(Reading time: 149 - 298 minutes)

அவர் பாதர் வில்லியம்ஸ், வெனிசுலாவில் மனோதத்துவ நிபுணராகவும் இருந்தார். தானாகவே முன்வந்து, இரவு பகல் என்று பாராமல் அருகிலேயே இருந்து அவனுக்கு உணர்வு தப்பிப்போகாமல் பார்த்து அவனுக்கு நினைவு திரும்ப செய்தார். அவரிடம்தான், தன் தந்தைக்கு அவனின் இறப்பு பற்றி தெரியக்கூடாது என்று உறுதி வாங்கியிருந்தான்., அந்த வார்த்தைகள்தான் அவனுடைய தந்தை அவன்மேல் கொண்டிருந்த பாசத்திற்கும், அவன் தன் தந்தை மேல் கொண்டிருந்த பாசத்திற்கும் சாட்சியாக நின்று பாதர் வில்லியம்ஸை அவனுக்காக முனைப்பெடுத்து செயல்பட வைத்தது. அவன் இன்று உயிருடன் இருக்கிறான். அந்த நன்றிக் கடனை மதுமதியை கொண்டு தீர்த்துக் கொள்வான்.

மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தவனுக்கு அந்த சூட்சுமம் தெரிந்தது. நினைவு தப்புவது என்பது உடலுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு அறுந்துபோவது என்பது அறிவியல் கூற்று. சில சமயம் தற்காலிகமாகவும் சில வேளைகளில் நிரந்தரமாகவும் ஆகிவிடும்.  நோயாளி மன உறுதியுடன் எதிர்த்து போராட வேண்டிய தருணமாகும், ஆனால், இது போன்று திடீரென்று விபத்தில் சிக்கிவர்களுக்கு பயத்தினாலும் வலியினாலும் மனஉறுதி குலைந்துவிடும். மரணத்தை எதிர்த்து போராடும் தைரியம் இருக்காது.   மூளையின் செயல்பாடு   நிற்பதும் ஒரு காரணமாகும்.  அவனுக்கும் அந்த முடிவுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாதர் வில்லியம்ஸ் செய்தது ஒரு அருமையான சிகிச்சை முறையாகும், அவனுக்கும் இந்த உலகத்திற்கும் இடையேயான நினைவுச் சங்கிலி அறுந்து போகாமல் அவனின் கையை பிடித்து பேசிக் கொண்டிருந்தார். தொடு உணர்ச்சியும், குரலில் வெளிப்பட்ட நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் அவனின் உடல் நிலையை மேம்படுத்தின. இப்போது அதையேதான் அவளுக்கும் முயற்சிக்கப் போகிறான்.

மருத்துவர் சாரதாவிடம் தெரிவித்துவிட்டு அவசரசிகிச்சை அறைக்குள் நுழைந்தான். மயக்கத்தில் இருந்த அவள் அருகில் அமர்ந்தான்.  அவளின் கையினை எடுத்து இறுகப்பற்றியபடி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

அவனுக்கு அவளை பற்றி தெரிந்த இரு விசயங்கள் அவளின் அம்மா ஒரு இதய நோயாளி, அவளின் அண்ணன் விக்ரம். இரண்டை மட்டுமே வைத்து பேசிவிட முடியாது. குடும்பங்களுக்கென சில பொதுவான  நிகழ்வுகள் இருக்கும் பள்ளிக்காலம், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவற்றை தொட்டு பேசலாம். மேலும் அவளுடைய கடை முதலாளி அந்த வனிதா மேடம், வியாபரம் செய்வதில் பெரிய கேடி அவர்களை பற்றி பேசலாம். இவளுக்கு அண்ணன் இருப்பதால், சந்தேகமின்றி கிரிக்கெட் பற்றி பேசலாம். கொஞ்சம் அரசியல் கூட பேசலாம். ஆதரித்தும் மறுத்தும் கருத்து கூறலாம். அதற்குள் அபிஷேக் அவனுக்கு மேலும் சில தகவல்களை தரலாம். எப்போதுமே ஒரு வேலையை ஆரம்பிக்கும்போது முழு மனதுடன் கொஞ்சமும் சந்தேகம் இன்றி ஆரம்பிப்பான். அதே போன்று இதனை தொடங்கினான்.

அவனுடைய முயற்சியின் பலனாக முதலில் இதயத்துடிப்பு சீரடைந்தது. அவன் அமைதியாக இருந்த சமயங்களில் துடிப்பு குறைந்தது. கொஞ்சமும் கலக்கம் இல்லாமல் குரலில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவன்  நகைச்சுவையாக பேசியபோது சுவாசம்கூட சீரானது.

இதன் இடையே அபிஷேக் அவனிடம் சில தகவல்களை தர, அவனுக்கு ஆச்சரியமாகியது. அவள் அவன் தந்தையின் ஊரான வனமலையை சேர்ந்தவள். இனி அந்த ஊரைப்பற்றியும் கொஞ்சம் கதைவிடலாம். இவ்வாறாக, மருத்துவ அதிசயமாக அவள் ஐந்தாவது  நாள் விரல் அசைத்து சுவாசம் எடுத்தாள். மருத்துவ உபகரணம் இன்றி சுவாசம் எடுத்து பிழைத்தாள். அவளுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை!

அவன் செய்ய வேண்டிய வேலைகள்  நிறைய இருந்தன. முதலில் அவளுடைய வழக்கை வனமலையூருக்கு மாற்ற வேண்டும், அவனுடைய தந்தை நீதிபதி விஸ்வநாதனை இந்த வழக்கை கவனிக்க வைக்க வேண்டும், பிறகு அவளை மேல் சிகிச்சைக்காக சீதாம்மாவின் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்.

ஏனெனில், அபிஷேக் சொன்னதுபோல இது பாலியல் பலாத்கார முயற்சி அல்ல, கொலை முயற்சி எனில் தக்க பாதுகாப்பு தர வனமலைதான் சரியான இடம். அவளை மட்டும் அவன் தந்தைக்கு பிடித்துவிட்டால், அவளுடைய எதிர்காலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிடுவார். இது எல்லாம் சரிவர நடைபெற வேண்டும், இதன் பின்னணியில் அவன் இருந்தான் என்பது அவருக்குத் தெரியக் கூடாது. ஏனெனில் அவன் அவருடைய வாழ்க்கையைவிட்டுப் பிரிந்துவந்து வெகு நாட்களாகிவிட்டது. அவளை வனமலைக்கு அனுப்பியபின் அவள் அண்ணன் விக்ரமிடம் சொல்லி ஒப்படைக்க வேண்டும்.

பத்திரிக்கைகள் இந்த வழக்கை ‘தேவியின் கடத்தல் வழக்கு’ என்று பக்கம் பக்கமாக எழுதின. முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு அவன் சுயநினவில்லாமல் இருப்பதையும் கூறின. அவனுடைய குடும்பத்தினரின் பேட்டிகளை எடுத்து வெளியிட்டன. அவன் ஒரு கூலிக்கு வேலை பார்க்கும் கும்பலை சேர்ந்தவன் என்றும் தெரிவித்தன. மேலிடத்தின் அழுத்தமான கட்டளைகளால், ‘தேவியின்’ புகைப்படமோ அவளைப் பற்றிய தகவல்களோ அவற்றிற்கு கிடைக்கவில்லை. சில நாட்கள் கழித்து அவை மௌனம் சாதிக்க ஆரம்பித்தன. அவ்வளவுதான் அடுத்த பரபரப்பான செய்திக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தன.   

அவனின் முடிவுப்படி அனைத்தும் நல்லபடியாக  நடந்துவிட்டன. சற்றே நிம்மதியடைந்தான். ஆனால் அது நிரந்தரமாக  நீடிக்கவில்லை…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.