(Reading time: 149 - 298 minutes)

“இல்லை, அவ்வாறு வேறிடத்திற்கு கொண்டு செல்லும்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சியைகூட இந்த உடம்பு தாங்காது. பல்ஸ் பாருங்கள் குறைந்து கொண்டே வருகிறது. மூச்சுவிட சிரமப்படுகிறாள். வென்டிலேஷன் வைக்கலாம். அதற்குரிய வசதியுள்ள மொபைல் மருத்துவமனையை இங்கே வரச்சொல்லலாம். ஆனால், எல்லா வசதிகளும் அதில் இருக்காது“.

“ஏதாவது தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு லேட்ட்ஸ்ட் வசதிகள் கொண்ட ஆம்புலன்சை வரச்சொல்லுங்கள். இந்தப் பெண் உயிர் பிழைத்தே ஆக வேண்டும்”.

அதற்கான ஏற்பாட்டை மருத்துவர் ஆரம்பிக்க, சற்று  நேரத்தில் மேலும் சில மருத்துவர்களும் வர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. அபிஷேக் அப்போது அங்கு வந்து நிலைமையை தெரிந்து கொண்டான். 

.”அவர்களை பிடித்துவிட்டாயா?”

“இல்லை, அதிக வேகத்தில் சென்றதால் ஒரு இ்டத்தில் கவிழ்ந்து மாருதி தீப்பற்றி எரிந்துவிட்டது. ஒருவனை மட்டும் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சேர்திருக்கிறேன். இது தொடர்பாக கேஸ் பதிவு செய்ய வேண்டும்”

“அபிஷேக், ஒரு வேண்டுகோள். நீ கேஸ் பதிவு செய்து கொள். ஆனால், இந்த பெண்ணின் உண்மையான பெயர் வெளிவராமல் வேறுபெயரில் பதிவு செய். வழக்கைகூட ரகசியமாக விசாரித்தால் நல்லது. ஏனெனில் அவள் வீட்டிற்கு இது பற்றி தெரிய விடமாட்டேன் என்று சத்தியம் செய்து இருக்கிறேன்.  நான் இது பற்றி முதலமைச்சரிடம் தெரிவித்து தனிப்பட்ட அனுமதி வாங்கித் தருகிறேன்.”

“அவர் தருவாரா?”

“என்னுடைய வருங்கால மனைவி என்று சொல்கிறேன். குடும்ப கௌரவம் முக்கியமல்லவா?”

“உன் வருங்கால மனைவி தனு அல்லவா?”

“அது, எப்போதோ முறிந்து போனது. அருகில் வந்தவளை நான் அனிச்சையாக பிடித்து தள்ளியபோதே முறிந்துபோனது. ப்ரேக்-அப். இப்போதைக்கு அந்த இடம் காலியாக இருப்பதால் இந்த பெண்ணிற்காக உபயோகித்துக் கொள்ளலாம். வழக்கை விசாரிக்க தனி நீதிபதிகூட கேட்கிறேன்”

“அப்படியென்ன கமிட்மெண்ட் சத்தி?”

“என்னை போல் ஒருத்தி என்பதால்…”.. அப்போது அவனுடைய அலைப்பேசி அழைக்க, அவன் அழைப்பை ஏற்ற உடனேயே மறுமுனையிலிருந்து பதட்டமான குரல் வந்தது.

“நான் விக்ரம் பேசுகிறேன். அங்கே மதுமதி இருக்கிறாளா?. சற்று முன் இந்த எண்ணிலிருந்து அழைத்தீர்கள். நான் அவளுடைய அண்ணன். அவளுடன் பேச வேண்டும்”. சத்யனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

“நான், சந்திரன். நான்தான் பேசியது. அவள் இப்போதைக்கு உங்களிடம் பேசும் நிலையில் இல்லை. மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாள். என்னுடைய அவசரத்திற்கு அப்படி செய்யும்படியாகி விட்டது. இப்போது நாங்கள் வெளியூர் சென்று கொண்டிருக்கிறோம். பிறகு அவளை சமாதானப்படுத்தி பேசச்சொல்கிறேன்.அவளின் நலன் என் பொறுப்பு நம்பிக்கை கொள்ளுங்கள். ப்ளீஸ்”.

“என் தங்கையை நீ என்ன செய்தாய் என்று சொல். நான் போலீஸிற்கு செல்லவும் தயங்க மாட்டேன்.”

“உங்கள் தங்கை என் மனைவியாகிவிட்டாள். நீங்கள் போலீஸிற்கு சென்று கம்ப்ளைண்ட் கொடுங்கள்,  நான் அங்கு வந்து உண்மையை சொல்கிறேன்.  நானாகவேதான் உங்களைத் தொடர்பு கொண்டு செய்தி கூறினேன். இந்த அலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். நான் அவளை பேசச் சொல்கிறேன். போலீஸ் என்று செல்வதெல்லாம் குடும்பத்திற்கு நல்லதா என்று யோசித்துக் கொள்ளுங்கள்”. தொடர்பை துண்டித்தான்.

அவன் சும்மா இருக்க மாட்டான் என்று தோன்றியது. அபிஷேக்கிடம் ஆலோசனை செய்தான். எப்படியாவது அவளை காப்பாற்றிவிட்டால், அந்த அண்ணனை அழைத்து உண்மையை சொல்லிவிடலாம். அதுவரை… போலீஸில் புகார் செய்தால், அதனை அபிஷேக் சமாளித்துக் கொள்ள வேண்டும்.  அபிஷேக் அந்த அலைப்பேசி எண்ணை பெற்றுக் கொண்டு,

“நான் பார்த்துக் கொள்கிறேன் அந்த பெண்ணின் முழு விவரமும் உனக்கு கிடைக்கும்.” என்றான்.

 சத்யசந்திரன் அந்த பெண் மதுமதியின் நிலைமை என்ன ஆனது என்று பார்க்க விரைந்தான். விரைவான அறுவை சிகிச்சை செய்து, ரத்தப்பெருக்கு நிறுத்தப்பட்டிருந்தது. செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இன்னும் இதயத்துடிப்பு சீராகவில்லை. சுய நினைவு வரவில்லை. ஒரு பொம்மைபோல கிடத்தப்பட்டிருந்தாள்.

“இப்போது நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் முடித்துவிட்டேன், அவளுக்கு உயிருக்கு ஆபத்தில்லை. மற்றபடி சுய நினைவு திரும்ப வேண்டும். கோமா ஸ்டேஜிற்குள் சென்றுவிட்டால், நம் முயற்சி அத்தனையும் பாழாகிவிடும்.” இது மருத்துவரின் முடிவு.

  சத்யசந்திரனுக்கு எப்படியாவது மதுமதியை காப்பாற்றிவிட வேண்டும் என்று உள்வலி எழுந்தது ஏனெனில், அதுபோன்றே வாழ்வா சாவா என்ற ஒரு நிலையில் அவன் இருந்தபோது யாரோ ஒருவர் அவனை கைப்பிடித்து கரையேற்றினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.