(Reading time: 149 - 298 minutes)

“நான் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வாசலுக்கு சென்றபோது நீதான் ஜட்ஜ் பெண்ணா என்று கேட்டார்கள். அருகில் வேறு யாரும் இல்லை. கடை திறக்கவில்லை. அதற்குள் மற்றொருவன் அந்த பொண்ணு டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறது.எனவும், நான் அவனை திசை திருப்ப நான்தான் ரெமி” என்று கூறிவிட்டேன். அவளுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக் கூடாது, மேலும் இது போன்ற சூழலை சமாளிக்கவும் தெரியாதல்லவா”

“ஆமாம், உங்கள் அளவிற்கு சமாளிக்க அவளுக்குத் தெரியாதுதான். நீங்கள்தான் வீரசூர மங்கையர் திலகமாயிற்றே.”. இது சத்யன்

“ஒன்றும் ஆகவில்லைதானே. நீங்கள்தான் வந்துவிட்டீர்களே”

“இப்படியே உன்னை ஒவ்வொருத்தனும் கடத்திக் கொண்டே சென்றால்,  விரைவிலேயே சதமடித்து விடுவாய். விழாதான் எடுக்க வேண்டும். போதும். இத்துடன்  நிறுத்திக் கொள்.”

“நல்லவேளையாக சொல்லிவிட்டீர்கள். இல்லையென்றால், நானே ஆள் வைத்து என்னை கடத்தச் சொல்லி  நூறாவது  விழா எடுத்திருப்பேன்.

“ஜோக்கா… நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா?” அங்கு வந்த விஸ்வநாதன் கூறினார். மதுமதியின் கைகளைப்பற்றி,

“உன்னை உயிருடன் பார்ப்பேனா என்றாகிவிட்டது. எனக்கு நீ வேறு ரெமி வேறு இல்லையம்மா. உனக்கு ஏதாவதென்றால், தாங்கிக் கொள்ள முடியாது. என்றைக்கு நீ என் ரெமியின் உயிரை காப்பாற்றினாயோ என்றிலிருந்தே நீயும் என மகள்தான். புரிகிறதா..”

“ரெமியின் உயிரை காப்பாற்றினாளா…!”.

“கல்லூரியில் சுற்றுலா சென்றபோது ரெமி கால்தவறி ஒரு மலைசரிவில் உருள, இவளும் அவளை பிடித்துக் கொண்டு தொங்கியிருக்கிறாள். உதவிக்கு ஆள் வந்து சேர இரண்டு மணி நேரமாகியும் ரெமியின் கையினையும்  விடவில்லை, பிடித்துக் கொண்டு தொங்கிய மரக்கிளையையும் விடவில்லை. சற்றும் அயராமல் உதவி வரும்வரை முயற்சித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு பிரியம் இருந்தால் இவ்வாறு செய்ய முடியும்”.

“பாராட்டத்தக்க விசயம்தான். இதுபற்றி நீ எனக்கு கூறவேயில்லை, ஏன் மது?” என்று அவன் கூற,

“சொன்னால் உடனேயே விரலிருக்கும் மோதிரத்தை கழட்டி தந்துவிடுவீர்களோ என்ற பயம்தான்.” என்று கேலி செய்து சிரித்தாள், அன்று அவன் உணர்ச்சி வசப்பட்டு  தங்கச்சங்கிலியை கழட்டித் தந்ததை சொல்கிறாள்.!

“மோதிரத்திற்கான அப்ளிகேஷனா?. . வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது இதுதானோ” என்று சிரித்துவிட்டு தந்தையுடன் பேசிக் கொண்டே நகர்ந்துவிட்டான்.

“மது, நீ போய் உடையை மாற்றிக் கொண்டு வா. நான் உணவெடுத்து வைக்கிறேன்”

அங்கே விக்ரமும் ரெமியும் மட்டுமே இருந்தனர். சங்கடமாக உணர்ந்தான். “நான் வருகிறேன்” என்று விக்ரம் கிளம்பிவிட்டான். முதுகில் கூரிய பார்வை அம்புகள் பாய்வதை அவனால் உணர முடிந்தது.

றுநாள் சத்யன் கையில் பார்சலுடன் வந்தான். தங்கையிடம் ஒன்றை தந்துவிட்டு, மதுமதியிடம் மற்றொன்றை நீட்டினான். அதில் வேலைபாட்டுடன் கூடிய லெஹங்கா இருந்தது.

தன்னுடைய பார்சலை பிரித்த ரெமி குதித்தாள். “ஹை, இந்த கலர்ல லெஹங்கா வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ரொம்ப நன்றிண்ணா”. அம்மாவிடம் காட்ட ஓடிவிட்டாள்.

“ரொம்பவும் விலையுயர்ந்தது போலிருக்கிறதே. இப்போது இது எதற்கு…” என்று மதுமதி கேட்டாள்.

“அந்த கடை வாசல் வழியே சென்றபோது ஷோகேஸில் இந்த உடையை பார்த்தேனா… உன் நினைவு வந்துவிட்டதா…   நீ இதில் அழகாக இருப்பாய் என்று நினைத்தேனா….”

“ரொம்பவும் இழுக்க வேண்டாம், அடுத்த வாரம் பார்ட்டி இருப்பதாக அத்தை கூறியிருந்தார்கள். அதற்குத்தானே….பார்ட்டி முடிந்ததும் திருப்பித் தந்துவிடுவேன்” என்று  கூறிவிட்டு, அவனுடைய பதிலை எதிர்பாராமல் மாடிக்கு சென்றுவிட்டாள்.

உண்மையில் அவள் நினைவுவந்துதான் வாங்கினான், ரெமியை காப்பாற்றிய வீரத்திற்கு பரிசு தர வேண்டாமல்லவா., ஆனால் வாய்விட்டு சொல்ல முடியவில்லை. அவளிடம் இருந்து விலகி நிற்கவே நினைத்தான். எப்போது வேண்டுமானாலும் அவளுடைய காணாமல் போன காதலன் வரலாம்… அவன் கையை பிடித்து இவளும் செல்ல  நேரிடலாம் என்று எண்ணினான்.

ரு வாரம் கழித்து…

லெஹங்காவிற்கு ஏற்ற வகையில் மற்ற ஆபரணங்களை தேடி அலைந்து வாங்கி, ப்யூட்டி பார்லரில் ஃபேஸியல் செய்து கொண்டு பெண்கள் இருவரும் பார்ட்டிக்கு தயாராகிவிட்டார்கள். அவன் விக்ரமை அழைக்க,

“வாருங்கள், விக்ரம். தயங்க வேண்டாம். அங்கு நீங்கள் விரும்பும் யாராவது வரலாமல்லவா. மனம் மகிழ்வதற்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கும்.” ரெமி குரலில் இருந்த கோபம் சத்யனுக்கு புரிந்தது. நன்றாக படட்டும்…. அவளை பயன்படுத்த திட்டம் போட்டானல்லவா?.

 சட்டென்று ரெமி திரும்பி நடந்தபோது அவனுக்கு அவளுடைய வேதனையும் புரிந்தது. ‘குட்டிம்மா, காதல் என்று ஒன்று இல்லவேயில்லை. எல்லாம்  சமயசந்தர்ப்பம் பார்த்து கணக்கு போட்டு வருவதுதான். இதை நீ புரிந்து கொண்டு மனதை திடப்படுத்திக் கொள்’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.