(Reading time: 149 - 298 minutes)

கண்டதும் காதல் கத்தரிக்காய் என்பதெல்லாம் சத்யனுக்கு பிடிக்காது. ஒருவரின் நிலை கண்டு இரக்கமோ கருணையோ ஆச்சரியமோ பிரமிப்போதான் உடனடியாக வரும். மற்றபடி காதல் வரும் என்பதெல்லாம் ஆதிகாலத்து புலவர்கள் செய்துவைத்த கைங்கரியம் என்று நினைத்தான்.

விக்ரமிற்கோ சங்கடமாக போய்விட்டது. அப்படியா ஙே என்று பார்த்துக் கொண்டிருந்தான். சும்மா இருந்தாலே இப்படித்தான் வேடிக்கை பார்க்கச் சொல்லும்… என்று அவன் தன் பார்வையை திருப்பிக் கொண்டான். அப்படித் திரும்பிய பார்வையில் அவனையே முறைத்துக் கொண்டிருந்த ரெமி பட்டாள். ‘ஐயோ, இவள் ஏன் முறைக்கிறாள்.. இன்றைக்கு நாளே சரியில்லை போலும்…’

நல்லவேளையாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. சத்யனை அழைத்துக் கொண்டு வராண்டாவிற்கு வந்தார். அங்கு வெளியே புல்தரையில் நிறைய பேர் அமர்ந்திருந்தனர்.

“இவர்கள் எல்லாம் நம் தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள். மலைவாசிகள். தாத்தா காலத்திலிருந்தே நம்மிடம் இருப்பவர்கள். அவர்களுக்கு உன் கையால் பரிசு கொடுப்பா” என்றார். தொடர்ந்து,

“அவர்கள் உன்னைக் காண வந்திருக்கிறார்கள். நீ வீட்டிற்கு வந்தால் உன் கையால் துணிமணி எடுத்து தரக் கோரியிருந்தனர்.” என்று முடித்தார்.

அவர்கள் அவன் அருகில் வந்து வரிசையாக நின்று அவனை வாழ்த்தி பரிசினை பெற்றுக் கொண்டனர். ஆண்களுக்கு வேட்டி, சட்டையும் பெண்களுக்கு புடவையும் அதில் இருந்தன. ஒரு போர்வை, இனிப்பு வகை, கொஞ்சம் பணமும் அவற்றுடன் இருந்தன. அவற்றை பெற்றுக் கொண்டபின் உணவருந்த சென்றனர். வரிசை முடியும் தருவாயில் இருந்தது வரிசையின் கடைசி பெண்ணும் வந்தாகிவிட்டது..

சட்டென அவன் முன் புடவையின் முந்தானையை நீட்டிப் பிடித்தவளை நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.

“மது… நீ என்ன செய்கிறாய்?”

“போன முறை இதுபோலவே அனைவருக்கும் மாமா தந்தபோது, அடுத்த பிறந்த நாளிற்கு  நீங்கள் இங்கு வருவீர்கள் என்று கூறியிருந்தேன். அப்படி வந்தால் நானும் முந்தானைப் பரிசை வாங்கிக் கொள்வதாக வேண்டியிருந்தேன். இதோ உங்கள் கையால் எனக்குத் தாருங்கள்” என்று நீட்டினாள்.  என்ன காரணத்திற்காக அவளை மணந்து கொண்டிருந்தாலும், அவள் அவனுடைய மனைவி. இப்படி அவள் கையேந்தி நிற்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“ம்கூம் முடியாது. நீ என் மனைவி மது. உனக்கு இப்படியெல்லாம் தரமாட்டேன். நீ இந்தப்பக்கம் வா.” என்று இழுத்தான். அவளோ அந்தபக்கம் பிடிவாதம் பிடிக்க,

“சத்யா, நீ ஏதாவது போடாமல் அவள்  நகர மாட்டாள். உன்னை நகரவும் விட மாட்டாள். போராட்டக்காரி. ஏதாவது தந்துவிடு…” இது அவன் தந்தையின் வேண்டுகோள்.

அது உண்மையேபோல மதுவும் சிரிப்பு கலையாமல் நின்றாள். அவன் மனது கேட்காமல் தடுமாற, சீத்தம்மா கையில் ஒரு தட்டுடன் வந்தார்.

“இதை தந்துவிடு சத்யா”

அதில் பட்டுப்புடவை, நகை என்று நிரம்பியிருந்தது. பற்றாக்குறைக்கு அவன் தன்னுடைய கழுத்தில் இருந்த சங்கிலியையும் கழட்டி அதில் வைத்து அவளுடைய வேண்டுதலை  நிறைவேற்றினான்.

“இதெல்லாம் எனக்கு வேண்டாம்” என்று மறுக்க…

“நீதானே வேண்டிக் கொண்டது. போ.. போய் இதையெல்லாம் அணிந்து வா. அந்த செயின் மிகவும் மதிப்பு மிக்கது. என் தாத்தாவின்  நினைவாக வைத்திருக்கிறேன். பத்திரம். என் மனைவிக்கு தரச்சொல்லி தாத்தா என்னிடம் கூறியிருந்தார். நீ எப்போதும் அதனை கழுத்தில் அணிந்திருக்க வேண்டும்.” என்றான்.

“இப்போது எந்த செயற்கரிய செயலை செய்துவிட்டேன் என்று இதனை தருகிறீர்கள்.”

“நான் என் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று நினைத்தாயல்லவா? அதற்குத்தான்”

“ஆமாம், நீ சங்கடப்படாதே மதுமதி. உனக்கு இன்னும்கூட செய்யலாம்.” என்று விஸ்வநாதன் முடித்தார்.

அனைவரும் கேக் வெட்ட தயாராக, மதுமதியும் புதிய உடையை அணிந்து வந்தாள். அந்த கொண்டாட்டமும் முடிந்தபின் மலைமேல் இருந்த முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கே சிறப்பு பூஜைகள்  நடத்தப்பட்டன. பொதுவாகவே அனைவருக்கும் மதுமதியை தெரிந்திருந்தது. ஏதாவது ஒரு விசயத்தில் அவள் அனைவருக்கும் பரிச்சயமாகி இருந்தாள்.  

அங்கிருந்து பார்த்தபோது அந்த மலையின் அழகிய தோற்றம் முழுவதுமாக தெரிந்தது. சில்லென்று வீசிய காற்று குளிர்வித்தது. மலையின் அடிவாரத்தை தொட்டு கிடந்த  நிறைய  குன்றுகளும் கண்ணில்பட்டன. மொட்டையடித்த தோற்றத்தில் இருந்த அவை கிரானைட் கற்களா… அவனுடைய  கட்டிடக்கலை தொடர்பான தொழிலறிவு,  அவற்றின் பிரதிபலிப்பைக் கண்டு விலை உயர்ந்த வகையென சொன்னது.

அவன் அருகில் வந்த மதுமதி “இவைதான் இந்த மலைப்பிரதேசத்திற்கான சாபக்கேடு” என, அவள் கண்களில் தெரிந்த அந்த வெறுப்பு அவனுக்கு மிகவும் புதியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.