(Reading time: 149 - 298 minutes)

ஒருவேளை தனவர்சினியுடன் அவன் நிச்சயம் செய்து கொண்ட புகைப்படத்தையும் பார்த்து இருப்பாளோ. அவனுக்கு பக்கென்று ஆகியது. ஏன் இப்படி மனம் பதைக்கிறது என்று யோசித்தாலும் அது பாட்டுக்கு அனிச்சை செயலாக பயத்தினை கிளப்புகிறது. உண்மையில் ரசாயன மாற்றம் அவனுக்குத்தான் நடக்கிறது போல..

மதுமதி சமையலறையில் அத்தைக்கு உதவ, மற்றவர்கள் மாடி அறையில் சிரித்து கும்மாளமிட, கூடத்தில் தனித்து அமர்ந்திருந்த விஸ்வநாதன் ஒரு கணக்கை தீர்வு செய்து கொண்டிருந்தார். அது மட்டும் சரியாக இருந்தால், மதுமதி பற்றி அவர் கவலைப்பட வேண்டாம்.

அவருக்கு அவள் விசயத்தில் என்ன நடந்தது என்று தெரிந்திருந்தது. அவள் கடத்தப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் யாரோ ஒரு மருத்துவரின் உதவியுடன் தெரிவித்த பொய்தான் ‘ஓடிப்போன விசயம்’. மற்றபடி அவள் ஒரு தவறும் இழைக்கவில்லை. சற்று பொறுத்து வழக்கு முடிந்ததும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தார். ஆனால், அவள் கூறிய மற்றொரு விசயம் அவரைக் கவலையில் ஆழ்த்தியது. அவளுக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றும், இங்கேயே இருந்துவிடுகிறேன் என்றாள். இதுபற்றி விசாரித்த சீதாவிடம்,

“அத்தை, நான் ஒருவரை மனதால் விரும்பினேன். ஆனால் அது இப்போதைக்கு கைகூடாது. ஏனெனில் நான் என்னுடைய காதலை தொலைத்துவிட்டேன். எனவே, எனக்கு திருமணம் செய்து கொள்ளும் விருப்பமே இல்லை. ஏதாவது சமூக சேவை செய்து கொண்டே காலத்தை கழித்துவிட எண்ணுகிறேன்.”. என்றாள். பாவம், அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தால் காதல் கைகூடவில்லை போலிருக்கிறது என்று விஸ்வநாதன் எண்ணினார்.

மதுமதி போன்ற ஒரு நல்ல பெண்ணுக்கு எப்படிப்பட்ட சோதனை நேர்ந்தது. அதிலிருந்து அவள் பிழைத்து மீண்டு வந்ததே பெரிய விசயம். அதுபோல மீண்டும் அவளுக்கு நடக்காமல் இருக்க அவர்தான் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அவளை குற்றுயிரும் கொலையுயிருமாக பார்த்த அந்த நாள் நினைவிற்கு வந்தது.

அது நடந்து மூன்று மாதம் இருக்கும். ஒரு பெண் கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார கேஸ்… அதனை ரகசியமாக விசாரித்து அறிக்கை தாகல் செய்யும்படி  அவரை ஸ்பெஷல் நீதிபதியாக நியமித்திருந்தனர். அது விசயமாக அந்த பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நோக்கத்துடன்தான் அங்கு சென்றார்.

அது ஒரு மருத்துவமனை. அந்த மஞ்சள்நிற கட்டிடத்தின் முன் வாயில் மெர்க்குரி விளக்கின் வெளிச்சத்தை உமிழ்ந்து, அந்த தனியார் மருத்துவமனையின் பெயரை தெரியப்படுத்தியது. பார்வையாளர்கள் நேரம் முடிந்து சற்றே ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது. நீதிபதி விஸ்வநாதனின் கார் அந்த மருத்துவமனையின் வளாகத்தில் நுழைந்தது. வராண்டாவில் உயரமாக மிடுக்காக ஒருவன் நின்றான்.  அவரைப் பார்த்து சல்யூட் அடித்த விதத்தில் அவன் மப்டியில் உள்ள காவல்துறை அதிகாரி என்று தெரிந்தது.

“ஏஎஸ்பி அபிஷேக் நீங்கள்தானே..?” விஸ்வநாதனின் கேள்விக்கு ஒப்புதல் தந்து தலையாட்டியவன் அவரிடம் மெல்லிய குரலில் பேசினான். –

“சார், இந்த வழக்கை ரகசியமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அரசின் உத்தரவு. ஏனெனில் இது ஆள் நடமாட்டம் மிக்க பகுதியில் நடந்த ஆள் கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார சம்பவம். சம்பந்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதியும் அரசியல் காரணங்களுக்காகவும்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”

“ம்… எனக்குத் தெரியும், வேறு யாரும் இங்கு உள்ளனரா?”

“ நோ சார்…  அந்த பெண்ணைப் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. அவளும் தெளிவாக சொல்ல மறுக்கிறாள். பத்து நாட்களாக சுயநினைவு இல்லாமல் இருந்து மீண்டதால் கோர்வையாக சொல்லவும் வரவில்லை. இப்போதைக்கு அந்த பெண்ணின் பெயரை தேவி என்று குறித்துள்ளோம். நீங்கள்தான் வாக்குமூலம் பதிய வேண்டும்.” 

“சரி, வாருங்கள்”

விஸ்வநாதன் அந்த பெண் இருந்த அறையில் நுழைந்தபோது, பாதுகாப்பு போலீஸ் இல்லை என்பதை கவனித்தார். “நான்தான் தற்சமயம் அந்த வேலையை செய்கிறேன். இனிதான் நம்பிக்கையான ஆட்களை போட வேண்டும் சார்.” என்றான்.

கையில் வாக்குமூலத்தை பதிவதற்கான  பதிவேட்டுடன் படுக்கையின் அருகில் சென்று அமர்ந்தார். உறக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணின் முகத்தை பார்த்து எடைபோட முனைந்தார். அறையின் மெல்லிய வெளிச்சத்தில், அவளை பார்த்தபோது அதிர்ந்தார்.

“இது…. மதுமதியல்லவா…?” அதைக்கேட்ட அபிஷேக் முகத்தில் மின்னல் கீற்றாய் ஒரு புன்னகை வெளிப்பட்டது. இந்த பெண்ணை அவருக்குத் தெரிந்திருக்கிறது,

“சார், இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?”

“ஆம்” என்று தலையசைத்த அவர், அவளுடைய வழக்கின் விவரத்தை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்தார்.

சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது. வெளிவட்ட சாலையில் அரை உயிராய் கிடைத்த பெண்ணை மீட்டு மருத்துவ உதவி செய்து காப்பாற்றி இருக்கிறார்கள். அபிஷேக்தான் ஆரம்பத்திலிருந்து வழக்கை பதிவு செய்திருக்கிறான். முதலுதவி சிகிச்சை சாலையோர ட்ரௌமா சென்டரில் தரப்பட்டு, இங்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.