இரண்டே நாட்களில் சத்யசந்திரனுக்கு அந்தப் பெண்ணின் நினைவு வந்துவிட்டது. ஒரு வாரம் போல உண்ணாமல் உறங்காமல் அவள் அருகிலேயே அமர்ந்து காப்பாற்றியிருக்கிறான் அல்லவா? அவள் எப்படியிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள விரும்பினான். இதற்குமேல் அபிஷேக்கிற்கு இந்த விவரம் தெரிய வேண்டாம் என்றும் நினைத்தான். எனவே யாரிடமும் தெரிவிக்காமல் காரை எடுத்துக் கொண்டு வனமலைக்கு சென்றான். அங்கே சீதாம்மாவின் மருத்துவமனைக்குள் சென்று அவளைத் தேடினான்.
இரண்டாவது தளத்தில் அவசரசிகிச்சை பிரிவில் அவளைக் கண்டுவிட்டான். அதோ அறையின் ஜன்னல் வழியே அவள் தெரிந்தாள். எழுந்து உட்காரும் நிலையில் இருந்தாள் நோயாளிகளின் யூனிஃபார்மாகிய ஊதா நிற ஆடை அணிந்திருந்தாள்.. ரத்தம் அதிகமாக வெளியேறியிருந்ததால், வெளுத்திருந்த அந்த முகம் ஏனோ அவனை கவர்ந்திழுத்தது. கண்ணிமைகள் சோர்வுடன் பாதி மூடியிருந்தன. பாதி திறந்த சிப்பியைப்போல தோற்றமளித்து மேலும் அழகை கூட்டியது.
“உனக்கு ஒன்றும் ஆகாது. நீ விரைவிலேயே உன் குடும்பத்துடன் சேர்ந்துவிடுவாய். என் தந்தை அதனை பார்த்துக் கொள்வார்.” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். இன்னும் சற்று நேரம் நின்று அந்த ஒப்பனை ஏதும் இல்லாமல் அழகு பூத்திருந்த அந்த முகத்தைக் காண விரும்பினாலும், யாரோ வரும் காலடி ஓசை கேட்கவும் விரைந்து வேறுபக்கமாக வெளியேறினான்.
அடுத்த முறை அவன் அங்கு சென்றபோது அவளை டிஸ்சார்ஜ் செய்திருந்தனர். இனி வேறு ஏதாவது செய்துதான் அவளை பார்க்க வேண்டும். பெற்றோரிடமிருந்து விலகி பழகியிருந்த மனம் முரண்டு பிடித்து மறுத்தாலும், ஏதோ ஒரு உணர்வு அவனை தரதரவென இழுத்துக் கொண்டு சென்றது. அவனுடைய வீட்டிற்குல் மறுபிரவேசம் செய்ய வைத்தது! இப்போது கல்யாண காட்சியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது!.
அது சரஇ இந்த திருமண முடிவு வேறு யாரையும் பாதிக்கவில்லையா…. பாதித்ததே… பாஸ்கரிடமும் விக்ரமிடமும் இதனை விஸ்வநாதன் தெரிவித்தபோது, குழப்பமாக பார்த்தனர்.
“அந்தப் பெண் தலையில் இன்னும் என்ன எழுதியிருக்கிறதோ?” என்று பாஸ்கர் புலம்பினார்.
விக்ரமிற்கோ சூழ்நிலையை தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவனின் ஒன்றுவிட்ட தங்கை என்றாலும், சிறுவயது முதலே அவளிடம் பாசம் இருந்தது. இப்போது அவள் வாழ்க்கையில் நடக்கும் நடக்கப்போகும் விசயங்கள் அவனை கவலை கொள்ள வைத்தன.
அந்த சத்யசந்திரனை பற்றி அவன் கேள்விபட்ட விசயங்கள் அத்தனை சிறப்பானவையல்ல. அவனுக்கு கண்டதும் காதல் என்பது ஒரு பொழுதுபோக்கு மாதிரிதான். ஜான்வி… சுனிதா… அலியா… தனவர்சினி… எல்லாமே பாதியில் முறிந்து போன கதைகள். காதல் பிரச்சினையில் சிக்கியபின் மதுமதி மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த முடிவிற்கு ஒப்புக் கொண்டாளோ. என்று தோன்றியது. ஒரு அண்ணனாக அவளுக்கு அவன் இதைத்தான் செய்ய முடியுமா?. அவளிடம் பேசிப்பார்க்கலாமே?. அவளிடம் சென்றான்.
“ஆர் யூ மேட்! இப்போது இந்த முடிவு தேவையா…? மது. எல்லாவற்றிலும் அவசரப்பட்டுதான் முடிவெடுப்பாயா?. இப்போதுதான் ஒரு சிக்கலில் இருந்து மீண்டுள்ளாய். அதற்குள் இவனை நம்ப வேண்டுமா?. ஒரு நல்ல முடிவு செய்வேன் என்று என் மேல் நம்பிக்கையில்லையா?” அவன் தங்கை காதல் சிக்கலில் மாட்டியதால்தான் இப்படி ஆனது என்று எண்ணியதால் அவ்வாறு பேசினான். தொடர்ந்து,
“உனக்கு சத்யனை பற்றி முழுவிவரம் தெரியாது. ப்ரொப்போஸ் பண்ணுவதும் ப்ரேக்-அப் பண்ணுவதும் அவனுக்கு எத்தனை எளிது தெரியுமா?. தொடுவதும் விடுவதும் அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. இந்த திருமணம்கூட எப்போது வேண்டுமானாலும் நின்று போகலாம்”
“நான் சத்யசந்திரனை நம்பி முடிவெடுக்கவில்லை அண்ணா!. ஜட்ஜ் அங்கிளை நம்பியே ஒப்புக் கொண்டேன். திருமணம் நடக்கிறதோ இல்லையோ இந்த வீட்டு மருமகளாக அத்தையும் மாமாவும் எனக்குத் தேவையானதை செய்வார்கள் என்பது உறுதி. என் எதிர்காலத்திற்கும் அது நல்லது. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்” என்றாள்.
தங்கையின் உறுதி புரிந்து மறுபேச்சு பேசாமல் அரைகுறை மனதுடன் அவ்விடம் விட்டு வெளியேறினான். ஆனால், அவன் தங்கையின் நல்வாழ்விற்காக வேறு ஒரு திட்டத்தை தீட்டினான்.
அவ்விருவரின் உரையாடலை கேட்ட இன்னொருவன் பொருமிக் கொண்டிருந்தான். அது சத்யசந்திரன்தான்! தொடுவதாம்… விடுவதாம்… ஒரு மாதிரி வாழ்க்கை ஓடத்தை கரை சேர்க்கலாம் என்று நினைத்தால், அதனை ஓட்டை படகாக்க முயற்சிக்கிறானே? ஒவ்வொரு முறையும் அவன் தேடிய பெண் கிடைக்காமல் தோற்றுபோய் திருமண ஐடியாவை கைவிட்டது தவறா? எதுவும் அவன் முறித்துக் கொண்டதில்லை, அந்த பெண்கள்தான் பேயை பார்த்ததுபோல் அவனைக் கண்டு ஒளிந்து கொள்கிறார்கள். என்ன விஷயம்?
அது ஒரு அதிர்ச்சியான ரகசியம், எல்லாவகை மருத்துவ பரிசோதனைகளிலும் அவன் மனதளவிலும் உடலளவிலும் நலமாக இருப்பதாக முடிவுகள் வந்தாலும், அவன் ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதற்கு விடை தெரியவில்லை.