“அந்த டார்ஜான் வேலையை உங்களைப் போன்ற கொரிலாதான் செய்ய முடியும். எனக்கு பழக்கமில்லை.” கொரிலாவா..? தேடித்தேடி திட்டுகிறாளே. அவளுக்கு அந்த முறை சரி… ஆனால் அவனுக்கு…? முதுகில் பட்ட காயம் இன்னும் வலித்தது. அவள் பின்னேயே சென்றான்.
அந்த கட்டிடத்தின் ஒரு ஜன்னலில் காலை வைத்து ஏற முயற்சித்தாள். அவன் அவளுக்கு உதவ கையை நீட்ட, அவள் மறுத்துவிட்டு மீண்டும் முயற்சித்து ஏறிவிட்டாள். அவளின் வீர சாகஸத்தை காணவா வந்தான்?. அவளின் பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு சிறிய வகை காமிரா ஒன்றை எடுத்தாள்.
எதையோ படம்பிடிக்கிறாள்!. அவள் புகைப்படம் எடுத்ததும். “கிளம்பலாம்” என்று குதித்து இறங்கினாள். மீண்டும் வேலியை தாண்டி வெளியேவரும்போது, “யாரோ நம்மை பார்த்துவிட்டார்கள்” அவனையும் சேர்த்துக் கொண்டாள். வேடிக்கை பார்த்தது தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே! அவனையும் சிக்கலில் மாட்டிவிடுவாள் போலிருக்கிறதே. என்று நினைத்தான்.
சட்டென்று அவனை இழுத்துக் கொண்டு குத்துக் காலிட்டு அமர்ந்து ஒரு புதரின் பின் மறைந்து கொண்டாள். ஒரு டார்ச் ஒளி அவர்களை கடந்து சென்றது. “இங்கு யாரும் இல்லை” என்ற குரல் தேய்ந்து மறைந்தது.
வீட்டிற்கு வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது, “நீ என்ன படம் பிடித்தாய்?”.
“அது ஒரு பப். கேளிக்கை விளையாட்டுகள் அங்கே நடக்கின்றன.”
“இதை முன்பே சொல்லியிருக்கலாமே. நான் சென்று டிக்கெட் எடுத்து வந்திருப்பேனே. நாம்தான் ஜோடியாக இருக்கிறோமே?”
“அது சட்ட விரோதமானது. மெம்பர்களுக்கு மட்டும் அனுமதியுண்டு. நம்மை உள்ளேவிட மாட்டார்கள்”
“சரி, உனக்கென்ன அங்கு வேலை?”
“மனிஷா தெரியுமல்லவா?”
“தெரியாது?”
“நம் திருமணத்தில் தங்க வண்ணத்தில் அனார்கலி உடை அணிந்து வந்தாளே… நீங்கள் பார்க்கவில்லையா?”
“இல்லை. நீ விசயத்தை சொல்லு.”
“அவள் ஒருவனிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி இப்போது காதலிக்கிறாள். அந்த ஃப்ராடு இங்கே கும்மாளமிடுகிறான் என்று தெரிந்து கொண்டேன். அதைத்தான் படமெடுத்தேன். அவளிடம் காட்டினால் அவனைப் பற்றி புரிந்து கொள்வாள்”
அவனுக்கு கடும்கோபம் வந்துவிட்டது. சமூக வலைதளத்தில் நடைபெறும் தகிடுதத்தங்கள் பத்திரிக்கைகளில் எவ்வளவு வந்துவிட்டன. இன்னும் கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் போய் விழத்தான் செய்வேன் என்று ஒருத்தி போகிறாளாம், அவளை இவள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவாளாம்.
“உனக்கென்ன பெரிய தாதா என்ற நினைப்பா?. இதில் தனியே வேறு கிளம்புகிறாய். உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்தாயா? ஒரு முட்டாளுக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் தேவையா?”
“அவள் முட்டாளாக இருப்பதால்தான் புத்திசாலியான நான் ரிஸ்க் எடுத்து புரியவைக்கிறேன். நட்பு என்பது கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதல்ல சத்யன். இறைவன் கருணையினால்தான் உறவும் நட்பும் உருவாகிறது. நாம் வாழும் காலத்திலேயே அவர்களும் இருப்பதே ஒரு பிணைப்புதானே. மனிஷா ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பாக பிறந்திருந்தால் எனக்கு தோழியாக இருக்க முடியுமா. நான், ரெமி மனிஷா மூவரும் சிறுவயதிலிருந்தே தோழிகள். காதல் கண்ணை மறைக்கிறது. அதற்காக அவளை அப்படியேவிட முடியாது அல்லவா? ஒரு நியாயம் செய்தே ஆக வேண்டும்தானே?” தீவிரமாக விளக்கினாள். ரெமியை அவள் காப்பாற்றிய விசயம் அவன் நினைவிற்கு வந்தது.
“சத்யன், நம் சக மனிதர்களிடம் காட்டும் அன்பும் அக்கறையும் நம்மை வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை காட்டிவிடும். நேசிக்க தெரிந்த இதயம் மட்டுமே உண்மையாக சுவாசிக்கிறது என்பதை நீங்கள் படித்ததில்லையா?.” தலையை உயர்த்தி அவனை கூர்ந்து நோக்கி கேட்டாள்,
சத்யனுக்கு அப்படியே அவளின் தாமரை முகத்தை இரு கைகளால் ஏந்தி, ‘முட்டாள் பெண்ணே உன் சக மனிதர்கள் சிலர்தானே உன்னை நார் நாராக கிழித்துப் போட்டனர். இன்னுமா இந்த உலகத்தின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?’ என்று கேட்க வேண்டும் போலிருந்தது.
“நான் ஏன் இவ்வளவு பேசுகிறேன் என்று புரிகிறதா?. நீங்கள் இல்லாதபோது உங்கள் குடும்பத்தினரின் நிலையை கண்ணால் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு நொடியும் உங்களை நினைத்துக் கொண்டேதான் இருந்தார்கள். இனி நீங்கள் அவர்களை பிரியக் கூடாது”. அவளின் நியாயமான வேண்டுகோளினால் அசந்து போன அவன் வாய்மூடி மௌனியாகி, தலையை அசைத்து ஒப்புதல் தந்தான். சற்று பொறுத்து. குரலை சீர் செய்து கொண்டு,