(Reading time: 149 - 298 minutes)

“மிக்க நன்றி சத்யா… மதுமதிக்கு ஒரு பாதுகாப்பான வாழ்வை தந்துவிட்டாய். அவள் மிகவும் நல்ல பெண். அந்த மோசமான சம்பவம் மட்டும் நடைபெறவில்லையெனில்…”

“அதைப்பற்றி இப்போது பேச வேண்டாமப்பா. அவளுக்கு யாரோ எதிரிகள் இருப்பதாக கூறினீர்களே அது பற்றி விசாரித்தீர்களா…?”

“இல்லை… இன்னும் இல்லை. கிடைத்த ஒருவனும் கோமாவில் இருக்கிறான். அப்படியே சிக்கல் நீடிக்கிறது. சரி,  நான் போய் கோவிலுக்கு செல்லும் ஏற்பாட்டை கவனித்து வருகிறேன். என்று அவ்விடம் விட்டு அகன்றார்.

“ம்… மது மதுன்னு கூப்பிட்டுவிட்டு அண்ணி என்றழைப்பது சிரமமாக உள்ளது” என்று புலம்பியபடியே மதுமதியுடன்   நித்யன் வந்தான். 

“இதற்கே சிரமப்பட்டால், என் நிலைமையை என்ன சொல்வது..’ என்று சத்யன் சேர்ந்து கொள்ள,

“அதற்குத்தான் உங்கள் அறையில் ஒரு பெட்டி  நிறைய பஞ்சு ரோல்களை வைத்துள்ளேன். காதை அடைத்துக் கொள்ள உதவும்.  நான்… உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன் அண்ணா” என்று நகர, அவன் எதிர்பார்த்த தனிமை சற்று நேரம் கிடைத்தது.

“என்ன, முகம் முழுவதும் பல்பு போட்டிருக்கிறது. காலைவரை ஃப்யூஸ் போன பல்பு போலிருந்தாய்…?”

“ஆமாம், புதிதாக திருமணம் ஆன பெண் அழுது வடிந்து கொண்டிருந்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். என் புகுந்தவீட்டிற்கு அவமானம் அல்லவா?” இயல்புபோல் பேசினாலும் அவளையும் மீறி ஒரு சிரிப்பு உதடுகளுக்கிடையில் ஒளிந்துகொள்ள முயற்சித்தது. ஏதோ இருக்கிறதே… அவன் குழம்பினான்.

“என்னுடைய கையெழுத்தைப் போட்டு பத்திரம் தயார் செய்துவிட்டாயா?”

“பத்திரமா… அது தேவையேயில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.”

“ஏன்….? நம் திருமணத்திற்கு வந்திருந்த முப்பதுமுக்கோடி தேவர்களும் ஏழேழு ஜென்மத்திற்கும் சேர்த்து வைத்து  செம்மையாக ஆசிர்வாதம் செய்துவிட்டார்களா?

“ஆமாம்… “ என்று சொல்லும்போதே ஒரு குபீர் சிரிப்பு அவளுக்கு கிளம்பியது.

“என்ன சிரிப்பு… “என்று கேட்டபடி அங்கே வந்த சீதாம்மாவிடம்,

“ஒன்றுமில்லை அத்தை, புல் சாப்பிடும் புலியைபற்றி கேள்விபட்டதிலிருந்து இப்படித்தான் சிரிப்பு வருகிறது.   நான் புலியை மேன்-ஈட்டர் என்று நினைத்து பயந்துபோனேன். அது சைவப்புலியாம். அதுக்கு ஒரு புல்லுகட்டு போதுமாம். எப்பூடி?” இது அவனை குறிப்பிட்டு கூறிய வார்த்தைகள் என்று புரிந்தது. இவளுக்கு என்ன தெரியும்?

“சீதாம்மா, எனக்கு தலைவலிக்கிறது. ஒரு கப் காபி கிடைக்குமா?” என்று சத்யன் கேட்க,

“இதோ கொண்டு வருகிறேன் சத்யா. காலையிலிருந்து ஓய்வு இல்லாமல் இருக்கிறாயல்லாவா?” அவர் அவ்விடம் விட்டு அகல,

“நீ என்ன சொன்னாய்.?”

“உண்மை எனக்குத் தெரியும் சார். ஒருத்தி எனக்கு சொல்லிவிட்டாள். உங்களுடைய ரகசியம்…  தெரிந்துவிட்டது.. எனக்கு எப்படி இந்தத் திருமணம் பாதுகாப்பு கேடயமோ அதுபோல் உங்களுக்கு மானம் காக்கும் வாள்…சரிதானே”.

“அதனால்..?”

“அடிப்படையே சரியில்லாத திருமணத்திற்கு எப்போது வேண்டுமானாலும் இருவரும் விவாகரத்து வாங்கிக் கொள்ள முடியும்.”

“லா பாயிண்ட்…? ஒரு ஃபோன் காலை இப்படி ஒரேயடியாக நம்பக்கூடாது. ஏனென்றால் இந்த புலி நரமாமிசம்தான் சாப்பிடாது. ஒருவேளை புல்லுகட்டை மேயலாம் அல்லவா…?. ஒரு கதையில் நமக்கு என்ன ரோல் என்று தெரியாமல் ஆட்டம் போடக்கூடாது.” புருவம் தூக்கி அவளை மிரள வைத்தான்.

“விவாகரத்து பத்திரம் தேவைப்படுமா என்று யோசித்துக் கொள்”

அவளுடைய முகம் போன போக்கை பார்த்து, “புலியாம்… புல்லுகட்டாம்…. என் கிட்டேயா?. ஆனால், இந்த பயம் அது எனக்கு பிடிச்சிருக்கு…” என்று கலாய்த்தான். அவனையா கேலி செய்கிறாள். இனி அவனிடம் வசமாக சிக்கிக் கொண்டாள்.

அப்போது அங்கு வந்த விஸ்வநாதன் “சத்யா, நீ எப்போது கிளம்புகிறாய் என்று சொல். உன் பிறந்த நாள்வரை இங்கிருப்பாய்தானே?.”

“அப்பா, என் பிறந்த நாள் மூன்று நாட்களில் வருகிறது. இருப்பேன். அதற்கு பிறகும் இருப்பேன். இனி எப்போதும் இங்கேயே இருக்கக்கூட செய்வேன். அவ்வப்போது ஊருக்கு சென்று தொழிலை கவனித்துவிட்டு திரும்பினாலும் திரும்பிவிடுவேன்.”. விஸ்வநாதனின் பின் நின்றவளின் திகைத்து விரிந்த விழிகளைப் பார்த்தவன்,

“கிருஷ்ணரின் கண்களில்தானே உலகமே தெரிந்தது” என்றான்.

“இல்லையே, கிருஷ்ணரின் வாய்க்குள் தெரிந்தது என்பார்கள். நீ புராணம்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் பதிலளிக்க,

“ஆம் அப்பா, புராணம் இதிகாசம் படிக்க வேண்டும். அப்படியே இந்த புல் தின்னும் புலியை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.