(Reading time: 149 - 298 minutes)

“புல் தின்னும் புலியா… எந்த புராணத்தில் போட்டிருக்கிறது. எனக்குத் தெரியாதே?”

“உங்கள் மருமகளிடம் கேளுங்கள். அவள்தான் கூறினாள்” என்று கை காட்ட, அவன் மதுமதியை மருமகள் என்று கூறிய வார்த்தையும், இங்கேயே இருக்கப்போவதாக கூறியதும் அவரை மகிழ வைத்தது. “என்னம்மா, மருமகளே…” என்று அழைத்தார்.

“அது கிரேக்க புராணம் என்று நினைக்கிறேன். சரிவர தெரிந்துகொண்டு சொல்கிறேன் மாமா” என்று முடித்தாள்.

கோவிலில் மீண்டும் மாலை மாற்றி  அவளை கைப்பிடித்து சன்னிதியை சுற்றிவர சொன்னார்கள். அதனையும் செய்தான்.  அவனுடைய கைக்குள் அவளின் கையல்ல அவளின் எதிர்காலமே இருப்பதுபோல் தோன்றியது. நெற்றிறியில் திலமிட்ட போது ஏனோ தெரியவில்லை அவனுக்கு சிலிர்த்தது. அந்த குங்குமம் தீட்டியிருந்த மஞ்சள்முகப் பெண் அவனின் மனைவி. ஒருவரை ஒருவர் பாராமல் பெரியவர்கள் தேர்வு செய்து   நடத்தப்படும் இந்திய திருமணத்தின் மீது அவனுக்கு சிறிது நம்பிக்கைகூட வந்தது. இது போன்ற பலவிதமான உணர்வுகளை தோற்றுவித்து உறவுகளை பலப்படுத்தத்தான்  இத்தனை சம்பிரதாயங்களோ என்று அவனுக்குத் தோன்றியது.

கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்திருந்தபோது ரெமியும் நித்தியும் அவளை கேலி செய்தனர். “என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை.  கையில் காபியுடன் அடக்கமாக நடந்து… முதலில்  உங்களுக்கு காபி போடத் தெரியுமா?.... காலை வாரிவிடாமல் காலில் விழுந்து வணங்கத் தெரியுமா? அண்ணி….!”.

“காபியில் உப்புதானே போட வேண்டும்…” என்று மதுமதி யோசிக்க,

“மறந்துவிட்டேன்!. என்னுடைய டயட்டீசியன் காபியே குடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.”   என்ற சத்யன், நித்யனின் கண் சிமிட்டலை தொடர்ந்து,

“அப்படியே மதிய உணவும் வேண்டாம் என்றார்… ம்.. இரவு உணவுகூட… ஐயோ.. என்னால் அவ்வளவு நேரம் பட்டினியாக இருக்க முடியாதுடா..! வேண்டுமானால் ஆதிகாலம் போல இலைதழைகளை தின்று இயற்கை உணவிற்கு மாறிவிடவா?.”  மற்றவர் சிரிக்க, மதுமதியோ,

“அவ்வளவு பயம் வேண்டாம். அத்தைதான் சமைப்பார்கள் ஒரு ஆத்திர அவசரத்திற்குத்தான் நான் செய்யும்படியாகும்”

“ஆத்திர அவசரத்திற்காக நான் உயிரைவிட முடியாதும்மா தாயே.”

“நாம் செத்து போகும்  அளவிற்கு மோசமாக இருக்காது. நாக்குதான் செத்து போகும் அண்ணா…”

“இனி என் கையால் உனக்கு காபிகூட கிடைக்காது. அத்தை மருத்துவமனையில் பிஸியாக இருக்கும்போது பச்சை தண்ணீரை எடுத்துக் குடி.”

“ஏன் அது உன் காபியைவிட மேலானதா?. அந்த பாக்கியம் அவனுக்கு மட்டும்தானா…” தம்பியை பார்த்து ஹைஃபை தர அவனும் சேர்ந்து கொண்டான்.

அப்போது சற்று தொலைவில் ஒருவன் மதுமதியை பார்த்து சோகமாக நின்றான். சத்யன் அதனை கவனித்துவிட்டான். “அவளுடைய காணாமல் போன காதலனா…?. அவனின் பார்வையில் பட்டவனை அவள் அடையாளம் கண்டு கொண்டு

“அது ரகு அத்தான்.” என்று அவனைப் பார்த்து சிரித்தாள். திடுக்கிட்ட அவன், அவளருகில் மின்னல் விரைவில் வந்து நின்றான். முதல் நாளே சத்யன் தன்னுடைய திருமணம் கேலிகூத்தாகி விடுமோ என்று பயந்தான்.

“இது ரகு அத்தான்… இவர்தான் சத்யசந்திரன், என் கணவர். பேசிக் கொண்டிருங்கள் நான் அத்தையை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்று அறிமுகம் செய்துவிட்டு, சீதாம்மாவை தேடி விலகினாள். சத்யனை பார்த்து அவனோ சோகமாக,

”வாழ்த்துக்கள்’ என்றான்

“ஏன் அத்தனை சோகம்…?” என்று சத்யன் வினவ,

“நான் மணந்திருக்க வேண்டியது. உங்களுக்கு லக்கி பிரைஸ் அடித்துவிட்டது”. என்றான். இவன் என்ன முட்டாளா? இப்படித்தான் புதிதாக திருமணம் ஆனவனிடம் பேசுவார்களா? சத்யன் குழம்பினான்.

“ஏன் உங்களுக்கு பிரைஸ் அடிக்கவில்லையா?”

“இல்லை பேய்தான் அடித்தது. ஜாக்கிரதையாக இருங்கள் ப்ரோ. மதுவிற்கு பிடிக்காததை நாம் செய்தால் கையை நீட்டி அடித்துவிடுவாள்.”

“நீங்கள் என்ன செய்தீர்கள் ப்ரோ…?”

“உன்னை காதலிக்கிறேன் என்று கூறினேன்” அவன் பழைய நினைவில் கன்னத்தை தடவிக் கொண்டான். அதற்குள் மதுமதி வர,

“இவர் உன்னை காதலித்தாராமே/” என்று போட்டுக் கொடுக்க, மதுவின் விழிகள் சிவந்தன. பயந்துபோன ரகு அவனிட்ம் விடை பெற்று திரும்பினான்.

“ஹலோ இருங்கள், ப்ரோ. வீடுவரை வந்து செல்லலாமே? ஒரு கப் காபி குடிக்கலாமே” என்று அவன் அழைக்க, மதுவின் முறைப்பை கண்டு அவ்விடம் விட்டு அகன்றான்..

“இப்போது எதற்கு அவனுக்கு காபி அழைப்பை விடுக்கிறீர்கள்?” மது கோபிக்க,

“அவனுக்கு கன்னத்தில் அறைவிடாமல், ஒரு கப் காபி தந்திருந்தால்… கோமா ஸ்டெஜிற்கு சென்றிருப்பான். இப்படி உளறிக் கொண்டு நின்றிருக்க மாட்டான்” அவன் கலாய்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.