(Reading time: 149 - 298 minutes)

 “சத்யன்.. உன்னிடம்… “ அவளின் தயக்கம் மதுவிற்கு சிரிப்பை வரவழைத்தது. இதைபற்றியெல்லாம் விளக்கமாக பேசும் தைரியம் தனுவிற்கு உள்ளதா என்ன?

“என்னிடம்…?’ என்று கேலியாக விசாரித்தாள். “அதுபற்றி உன்னிடம் சொல்லக் கூடாது. நீ திருமணம் ஆகாத பெண். நல்லப்பெண் இது போன்ற விசயங்களை கேட்கக்கூடாது மிஸ்” என்றாள். அதற்குள் தொலைவில் இருந்து விரைந்து அவள் அருகில் வந்த சத்யன், அவளின் கரம்பற்றி,

“உன்னை மேத்தா சாருக்கு அறிமுகம் செய்ய வேண்டும். வா” தனுவைப் பார்த்து, “மன்னிக்கவும்” என்று கூறி அவளை கூடத்தின் மறுபக்கத்திற்கு அழைத்து… இல்லை… இல்லை தள்ளிக் கொண்டு சென்றான்.

“என்ன பேசிக் கொண்டு இருந்தாய்?” என்று அழுத்தமான குரலில் அவன் கேட்க, அவனுக்குப்பின் சற்று தொலைவில் இருந்தவர்களின் பார்வையிலும் தனுவின் கேள்வி தெரிந்தது. எப்படி சிக்சர் அடிப்பது என்று அவளுக்குத் தெரியாதா என்ன?

அவனுடைய தோளில் கையை போட்டு தலையை சாய்த்து சிரித்தாள். “டார்லிங்…” என அழைத்து இன்னும் நெருங்க, அவன் பயந்து போனான்.  இப்படி நெருங்கினால், அவளை பிடித்து தள்ளும் வாய்ப்பு மிகவும் அதிகமாகிவிடுமே!

“என்ன செய்கிறாய். ஏதாவது தவறாக குடித்து விட்டாயா?”. ஏன் இந்த மனமாற்றம்… அவனுக்குப் புரியவில்லை.

“இல்லை… என்னை விட்டு விலகாதே”

“மது. என்னுடைய பிரச்சினை உனக்கு தெரியுமல்லவா? இத்தனை பேருக்கு முன்னால் பிடித்து தள்ளிவிடப் போகிறேன். உனக்குத் தேவைப்பட்டால், இதனை தனிமையில் முயற்சிக்கலாமே. சற்று பொறுத்திரு”. அவள் சற்றும் முகம் மாறாமல், போதையான சிரிப்பை அவன் மேல் வீசி, மெல்லிய குரலில்,

“லூசாடா நீ. எனக்கு எந்த தேவையுமில்லை. நானே என் கணவனின் மரியாதையை காப்பாற்ற… காதல் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நீயும் உன் மனைவியிடம் அதுபோல் நடி”. அவனுடைய புறங்கையை கெட்டியாக பிடித்து தலையை சாய்த்துக் கொண்டாள்.

அடிப் பாதகி, இப்படியா நடிப்பார்கள். இவ்வளவு அருகில் முகத்தை கொண்டுவராதே… அறைந்துவிடப் போகிறேன்… என்று கண்ணை இறுக்க மூடிக் கொண்டான்.

“என்ன சத்யன், மனைவியை விட்டு ஒரு நிமிடம்கூட பிரியமுடியாது போலிருக்கிறது.” என்ற குரல் அவனை… அல்லது அவளை காப்பாற்றியது.

“அப்படி ஒன்றுமில்லை. நீ இங்கேயே இரு டியர்” என்று அமர்த்திவிட்டு நகர்ந்தான்.

பிறகும்கூட, அந்தப்பாதகி… அவளுடைய கோழிமுட்டை அளவிற்கு விழியை விரித்து அவனை  பார்த்துக் கொண்டேயிருந்தாள். கூடவே உதடு வழிந்த சிரிப்பு வேறு. இதென்ன போஸ்… அப்படியே அள்ளிக் கொண்டு போகிறதே… அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.

“என்ன சத்யன்.. உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் அவ்வளவு காதலா. நொடிகூட பார்வை மாறமாட்டேன்கிறது..” வாசுதேவின் குரலில் பொறாமை தெரிந்தது.

அவனுடைய தொழில் வட்டாரத்தை பொறுத்தவரை, அவனுடன் தொழில்முறை பங்குதாரர் ஆக  நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால், சத்யனின் தனிப்பட்ட வாழ்க்கை பல கேள்விகளுக்குள்ளாவதையும் விரும்பினர். அதெப்படி ஒருமனிதனுக்கு எல்லாமே சிறப்பாக அமைய முடியும்…?  அவனால், ஒரு பெண்ணை உருப்படியாக காதலிக்கவோ திருமணம் செய்து கொள்ளவோ முடியாது என்று நம்பினர், பெண்கள் வட்டாரத்திலோ பெண்களையே மதிக்காத…. திமிர்பிடித்த…. சத்யனை ஒருத்தி காதலித்து மனைவியாக நீடிக்க முடியாது என்று கிசுகிசு உண்டு. ஆனால், இங்கு அத்தனையும் மாறிப்போனது. 

அவனும் அவன் மனைவியும் - அதிலும் ஆரஞ்சு வண்ண லெஹங்காவில் அவள் பேரழகியாக வேறு தெரிந்தாள்- காதலாகி கசிந்துருகியது மனதை பறித்தது என்றால்,.. இருவருடைய ஜோடிப் பொருத்தம் பார்ப்போர் கண்ணை பறித்தது.  அவன்மேல் பிரியம் கொண்ட சிலர் “இப்படியே இருக்க வேண்டும். உன் மனைவியின் சிரித்த முகம் உன் வாழ்க்கையை  நிறைவாக்கிவிடும்” என்று ஆருடம் கூறி வழியனுப்பினர்.

அன்று இரவு அவனுடைய சென்னை இல்லத்தில் இருவரும் தங்கிவிட்டு, மறுநாள் கிளப்புவதாக ஏற்பாடு. மறுநாள் அவனுக்கு ஒரு முதலீட்டாளர்கள் மீட்டிங்கில் கலந்து கொள்ளவேண்டியும் இருந்தது. அதையும் முடித்துவிட்டு கிளம்புவது நல்லது என்று எண்ணினான்.

அவனுடைய சென்னை இல்லம் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தது. மிகுந்த ரசனையுடன் அமைதியாக இருந்தது. அவளைக்கு ஒரு அறையை காட்டிவிட்டு உறங்கச் சென்றான்.

உறக்கம் வருமுன் கண்களில் ஆரஞ்சு வண்ண லெஹங்கா அணிந்தவள் வந்து நின்று கொண்டாள். கண்ணை மூடினாலும் மறையவில்லை. உறக்கத்திலும் விலகவில்லை. இரண்டு முறை கனவில் உருண்டு கட்டிலில் இருந்து விழுந்தடித்ததுதான் மிச்சம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.