(Reading time: 149 - 298 minutes)

 “இதுதான் எல்லை. இதனை மீறி நெருங்கினால்   நடக்கப்போகும் எதற்கும் நான் பொறுப்பல்ல. வீங்கிய கன்னத்தை மறைக்க முக்காடு போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கும்”

  அவன் தனிமையில் இருந்தபோது ஒரு விசயம் புரிந்தது. அவனுடைய மனோதத்துவ நிபுணர் கூறியதுபோல் அவனுடைய பிரச்சினை இல்லை. திருமண பந்தத்தை தாண்டிய உறவை அவன் மனம் வெறுக்கிறது என்றார்… அவள் அவன் மனைவி அவளுடைய அருகாமையும் வெறுப்பைதான் தோற்றுவித்தது.   அவன் மனம் விரும்பாத பெண்ணிடம் அவனால் நெருங்க முடியாது என்று வேறு கூறியிருந்தார். அதுவும் தவறு… எல்லாவிதத்திலும் மதுமதியை அவனுக்குப் பிடித்திருந்தது. அப்போதும் நெருங்க முடியவில்லை… அவனுக்கு கவலையாக இருந்தது. இப்படியே சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் வாழ்க்கையை கடத்த முடியுமா…?

மீண்டும் தொலைப்பேசியில் மருத்துவரிடம் தொடர்பு கொண்டு விவாதித்தான். “இன்னும் சற்று பொறுத்திரு சத்யன். இப்போது ஒரு பெண்ணின் அருகாமையை  விரும்பும் அளவிற்கு உன் மனம் மாறி வருகிறதல்லவா? விரைவில் அனைத்தும் சரியாகிவிடும்” என்றார்.

அது எப்போது சரியாகி… அவன் மதுமதியை உரிமை கொண்டாட முடியும். இருவருக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத ஒருவன் வேறு இருக்கிறான். அவர்களுடைய உறவிற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று அவனுடைய  பத்தினி தெய்வமே நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட வாய்ப்புள்ளது மதுமதியை இழக்க அவன் மனம் மறுத்தது. ஆனால் விரைவிலேயே அவளை விட்டு அவன் ஓடப்போகும் சூழ்நிலை வரப்போகிறது என்று அவனுக்கு இப்போது தெரியவில்லை.

விஸ்வநாதனின் நண்பர் ஒருவர் மகன் திருமணத்திற்காக குடும்பமாக சென்றிருந்தனர்.. கோவிலில் அந்தத் திருமணம் நடைபெற்றது. அவனுடைய பிறந்த நாள் அன்று வந்திருந்த மலைமுருகன் கோவில்தான். திருமணம் சிறப்பாக நடைபெற்று முடியவும், பிரகாரம் செல்ல அனைவரும் கிளம்பினர். அன்று போலவே இன்றும் அந்த கிரானைட் பாறைகள் அவன் கவனத்தை கவர்ந்தது. ‘சாபக்கேடு’ என்று மதுமதி கூறியதும் நினைவிற்கு வந்தது. ஏன்? அவனின் பார்வை புரிந்து அருகில் வந்தவளிடம் கேட்டான்.

“அது ஒரு புவியியல் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, சத்யன். நாம் இருக்கும் இந்த மலை மணல்படிமங்களால் ஆனது. இந்த மலையை சுற்றி அமைந்துள்ள சிறிய குன்றுகள்தான் பாதுகாப்பு கவசம்போல் உள்ளன. அவை இல்லையெனில், மலைச்சரிவு ஏற்பட்டு இங்குள்ள –நம் ஊரையும் சேர்த்து- பத்து கிராமங்களும் அழிய வாய்ப்புள்ளது  மொத்தம் இருபதாயிரம் பேர் ஆங்காங்கே வசித்து வருகின்றனர். பூர்வீகக்குடிகள் வேறு. இதைவிட்டு செல்லவும் மாட்டார்கள். பாதுகாப்பு கவசமாகிய அந்த குன்றுகள் உண்மையில் விலையுயர்ந்த கிரானைட் கற்பாறைகள். தற்சமயம் அவற்றை அரசு குவாரி காண்ட்ராக்ட்டிற்கு விட்டுவிட்டது. வெட்டி தோண்ட ஆரம்பித்தால் மொத்த இடமும் அழிவை சந்தித்துவிடும். எனவேதான் சாபக்கேடு என்றேன்.” தொடர்ந்து,

“அரசின் இந்த முடிவை எதிர்த்து நாங்கள் ஒரு அமைப்பை தொடங்கி போராடுகிறோம்.  நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. நான் அதில் முக்கிய சாட்சி”

“ஏன்?,”

“ஏனெனில், இந்தப் போராட்டத்தை  நான்தான் ஆரம்பித்தது. இந்த விவரங்களை அனைவருக்கும் புரிய வைத்ததும் நான்தான்”

“நீ ஏன் இதில் கமிட் ஆனாய்?”

“இந்த புவியியல் அமைப்பின் சிக்கல்பற்றி எனக்கு ஒரு சர்வேயர் அங்கிள்  சொல்லியிருந்தார். இந்த குன்றுகள் இருக்கும்வரை இந்த மலைக்கு ஆபத்தில்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். நாங்கள் சிறுவயதில் இங்கு விளையாட வருவதுண்டு அப்போது இந்த மலையை அரசி என்றும் குன்றுகளை அவளுடைய பாதுகாவலர்கள் என்றும் உருவகித்து  நிறைய கதைகள் சொல்லுவார்.. இது பற்றி நிறைய சர்வே எடுத்து ஆராய்ச்சி செய்து ரிப்போர்ட்கூட சமர்ப்பித்திருந்தார்.”

“ஆனால், இது போன்று குவாரிகளுக்கு அனுமதி தருமுன் ஜியாலஜிக்கல் ரிப்போர்ட்டையும் பார்த்திருப்பார்களே…. நீ சொல்வது உண்மையென்றால், அத்தகைய ரிப்போர்ட் இங்கு முறைப்படி பதியப்பட்டிருக்கும்”.

“இல்லை, அது அலுவலக கோப்புகளில் இல்லை. நீண்ட நாட்களாக திட்டமிட்டு அவற்றை அப்புறப்படுத்திவிட்டு டம்மி ரிப்போர்ட் வைக்கப்பட்டு,. இந்த சதிவேலை நடந்திருக்கிறது என்று ஜட்ஜ் அங்கிள் சொல்கிறார். சட்டப்படி அவரால் இதில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. மேலும், அந்த சர்வேயர் அங்கிளும் ரிட்டையராகி மகனுடன் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இருப்பிடமும் தெரியாது. அவரை சாட்சி சொல்ல அழைக்க முடியாது.”

என்னவொரு சதி?. பத்து கிராமங்களையும் அதன் மக்களையும் அழித்து பணம் தேடும் முயற்சி. உண்மையில் கிரானைட் கற்களின் மதிப்பு அங்கு வசிக்கும் மனிதர்களின் வாழ்க்கையைவிட அதன் தொன்மையான வாழ்வியலைவிட பெரியதா என்ன? 

“இதற்குப்பின் யார் இருக்கிறார்கள் என்று தெரியுமா? அந்த மைன்  நிறுவனம் பற்றி தெரியுமா?”.

(அடுத்த வரியில் அவன் தலையில் இடிவிழும் அபாயம் இருப்பதை நமக்கு புரிந்த அளவிற்கு அவனுக்குப் புரியாமல் இந்த கேள்வியை கேட்டான்.)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.