(Reading time: 149 - 298 minutes)

“அது உனக்குத் தெரியாது மதுமதி. நல்லபெண். என் நண்பரின் மகள். தற்சமயம் இங்கிருக்கிறாள்” என்று விஸ்வநாதன் கூறினார். தொடர்ந்து,

“நீ எப்படி இருக்கிறாய்…. அப்பாவை பார்க்க இப்போதுதான் மனம் வந்ததா..?”

“திடீரென்று தோன்றியது வந்துவிட்டேன். என் தொழில்முறை நண்பர் ஒருவரின் மகள் திருமணம். இந்த பக்கம்தான் சென்றேன். உங்களையும் பார்க்கலாமே என்று வந்துட்டேன்” சற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த தம்பி தங்கையை பார்த்து புன்முறுவலித்தான்.

“ரெமிம்மா, நீ கடைசி வருடம் மருத்துவம் படிக்கிறாய் அல்லவா? எப்படி இருக்கிறாய்?”

“அண்ணா,  நான் இந்த வருடம் படிப்பை முடித்துவிடுவேன். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?”.

“ஆமாம், படிப்பு முடியவும் திருமணம் செய்து விடுவோம்”

“ரொம்ப முக்கியம். ஒரு அப்பாவியை வதைப்பதில் அப்படி ஒரு சந்தோஷம்”

“யார் அது… எங்கிருக்கிறான் ரெமி?” சத்யன் கேட்க,

“அண்ணா, அப்பாவி என்று நான் என்னை சொன்னேன்”

“ஓ,,, நான் உன் வருங்கால கணவரை சொல்கிறாய் என்று நினைத்தேன்”

வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்த விஸ்வநாதன், கலகலவென  நடந்து கொண்டிருந்த உரையாடலின் இடையில்தான் கவனித்தார். எதிலுமே கலந்து கொள்ளாமல், மௌனமாக அமர்ந்திருந்த நித்யனை விஸ்வநாதன் கவலையாக பார்த்தார். அண்ணனிடம் பேசவே மாட்டேன் என்கிறானே. ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டதோ என்று நினைத்தார்.

“நித்தி… அண்ணனிடம் பேசமாட்டாயா” என்று கேட்டார்.

“அதுதான் முகநூலில் விழுந்து விழுந்து லைக்ஸ் போட்டு ஃபலோவராகி பழகியாகிவிட்டதே. புதிதாக பேச என்ன இருக்கிறது.”  என்றபடியே வந்த மதுமதி பாயாசக் கிண்ணத்தை அவர்களிடம் நீட்டினாள். 

.”அப்படியா..?” என்று சீதாம்மா அதிசயத்தார்.

“என்னிடம் சொல்லவேயில்லை..” இது விஸ்வநாதன்.

“சொன்னால், நீங்கள் அதனை பார்க்க வேண்டும் என்பீர்கள் ஜட்ஜ் அங்கிள்.”

“நான் பார்க்கக் கூடாத  ராணுவ ரகசியமா  அதில் இருக்கிறது?” 

“இல்லை, ஆனால் மியாமி பீச்சாங்கரையில்…” அவள் முடிக்கும் முன்னே சத்யனுக்கு புரையேறியது. அனைவரும் தலையில் தட்ட முயற்சிக்க அவள் சிரித்துவிட்டு…

”இதுக்கு மேல் தலையை தட்டினால் குள்ளமாகிவிடுவார். விடுங்கப்பா” என்று நகர்ந்தாள்.

“செம வாயாடி போல இருக்கிறது.  நான் வரும்போதுகூட பேசிக் கொண்டிருந்தீர்கள்.”

“பேசினோமா…. கண்ணை நம்பாதீர்கள் அண்ணா. அவள்தான் பேசுவாள். நான் வெறுமனே தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருப்பேன்.”

“அப்படியே உன்னுடைய முகநூல் பாஸ்வேர்டையும் தந்துவிடுவாய் போலிருக்கிறது”

“அதுவேதான் என்னுடைய இ-மெயில் ஐடியும். அப்புறம் ட்வீட்டர் கணக்கிற்கும்கூட…”

“அப்படி என்ன பாஸ்வேர்ட்டுடா அது…”

“யாரோவுடைய சிறுவயது நிக் நேம் அது. ப்ளூபேபி…” மது சொல்ல,

இதுவும் தெரியுமா? அது சத்யனுடைய செல்ல பெயர்தான். 

“சத்திம்மா, இன்று இரவு உணவிற்கு என்ன தயாரிக்க?” கேட்ட சீதாம்மாவிடம்,

“உங்கள் விருப்பம் சீதாம்மா. இன்னும் மூன்று நாட்களுக்கு உங்கள் சாப்பாடுதான்” என்று கூறினான். இந்த செய்தியில் அவர் முகம்மலர்ந்தார்

“உன்னுடைய அறைக்கு என்னை அழைத்துச் செல்ல மாட்டாயா?. மூன்று நாட்களுக்கு என்ன செய்வது என்று திட்டமிடலாம் அல்லவா?” என்று தங்கையிடம் பேசிக் கொண்டே சத்யன் எழுந்தான்.

“ஒரு நாள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லலாமா சத்தி. உனக்கு திருமணம் நடக்க இருக்கிறதல்லவா?” விஸ்வநாதனின் கேள்விக்கு ஒப்புதல் தெரிவித்தான்.

அப்படியே ஒரு ஓரக்கண்ணால், மதுமதியையும் பார்த்தான். என்னவோ பார்வை மாறுகிறதே? பார்த்த உடனேயே பற்றிக் கொள்ளும்  ரசாயன மாற்றம் ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா?.

இல்லை..இல்லை என்று அவளுடைய புன்னகையில் விரிந்த கண்கள் தெரிவித்தன. அத்துடன் அவனின் தந்தையிடம் ஏதோ சைகை வேறு காட்டினாள். என்னவாம்?

“புரிந்துவிட்டது. அவனுடைய பிறந்த நாள் வருகிறது. நீ சொன்னபடி  நடந்துவிட்டது என்கிறாய்? சரி, நானும் பேச்சு மாற மாட்டேன்” என்று விஸ்வநாதன் முடித்தார்..

.”ஓக்கே அங்கிள்” சியர்-அப்  காட்டினாள்.

மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்த சத்யன் இதனை கவனித்தான். என்ன ரகசியம்?

அவள் கூறிய மியாமி பீச் வேறு அவனை கலங்கடித்தது. அப்படி ஒரு போட்டோவை அப்லோட் செய்ததே தவறோ என்று இப்போது நினைத்தான். தம்பி பார்ப்பான் என்று நினைத்தால், இவள் வேறு பார்த்து தொலைத்திருக்கிறாள். என்ன நினைத்திருப்பாள்…?

பார்த்தால் என்ன? அவனால் காப்பாற்றப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவள் (யெஸ்… யெஸ் அது ஒரு ஃப்ளாஷ்பேக்தான்… அப்புறமாக பார்ப்போம்)  இப்போது எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள நினைத்தான், எனவேதான் வந்தான். மற்றபடி அவள் என்ன நினைத்தால் அவனுக்கென்ன… ? 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.