம்பிவிட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.