(Reading time: 149 - 298 minutes)

இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சிறப்பு நீதிபதியான அவருக்கு தரப்பட்டிருக்கிறது. ரகசியம் காப்பது பற்றியும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வாக்குமூலம் பதிவு செய்ய என்று இங்கு வந்தால், இப்போதுதான் அது மதுமதி என்று தெரிகிறது.

 மருத்துவ அறிக்கையில், பாலியல் பலாத்காரம் இல்லையென்று குறிப்பிடப்பட்டிருந்தது. கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எட்டு இடங்களில் எலும்பு முறிவு, வயிற்றில் கத்தி குத்து, தலையில் பெரிய வெட்டு  என மதுமதி வெள்ளை பாண்டேஜ் துணிக்குள் புதைந்திருந்தாள். அவருக்கு கண்ணை கரித்துக் கொண்டுவந்தது. யோசனையுடன் அபிஷேக்கை பார்த்து,

“இவள் எனக்கு மிகவும் தெரிந்த பெண். அவளை பற்றிய விவரங்களை நான் பதிவு செய்து கொள்கிறேன். கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் பற்றி எனக்கு ஒரு சந்தேகமும் எழுகிறது. அதனை நாம் தீவிரமாக விசாரிக்கலாம். ஆனால், இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்றால் இங்கே சிகிச்சை தருவது பாதுகாப்பானதல்ல. நான் என்னுடைய சொந்த பொறுப்பில் வனமலைக்கு மாற்றிக் கொள்கிறேன். இவளுடைய சொந்த ஊரும் அதுதான். அங்கு என் மனைவி மருத்துவர் சீதா சொந்தமாக  மருத்துவமனை நடத்தி வருகிறார்.  நவீன மருத்துவ வசதிகள் கொண்டது. மதுமதிக்கு தேவையான சிகிச்சைகளை அவரால் பார்த்துக் கொள்ளமுடியும். பாதுகாப்பு பற்றியும் பயப்படத் தேவையில்லை.” என்றார்.

“இந்த முடிவு எனக்கு நிம்மதியளிக்கிறது சார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் இருவர் விபத்தில் இறந்துவிட்டனர். ஒருவன் மட்டும் சுயநினைவு இல்லாமல் சிகிச்சை பெற்றுவருகிறான். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்.  நினைவு திரும்பியதும் உங்களுக்கு தெரிவிக்கிறேன் நீங்கள் அவனுடைய வாக்குமூலத்தையும் பதிவு செய்து கொள்ளலாம்.”

“சரி, நான் மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ரெக்கார்டுகளில் தேவி என்றே குறிப்பிடுங்கள்.” என்று எழுந்து கொண்டார்.

அவர் கூறியபடியே மிக விரைவில் செயல்பட்டு  வனமலைக்கு மதுமதியை கொண்டு சென்றார். அவர் மனைவியிடம் பேசியபோது மேலும் சில உண்மைகள் தெரிந்தது. சில நாட்களுக்கு முன்பாகத்தான் அவள் யாரோ ஒருவனை வீட்டிற்குத் தெரியாமல் மணந்து கொண்டுவிட்டதாக செய்தி கிடைத்திருந்தது. இப்போது இப்படி கிடைத்திருக்கிறாள்.

“சரி சீதா, நீ அவளுக்கு சிகிச்சையை தொடங்கு, அவளின் இந்த நிலைக்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்கிறேன்” என்று உறுதியளித்தார்.

மதுமதி அவருடைய  நண்பர் பாஸ்கரின் தம்பி மகள். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவள்.. அன்பான எளிமையான பெண். இருபத்திரெண்டு வயதிருக்கும். அவருடைய மகள் ரம்யசந்திராவிடமும் மகன் நித்யசந்திரனிடமும் நட்புள்ளவள். ஒருமுறை ரெமி ஒரு விபத்தில் சிக்கியபோது தோழியின் உயிரைக் காப்பாற்றியவள். அதனாலேயே அவருடைய வீட்டில் அவளுக்கு தனி மரியாதை உண்டு.

இளநிலை சமூகவியல் படித்தவள். சமூக மாற்றங்களின் மேல் நம்பிக்கையும், ஒரு சமுதாயத்தின் வாழ்வியலை அமைப்பதில் மக்களின் பங்கு மிகமிக அவசியம் என்றும் நம்புபவள். அதனாலேயே சமூகபிரச்சினைகளுக்காக  நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்பாள். அவளின் வளர்ப்புத்தாயான ராதை மேல் மிகுந்த பிரியம் உள்ளவள். பொறுப்பான அவள் எப்படி வீட்டை மறுத்து காதல் திருமணம் செய்தாள். அவளின் இன்றைய நிலைக்கு காரணம் காதலா? அல்லது…

அவருக்கு இன்னொரு சந்தேகமும் உள்ளது. கொலைவெறி தாக்குதல் என்பதால் இந்த சந்தேகம் எழுகிறது.  அவளின் ஒரு தொடர் போராட்டம்தான் அவளுக்கு பலம் வாய்ந்த எதிரிகளை பெற்றுத்தந்திருந்தது. இங்கிருந்தால் அவளுக்கு பாதுகாப்பில்லை என்று கருதி சென்னைக்கு அனுப்பி இருந்தனர்.

 அது என்னவெனில், அவளுடைய சொந்த ஊரான வனமலையில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்துக் கொள்ள அரசு அனுமதித்ததை எதிர்த்து நடத்திய போராட்டம்தான்.  பணபலம் மிக்கவர்கள் எடுத்த அந்த காண்ட்ராக்ட் அவளுடைய போராட்டத்தால்  நிறுத்தி வைக்கப்பட்டு கோர்ட்டிற்கு சென்றிருந்தது. அது தொடர்பான மிரட்டல்கள் அவளுக்கு வந்தபோது அவளை பாதுகாக்கும் பொருட்டு

சென்னையிலிருந்த அவளுடைய தாய்வழி பாட்டியிடம்  சேர்ப்பித்துவிட்டார்கள். தங்க இடம் மட்டுமே கிடைத்த அந்த வீட்டில், தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சிறிய கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தாள் என்பதுவரை அவருக்குத் தெரியும். ஒருவேளை வனமலை போராட்டம்கூட காரணமாக இருக்கலாம். என்று அவர் நினைத்தார்.

அவளுடைய நிலைபற்றி பாஸ்கரிடம் தெரிவிப்பது அவருடைய கடமையல்லவா?. எனவே இதனை அவரிடம் தெரிவித்தார்.

“விஸ்வா, அவளுடைய காதல்தான் இதற்கு காரணமாக இருக்கலாம் அல்லது நீ சொல்வது போலவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் என் மனைவிக்கு இதுபற்றி தெரிய வேண்டாம். ஏற்கனவே அவள் ஓடிப்போனதை தாங்கமுடியாத அதிர்ச்சியில் இருக்கிறாள். மதுமதிக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவள் தாங்க மாட்டாள். சீதாவின் பொறுப்பில் அவள் இருக்கட்டும்” என்று முடித்துவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.