அன்று காலையில் சத்யன் சென்னையிலிருந்து திரும்பியிருந்தான் மதுமதிக்கு அவன் தீவிர சிந்தனையில் இருந்தது புரிந்தது. என்ன விசயமாக இருக்கும்….?. விஸ்வநாதன் கோர்ட்டிற்கு செல்ல கிளம்பி வந்தார். அவரும் அப்படித்தான் வந்தார். இதென்ன குடும்ப வியாதியா…? என்று மதுமதி யோசித்தாள். சத்யனே அவரிடம் பேச்சை தொடங்கினான்.
“அப்பா, என்னுடைய நண்பர்கள் என் மனைவியை அறிமுகம் செய்ய சொல்கிறார்கள். அதாவது பார்ட்டி தரவேண்டுமாம்”
“சரி, தந்துவிடு…”
“இங்கல்ல, சென்னையில் தரவேண்டுமாம்…”
“சரி தரலாமே…”
“அதற்கு நீங்கள் அனைவரும் அங்கு வரவேண்டும். உங்களுக்கு ஒத்துவரும் நாட்களை சொன்னால் நான் ஏற்பாடு செய்துவிடுவேன்”
“எனக்கு அடுத்த வாரம் தோதுபடும். சீதாவிடம் கேட்டு சொல்கிறேன்.”
“ஒரு வார்த்தைக்கு பத்து வார்த்தை பேசுவீர்கள்.. என்ன ஒன்றுக்கு ஒன்று என்று விரதமா?”.
“இன்றைக்கு ஒரு முக்கியமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல வேண்டும். அது… சிறுமிகளை கிட்நாப் செய்து கொலை செய்த வழக்கு. உனக்குத் தெரியும்தானே….”
“ஆமாம், இருவர் மட்டும் சிக்கிக் கொண்டனர். மற்ற இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு எழுத வேண்டிய நிலையில் இருக்கிறது என்ன தண்டனை…”
“சந்தேகமில்லாமல் தூக்கு தண்டனைதான். சிறுகுழந்தைகள் என்றும் பாராமல்… பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து கொலை செய்த கும்பல் அல்லவா…? வாழவே தகுதியில்லாத மிருகங்கள்…” என்றார்.
“அந்த தீர்ப்பை தந்துவிட்டால்… எனக்கு ஓய்வு கிடைத்துவிடும். என் நீதிபதி வாழ்க்கையில் நான் தரப்போகும் கடைசி தீர்ப்பு அது.”
“சரியாக முடிப்பீர்கள் அப்பா…”
“எனக்கு ஒரு மிரட்டல் வந்துள்ளது. அந்த கேங் சம்பந்தப்பட்ட யாரோ வெளியில் இருக்கிறார்கள். நான் தீர்ப்பு கூறும்வரை எந்த தடையும் வந்துவிடக் கூடாது. இது மட்டுமே என்னுடைய கவலை”
“கண்டிப்பாக நல்லபடியாக முடியும்.“ என்று அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே, வெளியே செல்லத் தயாரான நிலையில் மதுமதி வந்தாள்.
“நான் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சென்று மாதப்பொருட்களை செக் செய்து வாங்கி வந்துவிடுகிறேன்.”
“நானும் வரவா” என்று சத்யன் எழுந்திருக்க,
“இல்லை இரண்டு தெரு தள்ளிதான் கடை. நீங்கள் அங்கிளுடன் பேசிக் கொண்டிருங்கள். நான் உடனே வந்துவிடுகிறேன்” என்று கிளம்பினாள்.
அவனுக்கும் தந்தையிடம் பேச வேண்டிய விசயங்கள் இருந்ததால் வீட்டிலேயே தங்கிவிட்டான். கணக்குப்படி அரைமணி நேரத்தில் வரவேண்டியவள் ஒரு மணி நேரமாகியும் திரும்பவில்லை. டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சென்றால், அவள் வரவேயில்லை என்றனர். ஒருவேளை பாஸ்கர் அங்கிள் வீட்டிற்கு சென்றிருப்பாளோ என்று விக்ரமிற்கு ஃபோன் செய்தான். அங்கும் வரவில்லை. விக்ரமும் பதறிப்போய் வீட்டிற்கு வந்துவிட்டான்.
அப்போது விஸ்வநாதனின் அலைப்பேசிக்கு ஒரு செய்தி வந்தது. அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது, மதுமதி கடத்தப்பட்டிருக்கிறாள்.
“மறுபடியுமா?” என்று சத்யன் தலையில் கை வைத்தான். இப்போது ஒரு வீடியோ கால் வந்தது. அதில் மதுமதியின் நிலை தெரிந்தது.
“ஜட்ஜ் சார், நீங்கள் சொல்லப்போகும் தீர்ப்பு எங்களுக்கு சாதமாக வரும்வரை உயிருக்கு ஆபத்து இல்லை. பார்த்துக் கொள்ளுங்கள். ஏய் வாயை திறந்து அவரிடம் கெஞ்சு” என்று அவளை ஒருவன் மிரட்ட,
“அப்பா ப்ளீஸ் நீங்கள் என்னைபற்றி கவலைப்படாதீர்கள். அவங்களை விடாதீர்கள். தூக்கில் போடுங்க” அவள் முடிக்கும் முன்னே அவளை அடித்தான். அவள் ஏன் அவரை அப்பா என்கிறாள்…சத்யன் யோசிக்கும்போதே…
“ஏய் உன் பெண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி. இப்ப அவள் கதறப் போகிறாள் பார். அப்போது உனக்கு நாங்கள் யார் என்று புரியும்.”. ஆனால், மறுபடியும் அழுத்தமாக,
“என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அப்பா. அவன்களை விடாதீங்க” அவளின் அலறல் கேட்டது. சகித்துக் கொள்ளமுடியாத நிலையில் சத்யன் இருந்தான். அதற்குள், சீதாவின் மூலம் அபிஷேக்கிற்கும் விவரம் தெரிந்து அங்கு வந்துவிட்டான்.
“தொடர்ந்து பேசுங்கள் சார். நான் இந்த வீடியோ அழைப்பின் சோர்ஸை கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறேன். அதன் மூலம் அவர்களின் இருப்பிடத்தை காண முடியும்.” என்றான்.
சத்யனுக்கு ஒன்று புரிந்தது. அது ரெமிக்கு வைக்கப்பட்ட குறி. இவள் சிக்கியுள்ளாள். நீதிபதியின் மகள் அவள்தான் என்று ஆள்மாறாட்டம் செய்து கொண்டிருக்கிறாள். அவளை காப்பாற்றும் வழியை விரைவில் கண்டறிய வேண்டும். வீடியோவில் கூர்ந்து நோக்கினர். ஏதாவது பின்னணியில் அடையாளம் தெரிகிறதா..?