(Reading time: 149 - 298 minutes)

 “ஏன் தெரியாமல்? அமைச்சரின் மைத்துனர் வீரய்யன்… அவருடைய தூண்டுதலின் பேரில் மற்றவர்கள்… அந்த நிறுவனம்கூட ஜேடி மைன்ஸ் ஆகும்”.

அவளுடைய பதிலால் அதிர்ச்சியுற்றவனை மேலும் ஒரு விவரத்தைக் கூறி அங்கு வந்த விஸ்வநாதன் பதற வைத்தார்.

“மதுமதியின் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்குப்பின் அந்த கும்பல் உள்ளது என்று, சந்தேகிக்கிறோம். ஆனால், இருந்த ஒரு சாட்சியும்  கோமாவில் இருப்பதால் இதனை நிருபிக்க முடியவில்லை. அவர்கள் மீண்டும் முயற்சிக்கலாம் என்று நினைத்தே நம்முடைய பாதுகாப்பில் வைத்திருக்கிறேன்.”

“அப்படியா அங்கிள். எனக்கு இந்த விசயம் தெரியாதே…” என்ற மதுமதியையும், அவனுடைய தந்தையையும் மாறிமாறி பார்த்தான். தானும் அந்த சதியில் விவரம் தெரியாமல் சிக்கியிருப்பதை புரிந்து கொண்ட அதிர்ச்சி அவனை  நின்ற இடத்திலேயே உறைய வைத்தது.

சட்டென அலைப்பேசியை எடுத்துக் கொண்டு முக்கியமான விசயம் பேசுவதுபோல அவ்விடம் விட்டு அகன்று தொலைவிற்குச் சென்றான். தொலைவில் தெரிந்த மேகங்களை பார்த்தவாறே, அனைத்தையும் தொடர்புபடுத்தி பார்த்தான்.

உண்மையில் அவன் சென்னைவாசியே இல்லை. அவனுடைய தாத்தாவுடன் மும்பையில் வசித்து வந்தான். அவனுடைய தொழில் ஆரம்பமும் அங்குதான். பிரசித்திபெற்ற கட்டிடக்கலை கல்லூரியில் படித்து சொந்தமாக தொழிலை ஆரம்பித்தான்.  அவனுடைய தந்தை குடும்பத்துடன் தாத்தா இருந்தவரை பழகவிடவில்லை. அவருக்குப்பின் தனித்துதான் இருந்தான். விஸ்வநாதனுக்கு ஹார்ட் அட்டாக் வந்தபின் அவருக்கு அருகில் இருக்க எண்ணி சென்னைக்கு வந்தான். அங்கிருந்து இரண்டு மணி நேர டிரைவிங் தொலைவில் வனமலை இருந்ததால் அவன் சென்னையை தேர்ந்தெடுத்தான். அப்போதுதான், புதிய முதலீடு செய்ய எண்ணி, அவனுடைய தொழில்முறை பங்குதாரராகிய ராம்குமாரின் ஆலோசனைப்படி ஜேடி நிறுவனத்தில் முதலீடு செய்தான். அதற்குபின் இவ்வளவு அரசியல் இருப்பது இப்போதுதான் தெரிகிறது.   

ஆறு மாதங்களுக்கு முன் நடந்த மீட்டிங்கில் அவன்தான் ரகளை செய்தான். போன வாரம் நடந்த மீட்டிங்கிலும் அவன்தான் டெட்லைன் குறித்தான். காலநேர அளவீடும், மாதவன் சொன்ன ‘சரிகட்டும்’ முயற்சியும், பிரச்சினையின் ‘மையப்புள்ளியும்’ மதுமதியை குறி வைத்து சொன்ன வார்த்தைகள்தான் என்று புரிந்தது. அவளுக்கு அன்று நேர்ந்த ஆபத்தின் பின்னணியும் புரிந்தது. மீண்டும் அவளுக்கு ஆபத்தை கொண்டுவந்துவிட்டானா? அவளுடைய இந்த நிலைக்கு அவனே காரணம் என்பது தெரியவும், மனம் பதைத்தது. அன்றைக்கு ரத்தக்குவியலாக அவளை தூக்கியது இன்றைக்கும் நினைவிற்கு வந்தது. ரத்தவாடை… மருந்துகளின் நெடி… இப்போதும் அவனுக்கு நினைவில் நின்றது. இந்த பாவத்திற்கு விமோசனமே இல்லையா…?

நியாயமான விசயத்திற்காக போராடிய மதுமதியின் வாழ்க்கையை அழித்தது அவன்தான்… அவளின் காதலையும் அழித்தது அவன்தான்… ஒப்பந்த திருமணம் என்று அவளுடைய எதிர்கால கனவை அழித்ததும் அவன்தான்…. இப்போது அவளுடைய வாழ்விடத்தை அழிக்கும் முயற்சியிலும் பெரும்பங்கு முதலீடு அவனுடையதுதான். இதில் அவள்மீது காதல்வேறு முளைத்துள்ளது. ஒருத்திக்கு இத்தனை கெடுதலை யாராலும் செய்ய முடியாது. யாரிடம் இந்த கதையை சொன்னாலும் அவனைத்தான் முதலில் தூக்கில் போடுவார்கள். 

பழையபடி மும்பைக்கே ஓடி விடலாமா என்று நினைத்தான். அல்லது சென்னையில் இருந்து கொண்டு எப்போதாவது… ம்ஹூம், அது அவளுக்கு அவன் வழங்கும் நியாயம் ஆகாது. அனைத்தையும் சரி செய்ய வேண்டும்.

கோவிலில் இருந்து திரும்பிய பின்னும் அவனுடைய மௌனம் நிலைத்து இருந்தது. அவளுடைய காதலை அவளுக்கு பெற்றுத் தரவேண்டும்.. அவளுடைய மலைக்கிராமத்தை காப்பாற்ற வேண்டும்…. இதுதான் அவளுக்கு அவன் செய்யும் கைமாறு. இதற்கு குறுக்கே அவனுடைய சொந்த விருப்பங்களுக்கோ லாப நஷ்டங்களுக்கோ  இடமேயில்லை.

அவளுடைய முன்னிலையிலேயே ரெமியுடன் பேசினான். பெண் மனம் என்றைக்கும் மாறாதது அல்லவா? அவளுக்காக விக்ரமை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டு  குடும்பத்தாருடன் பேசி சம்மதம் வாங்கினான். திருமணத் தேதி குறிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மதுமதியிடம் அவளுடைய குடும்பத்தார் ரொம்பவும் ஒட்டிக் கொள்ளாமல் பேச ஆரம்பித்தனர். முன்னைவிட ரகுவின் பிரவேசம் அதிகரித்தது மட்டும் அவனை சிறிய அளவில் பாதித்தது. அவர்கள் இருவருக்கிடையில் உள்ள இடைவெளியை தோண்டி துருவிக் கண்டுபிடித்துவிடுவானோ என்ற அச்சம்தான்.

அடுத்த கட்டம், இனி அவளுடைய காதலை கரை சேர்க்க வேண்டும். அவளிடம் தனியே பேசி விவரம் கேட்க நினைத்தான். மழைமேகங்கள் கூடி நின்ற, ஒரு மாலை  நேர வாக்கிங்கின் போது அவளிடம் பேச விழைந்தான்.

“அவன் உன்னுடைய சிறு வயது தோழனா?”

“யார்…?” கேட்டபோதே அவளுக்கு புரிந்துவிட்டது.”இல்லை” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.