(Reading time: 149 - 298 minutes)

“மது இங்கே வாம்மா” என்ற அழைப்பில் அவள் அவ்விடம் விட்டு நகர்ந்தாள். சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது… இதுபோன்ற விலையுயர்ந்த வகை கிரானைட் கற்கள் அந்த இடத்தை சொர்க்கபுரி ஆக்கிவிடுமல்லவா? தொழில் நகரமாகக்கூட அவ்வூர் பிரபலமாகலாம். இது எப்படி சாபக்கேடாகும்…? யோசனையுடன் அவனும் அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டான்.

அன்றைய நாள் இனிதே கழிந்தது. மாலையில் தோட்டத்தில் காலாற  நடக்கையில், ரெமியின் கோபமான குரல் கேட்டுக் கொண்டிருந்தது. யாரிடம் இந்த சண்டை போடுகிறாள்.

“சிவப்பு வண்ண உடை அணிந்து வந்தால் அப்படியே தேவதைபோல தோன்றுகிறதாக்கும். அப்படி முழியை விரித்து பார்க்கிறாய். ஒரு வருட முயற்சிக்குப்பின் இப்போதுதான் இந்த மரமண்டைக்குள் என்னுடைய நினைவு சென்றுள்ளது என்று சந்தோஷப்பட்டால், அதற்குள் பல்டியாக்கும்…” என்ற குரல் வந்த   மரத்தின் பின் ஓசையின்றி எட்டிப் பார்த்தான்.

பாவம், பலிகடாபோல் விக்ரம் நிற்க, ரெமி அவனை வகைதொகை சொல்ல முடியாத அளவிற்கு திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தாள். இந்த நாடகம் வேறு இங்கு நடக்கிறதா…? அருமை தங்கைக்கு இப்படி தூக்கிப்போட்டு துவைக்கவும் தெரியுமா என்று அதிசயித்தான்.

 அவள் பேசுவதைப் பார்த்தால், அவள்தான் நீண்ட நாட்களாக முயற்சித்திருக்கிறாள் போலும். பையன் சமீபத்தில்தான் மாட்டியுள்ளானோ…?

 சீதாம்மாவிடம் அவன் மருத்துவராக வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது என்றாரே. முதல் நாளிலேயே துவங்கிவிட்டாள் போல. ஆனாலும் அவன் அவளுக்கு நல்ல சாய்ஸ்தான். இத்தனை நாள் விடுத்து இவன் ஏன் இப்போது தலையை ஆட்டவேண்டும். ஏதோ விசயம் இருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது..

அது… அது… மதுமதி…. அவனுக்கு பிடிபட்டுவிட்டது. தங்கையின் நல்வாழ்விற்கு கேடயமாக  நிற்க நினைத்து ரெமியை பயன்படுத்திக் கொள்கிறானோ?. இது சரியல்லவே? இதனை இப்போதே தீர்த்தாக வேண்டும். சட்டென்று இருமினான். அடுத்த அடியை அவன் வைக்கும் முன் அந்த பக்கத்தில் சூழல் மாறிவிட்டது.

“நீங்கள் அப்படி கூறினால் சரிதான், விக்ரம்.” என்று தணிந்த குரலில் உரைத்தவள்

“வாருங்கள் அண்ணா, வாக்கிங்கா?” என்று சத்யனிடம் வினவினாள். இது போன்ற சூழலை மாற்றும் விசயங்களில் மதுமதிதான் சதமடிப்பாள்… அவன் யோசிக்கும்போதே…

“சரி நான் கிளம்புகிறேன். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்.” என்று மெல்ல நகர்ந்தாள்..

“உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் விக்ரம்.” அவ்விடம் விட்டு நகர முயன்றவனை    நிறுத்தினான்.

“அது ஒரு ரகசியம். அன்றைக்கு உனக்கு ஒரு அலைப்பேசி தகவல் வந்ததல்லவா… மதுமதி ஓடிவிட்டாள் என்று… அதை நான்தான் உனக்குத் தெரிவித்தேன். அவளை மணந்து கொண்டதாக நானே உன்னிடம் கூறினேன். இப்போது என் கூற்றை உண்மையாகும் வகையில் திருமணமும் செய்து கொண்டேன். ஏன் என்று புரிகிறதா…?”. இந்த புதிய தகவலால் எதிரிலிருந்தவன் குழம்பிப் போனான். இவன் சொல்வதில் எதை நம்புவது எதை நம்பக்கூடாது என்றே புரியவில்லையே.

“ஏனென்றால், அவள் என் பொறுப்பு என்று நான் உன்னிடம் வாக்கு தந்தேன் அல்லவா? அதை காப்பாற்ற எண்ணினேன். விபத்தில் அகப்பட்டவளை இங்கு கொணர்ந்தது… சீதாம்மாவின் பாதுகாப்பில் சிகிச்சை செய்ய வைத்தது…. அனைத்தும் என் திட்டம்தான். புரிகிறதா? இதுபற்றி நீ யாரிடமும் சொல்லக் கூடாது. ஏனெனில், உன் தங்கைக்கு தேவையில்லாத சிந்தனைகள் ஓடும். அப்புறம் இப்போதே என் சட்டையை பிடித்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட சொல்வாள். “ என்று மெல்லிய குரலில் உறைத்தவன். தான் சொல்வது எதிரிலிருப்பவனின் மூளையை சரியாக எட்ட வேண்டுமென்று நினைத்து குரலை உயர்த்தி, 

“நான் இன்னுமொரு வாக்கு உனக்குத் தருகிறேன். அவளுக்கு இருக்கும் ஆபத்து நீங்கும்வரை மட்டுமல்ல  மதுமதிக்கு தனிப்பட்ட விருப்பம் என்று எதுவும் இல்லையெனில், அவள் என்றைக்கும் என்னுடைய மனைவிதான். கடைசிவரை பத்திரமாக பாதுகாப்பேன். சந்தேகம் கொள்ளாதே. என் தங்கையை விட்டுவிடு. அவள் நல்லபடியாக வாழ வேண்டும்”  சத்யன் உண்மையாகவே கூறினான். அவன் குடும்பத்துடன் சேர்ந்து இன்று மகிழ்வாக இருக்க மதுமதிதான் காரணம். அவளுடைய முக்கியத்துவம் அவன் குடும்பத்தில் மிகவும் மதிக்கத்தக்கது.

விரைந்து விலகியவன் பார்வையிலிருந்து மறையும் வரை திகைத்துபோய் பார்த்துக் கொண்டிருந்தான், விக்ரம். அவனுடைய திட்டம் சத்யனுக்குத் தெரிந்துவிட்டதா?

“உண்மையா விக்ரம்? மதுவிற்காகதான் நீ என்னுடன் பழக ஆரம்பித்தாயா? அண்ணா சொல்வது சரிதான், உனக்கு என் மேல் நம்பிக்கையில்லை. இனி நான் உன்னுடன் பேச மாட்டேன். திரும்பியும் பார்க்க மாட்டேன்” என்று அந்த உரையாடலை மறைவிலிருந்து கவனித்திருந்த ரெமி கோபமாக உரைத்து சென்றுவிட்டாள்.

சத்யன் சப்தமாக பேசிய வார்த்தைகள் சற்று தொலைவில் இருந்த ரெமிக்கும் கேட்டுவிட்டன என்பது அவனுக்குப் புரிந்தது. அவனுடைய காதல் ஓடம் இப்படியாக கவிழ்ந்து போனது.

துமதியின் புகுந்த வீட்டு வாழ்க்கை இனிதே துவங்கியது. வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் அவள் பார்த்துக் கொள்ள, சீதா சற்று ஓய்வு எடுக்க முடிந்தது. அவருடைய மருத்துவமனையில் சற்று கூடுதல்  நேரம் செலவிட்டார்.  இடைஇடையே சத்யன் சென்னை சென்று தொழிலை கவனித்துக் கொள்ள  நாட்கள் நகரத் தொடங்கின. தீராமல் இருந்த ஒரே சிக்கல் அவளுடைய வழக்கு மட்டுமே. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.