(Reading time: 149 - 298 minutes)

அவனுடைய மனோதத்துவ மருத்துவருக்கே குழப்பம் தரும் விசயம்….ஒருவேளை திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை அவன் உள்மனம் வெறுப்பதால் வந்த சிக்கலாகக்கூட இருக்கலாம் என்று குழம்பினார்.

சத்யனை பொறுத்தவரை,  அந்த தனு அவனை வேண்டாம் என்று விலக்கியபின், இனி அவனுக்கு திருமணம் செய்து கொள்ளவே விருப்பம் இல்லை. ஆனால், இந்த செய்தி அவனுடைய வட்டாரத்தில் பரவினால் கேலியும் கேள்வியும் எழலாம். தொடுவதும் விடுவதும்கூட பராவாயில்லை, தொடாமல் விலகுவது கேலிக்குரிய விசயமாகும். அதற்காகவே யாரையும் பாதிக்காத ஒரு மாற்றுவழியை கண்டிபிடித்தான். அதனால்தான் அந்த ஒப்பந்த திருமணத்திற்கு அவன் ஐடியா தந்தது. மனைவி என்ற பொறுப்பை ஒரு கௌரவப்பதவி போல மதுமதிக்கு வழங்கிவிட்டான்.

அது சரியா அந்தப் பெண்ணுக்கு அவன் வழங்கும் நீதியா? அநீதியா? என்றும் புரியவில்லை. ஆனால், அவளுடைய விருப்பத்தின்பேரில் ஒரு மாற்று வாழ்க்கை அவளுக்கு அமைந்தால் அவன் தடுக்கவும் மாட்டான். இது சத்யனின் எண்ண ஓட்டம்.

அண்ணன் விக்ரம் வந்து பேசியபின் அவளும் குழம்பிதான் போனாள். அவனுக்கு உறுதியாக பதில் சொல்லி அனுப்பிவிட்டாலும், பிற்பாடு சந்தேகப்பேய் பிடித்து ஆட்டியது.

சத்யனுக்கு  நிறைய பெண் நண்பிகள் உண்டு என்பது அவளை பாதிக்கவில்லை. அவள்தான் காதலொருவனை கருத்தொருமித்து மனதில் வரித்துவிட்டாளே… சத்யன் கெட்டு குட்டிச் சுவரானாலும் கலங்கமாட்டாள். அவர்களின் முன் ஏற்பாட்டின்படி அவன் விவாகரத்திற்கு சம்மதிக்கமாட்டான் என்றும் அவள் கலங்கவில்லை. அவன்தான் ப்ரேக்-அப் மன்னனாயிற்றே.

அவள் கலக்கமெல்லாம், மனைவி என்ற உரிமையில் அவளிடம் எல்லை மீறுவானோ என்பதுதான். இந்த ஒரு பயம் மட்டும் அவளை திருமணத்தை நிறுத்திவிடலாமா என்ற முடிவிற்கு கொண்டு போனது.

அவள் யோசித்துக் கொண்டே இருப்பதால் எதுவும் நின்று போகாது. கொதிக்கும் எண்ணையா அல்லது எரியும் அடுப்பா என்பது மட்டுமே அவளுக்கு தரப்பட்ட தெரிவுகள். அவள் எதை எடுப்பது என்று குழம்பினாள்..

 திருமண நாளன்று  மதுமதிக்கு என்னென்னவோ எண்ண ஓட்டங்கள். ஒப்பந்தப்படி அவன் அவளுக்கு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு தந்திருக்க வேண்டும். இன்னும் இல்லை, கேட்டாலும் தருகிறேன் என்று இழுத்தடிக்கின்றான்.. திடீரென்று வில்லனாக மாறி… என் விருப்பத்திற்கு இணங்கினால்தான் உனக்கு விவாகரத்து தருவேன் என்று மிரட்டுவானோ… கலக்கத்துடனும் குழப்பத்துடனும் இருந்த மதுமதியை தெளிவுபடுத்தியது அப்போது அவளுக்கு வந்த அலைப்பேசி அழைப்பு.

“நீங்கள் மதுமதிதானே… நான் தனவர்சினி. ஒரு விசயமாக உங்களிடம் பேச வேண்டும்” என்ற குரலுக்கு பதிலாக,

“நாம் சற்று  நேரம் பொறுத்து பேசலாமா? முகூர்த்தத்திற்கு நேரமாகிவிட்டது.”

“நான் பேசுவதைக் கேட்டால், உங்களுக்கு முகூர்த்தம் தவறிவிடுமே என்ற கவலையே போய்விடும். ஐ மீன்… உங்கள் திருமணத்தையே நிறுத்திவிடுவீர்கள்”.

 வா… வா. இதை…இதைத்தான் எதிர்பார்த்தேன்… சத்யனின் முன்னாள்… யாரோ ஒருத்தி திருமணத்தை  நிறுத்த முயற்சிக்கிறாள் அவளுடைய வருங்காலக் கணவன் சத்யசந்திரனின் திருமணத்தில் இது போன்ற திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாமலிருந்தால் எப்படி?

அவள் திருமணம்  நிற்கப் போகிறது. இது கடவுளின் முடிவாக இருக்கலாம். எனவே ”என்ன விசயம் என்று சீக்கிரம் சொல்” என்று ஊக்குவித்தாள்.

‘சிஸ்.. அவன் என்னை ஏமாற்றிவிட்டான்…’ அல்லது ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ அல்லது ‘என்னை ஏற்கனவே கந்தர்வ விவாகம் முடித்துள்ளான்…’ இது போன்ற வசனத்தை அவள் எதிர்பார்த்தாள். ஆனால்…

“அவனை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டாம். எவ்வளவோ கனவுகள் கற்பனைகள் வளர்த்திருப்பாய். ஆனால், அவன் ஒரு சைக்கோ தெரியுமா?. அவனுக்கு மிகஅருகில் எந்தப் பெண் வந்தாலும் ஓங்கி ஒரு அறைவிட்டு பிடித்துத் தள்ளிவிடுவான். முதலிரவு அறையிலிருந்து நீ வெளியே வந்து விழும் காட்சியை கற்பனை செய்துபார். எவ்வளவு பெரிய அவமானம்.  இந்த காரணத்தால்தான் அவனுடைய திருமணங்கள் நின்று போயின. வேண்டுமானால் அவனிடம் கேட்டுக் கொள்.”.

 வாவ்… இது உண்மையா…! அப்படியெனில் அவளுக்கு பிரச்சினையேயில்லை. அவனோ அவளோ ஒருவரையொருவர் நெருங்கப் போவதில்லை.  நெருங்கவும் முடியாது. அவனே பிடித்து தள்ளி விடுவான். சூப்பர்…

மிகுந்த மகிழ்ச்சியுடன் அவள் மணமேடைக்குச் சென்றாள். அவளுடைய  முகத்தைப் பார்த்த சத்யன் கேள்வியாக புருவம் உயர்த்தினான். என்னவோ மாற்றம் நிகழ்ந்துள்ளதே. சற்று முன்வரை விவாகரத்து… பத்திரம்… என்று பிடுங்கிக் கொண்டிருந்தாள். இப்போது மர்மப் புன்னகை வீசுகிறாளே.  அவனுக்கு பதில் தெரிந்து கொள்ள தனிமைக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

எளிமையான திருமணச் சடங்குகள் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமுமில்லாமல் நடந்தேறின. அவளுடைய சார்பாக விக்ரம் அண்ணன் மட்டுமே வந்திருந்தான். அனைத்து விருந்தினரும் சென்றபின், விஸ்வநாதன் மகனை அழைத்து பேசினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.