(Reading time: 149 - 298 minutes)

 “என்னுடைய இந்த தொடுதலை உன்னால் தவிர்க்கமுடியவில்லை.. இதன் அர்த்தம் உனக்கு விளங்குகிறதா…?” அவன் முடிக்கும் முன் “விளங்கிவிட்டது” என்று கையினை உருவிக் கொண்டு ஓடிவிட்டாள். அவளுக்கு என்ன விளங்கியிருக்கும் என்று அவன் யோசித்தான். கண்டிப்பாக அவளுடைய களிமண் மூளை சரியாக புரிந்து கொண்டிருக்காது!

உண்மைதான் மதுமதி என்ன நினைத்தாள் என்றால், அவளின் பலவீனத்தை அவளுக்குப் புரியவைத்து அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல நினைக்கிறான். இது பஞ்சதந்திரத்தையும் தாண்டிய ஆறாவது தந்திரம். ஒரு நாளும் அவள் அதில் சிக்கப் போவதில்லை. அவள் என்ன செய்ய நினைக்கிறாளோ அதை செய்வாள். கோபம் கொள்ளாமல், இனி வேறு வழியில் செய்வாள்.. கோபம்வரும்போது தன்னிலை மறந்து விடுகிறாள்.

மறுநாள் காலையிலேயே அவளை தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்கும்போது அவளிடம் வந்தான்,. “என்ன விளங்கியது…?”.

அவள் சிரிப்பை சிந்திவிட்டு, “நான் உங்களுக்கு காபி கொண்டு வரவா?” என்றாள். அட, புலி புல் தின்னுகிறதே.. அப்படியா..? அவனும் சுதாரித்து,

“நான் என்னறைக்கு செல்கிறேன். நீ அங்கு கொண்டு வா” என்று நகர்ந்துவிட்டான்.

‘அங்கே வந்தால் மட்டும் அவளை சம்மதிக்க வைத்துவிடுவானா…? அதையும் பார்க்கலாமே. ஆனால் அவளை அவன் அங்கு வரச்சொன்ன காரணம் வேறு. அவளிடம் ஒரு டாக்குமெண்டை காட்டி விவரத்தை கூறி சமாதானப்படுத்த வேண்டும். அவளின் வருகைக்காக அவன் காத்திருந்தான். அதோ அந்த மேகங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகி ஓடுகின்றனவா இல்லை ஒன்று சேர்ந்திடுமா…? என்று ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் முதுகில் ஒரு கரம் படிய, அவன் சுயநினைவிற்கு வந்ததை காபியின் மணம் மூக்கிற்கு தெரிவித்தது. பின்னிருந்து வந்த இரு கரங்கள் அவனுடைய மார்பை சுற்றி படர்ந்தது ஆச்சரியத்தைவிட உற்சாகத்தை கிளப்பிவிட இதென்ன இனிய திருப்பம்…! என்று மனம் விசிலடிக்க, அப்படியே அந்த கரங்களை பற்றியிழுத்து… அவளை உயரத் தூக்கி  ஒரு சுற்று சுற்றி.. இறக்கி..  சுவற்றில் சாய்த்து… முகம் நோக்கி குனிய… இல்லை குனியும் முன், அறையின் வாசலில் காபி டிரேவுடன் நின்ற  மதுமதி கண்ணில்பட்டாள்..

அவன் கையில் இருப்பது யார்…? பதறிப்போய் விலகி பார்த்தால்… அது தனவர்சினி… இவள்… இங்கே… எப்படி…. அவன் மீண்டும் வாசலைப் பார்க்க… கதவை மூடிவிட்டு மதுமதி நகர்ந்திருந்தாள்.

ஐயோவென்றிருந்தது அவனுக்கு… “நீ இங்கு என்ன செய்கிறாய்?” தனுவிடம் எரிந்து விழுந்தான்.

“காபி கொண்டு வந்தேன். உங்கள் காதலிக்கு அந்த உரிமைகூட இல்லையா? என்னவொரு வலிமையான பிடி… ஆஸம்..” என்றவளை தரதரவென இழுத்துச் சென்று கதவருகில் நிறுத்தி,

“எனக்கு கோபம் வருமுன்  இப்படியே ஓடிவிடு… இனி என்னை மீண்டும் சந்திக்க நினைக்காதே. காதலி கத்தரிக்காய் என்று சொன்னால் கழுத்தை அறுத்துவிடுவேன். கெட் அவுட்”  அவன் மனதில் தனக்கு எந்த இடமும் இல்லை என்பதை புரிந்து கொண்ட தனு அதிர்ச்சியுற்று வெளியேறினாள். அதற்காக

 ஆனால், போகும் முன் சிரிப்பு மாறாமல் மிகுந்த உற்சாகத்துடன் மதுமதியை பார்த்து சிரித்துவிட்டுதான் சென்றாள். அது மதுமதியை கொதிக்க வைத்து கற்பனையிலேயே அவள் கணவன் சத்யசந்திரனுக்கு நூறு சவுக்கடி தந்து வேடிக்கை பார்த்தது. ஒரு உறவும் இல்லையென்றான், இப்போது அறைக்கே அழைத்து கொஞ்சுகிறான். பழையகாலமாக இருந்தால் சுண்ணாம்பு காளவாய்க்குள் அமிழ்த்தியிருப்பாள். யோசித்தபோது ஒன்று புரிந்தது… அவளுடைய திருமணம்… இல்லை. ஒப்பந்த திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. அது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது போல.

அவனை சந்திப்பதை அவள் தவிர்த்துவிட்டு, கிளம்பினாள். அவனும் அதே நிலையில்தான் இருந்தான். பார்வை விலக இருவரும் பிரிந்து நடந்த விதம், அங்கு வந்திருந்த ரகுவிற்கு மகிழ்ச்சியை தந்தது. இதற்காகத்தானே காத்திருக்கிறான். சத்யன் தன்னுடைய காரில் ஏற, மதுமதி வேறு ஒரு காரில் ஏறினாள். அவளுக்காக காத்திருந்த சத்யன் நிதானித்தான்.

இடையில் வாய்ப்பு கிடைத்ததே என்று உற்சாகமான ரகு, மதுவிடம் ஓடிவந்து “நான் துணைக்கு வருகிறேன், மது” என்றான். அத்துடன் விட்டிருந்தால்கூட மது அவனை அனுமதித்திருப்பாள். அவன் அனிச்சையாக கார் கதவினை திறக்க முயற்சித்த அவளுடைய கரத்தினை பற்றிட, அப்போது அவள் தீயின் சுவாலையை உணர்ந்ததால். ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள். “என் கையை தொட்டால் வெட்டிவிடுவேன்” என்று எச்சரிக்க, மீண்டுமா? என்று அவன் திகைத்து பின்வாங்கினான்.

இடைப்பட்ட நிமிடத்தில், சத்யன் காரைவிட்டிறங்கி வந்து மதுமதி இருந்த காரில் ஏறி காரை கிளப்பி… விரைந்தான். முகம் முழுவதும் ஒரு பிரகாசம் வீசிட அவன் அவளுக்குள் பார்வையால் கேள்வியினை விதைத்தான்.

சத்யன் தொட்டபோது  வெறுப்பினை கிளறாத அவள் மனம் ரகு தொட்டபோது கொலைவெறி கொண்டதன் காரணம் என்ன? அவன் யார் என்று தெரிந்தும் அவளுடைய சொந்தமண்ணிற்கு கேடு விளைவிக்க வந்தவன் என்று தெரிந்தும் மனம் அவனுக்கு இன்னும் சந்தர்ப்பம் தருகிறதே. காலையில்கூட தனவர்சினியுடன் அவனை பார்த்தபோது வயிறு பற்றி எரிந்ததே… இதன் அர்த்தம்தான் என்ன? இதுதான் …. இது ஒருவேளை…. காதலா…. இல்லையில்லை பார்க்க பார்க்க பிடிக்கும்  என்று சொல்வார்களே அந்த லாஜிக்காக  இருக்கும். மதுமதி குழம்பிக் கொண்டிருந்தபோது நீதிமன்றத்திற்கு வந்துவிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.