மறுநாள் அவளை ஜாக்கிரதையாக இருக்குமாறு பணித்துவிட்டு, மீட்டிங்கில் கலந்து கொள்ள சென்றான். அது அவனுடைய கம்பெனி தொடர்புடையது அல்ல. அவன் முதலீடு செய்திருந்த கம்பெனி தொடர்புடையது. பத்து பேர் சேர்ந்து ஒரு தனியார் நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தனர். மொத்தம் இருபது கோடி மதிப்புள்ள முதலீட்டில் அவனுடைய பங்காக பத்து கோடி போட்டிருந்தான். ஆரம்பித்து ஒரு வருடமாகியும் எதிர்பார்த்த ரிட்டர்ன் வரவில்லை. காரணம் கேட்டால், பெருமளவு பணத்தை ஒரு திட்டத்தில் முடக்கியதால் வந்த வினை என்றனர்.. அன்றைய மீட்டிங்கில் அவன் சற்று காட்டமாக பேசினான்.
“முதலீடு செய்த அளவிற்கு லாபம் கிட்டவில்லை. க்ரானைட் தொழிலில் ஐம்பது சதவிகித லாபம் கிடைக்கும். ஆனால், இங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த பணத்தை என்னுடைய தொழிலில் முதலீடு செய்திருந்தால், இந்நேரம் இருபது சதவிகிதம் லாபம் ஈட்டியிருப்பேன். ஒரே தொழிலில் பணத்தை முடக்கக் கூடாது என்று உங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்தால், ஒரேயடியாக சிக்கிக் கொண்டுவிட்டது. எனக்கு விளக்கம் தேவை அல்லது என்னுடைய இன்வெஸ்ட்மென்டை திருப்பித் தாருங்கள்”
“மிஸ்டர் சத்யன். நீங்கள் சந்தேகப்படவே வேண்டாம். வேலையை ஆரம்பித்து விட்டால், பணம் கொழிக்கும் தொழிலில்தான் முதலீடு செய்துள்ளோம்.” இது மாதவன். அவர்தான் தலைவர்.
“நம்முடைய முதலீடு ஜேடி கிரானைட் மைனிங் நிறுவனத்தில்தான் போட்டுள்ளோம். அது ஒரு புதிய புராஜெக்ட், ஆரம்பித்திருக்க வேண்டியது, சிலரின் எதிர்ப்பால் விசயம் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டது.” இதனை வரதராஜன் கூறினார்.
“ஏன், முறையான அனுமதி பெறவில்லையா…?”
“தம்பி, அது அரசிடம் அனுமதி பெற்ற ஏலத்தில் எடுக்கப்பட்ட குவாரி காண்ட்ராக்ட் ஆகும். ஆனால் சிலர் அதனை தடுக்க முயற்சித்து போராட்டம் நடத்துகின்றனர்”.
“இது போன்ற விசயங்களில், பணத்திற்காக சிலர் தடைபோட முயற்சிப்பார்கள். அவர்களை அழைத்து பேசி செட்டில்மெண்ட் செய்ய வேண்டியதுதானே. அதிலும் மிஸ்டர். வீரய்யன், நீங்கள் அமைச்சரின் மைத்துனர், இதனை எளிதாக செய்யலாமல்லவா.” வீரய்யன் மறுப்பதுபோல் தலையை ஆட்டினார்.
”தம்பி, அரசு சம்பந்தப்பட்ட காரியங்களை நான் வெற்றிகரமாக முடித்துவிட்டேன். எதிர்ப்பவர்களை சரிகட்டுவதை தலைவர்தான் செய்ய வேண்டும்.” தலைவர் அருகிலிருந்தவரை சங்கடமாக பார்த்தார்.
“ஒரே ஆள்தான் பிரச்சினையின் மையப்புள்ளி. சரிகட்ட முயற்சித்தோம் அது தோல்வியடைந்துவிட்டது. மீண்டும் முயற்சிக்கிறோம்” என்று உறுதியளித்தார்.
“இன்னும் இரண்டு வாரங்களில், மீண்டும் சந்திப்போம். அதற்குள் இந்த பிரச்சினை முடிந்திருக்க வேண்டும்.” என்று திட்டவட்டமாக கூறிவிட்டு கிளம்பினான். அவன் தரும் இந்த நெருக்கடி அவனுக்கே வினையாக திரும்பும் என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை.
மதியமே சென்னையிலிருந்து மதுமதியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அவனுடைய நீண்ட மௌனமும் கடுகடுவென்றிருந்த முகமும் மதுமதிக்கு சங்கடத்தை தந்தது. நேற்று அவனை ‘லூசு’ என்றழைத்த கோபமா…? அவனிடம் பேச எண்ணி திரும்புவதும் பிறகு ஜன்னல் வழியாக சாலையை பார்ப்பதுமாக இருந்தாள். ஒரு கட்டத்தில்,
“இன்னும் ஏதாவது திட்ட வேண்டியது மீதம் உள்ளதா?” அவனின் கேள்வியில் திடுக்கிட்டு பார்த்தாள்.
“நிமிடத்திற்கொரு முறை என்னையே பார்த்துக் கொண்டு இருக்கிறாயே. என்ன விசயம்…?”
“இல்லை… ஒன்றும் இல்லையே… அது வந்து அந்த தனவர்சினி என்னிடம்…”
“தெரியும், அவள் என்ன சொன்னாள். நீ என்ன செய்தாய் என்பதெல்லாம் தெரிகிறது. எப்படியோ நாடகமாடி என் மானத்தை காத்துவிட்டாய். உனக்கு கோடானு கோடி நன்றி” கிண்டல் தொனி தெரிந்தது.
“நன்றியெல்லாம் ஒன்றும் வேண்டாம். கோபமாக முகத்தை தூக்கிக் கொண்டு வராமல் இருந்தால் போதும்”
“நான் கோபம் கொண்டால் உனக்கென்ன.”
“ஏனெனில், எனக்கு டாபர்மேன் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்து பழக்கம் இல்லை.”.
“ஏய்…” என்று அவன் குரலை உயர்த்தி காரை நிறுத்தினான். ;எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை நாய் என்பாய்?.”
“இல்லை, அதில்கூட சிரிக்கவே தெரியாத எப்போதடா பாய்ந்து பிடுங்குவோம் என்று காத்திருக்கும் ஒரு வகையைதான் ஒப்பிட்டேன்.” என்று அவள் திருத்தினாள்.
“ஓ… இது வேறயா… முசுடு டாக்கி என்கிறாய்?. லூசு… நாய்… இன்னும் என்ன பாக்கி வைத்திருக்கிறாய்””
“என்னைப் போல் ஒரு பெண் உங்கள் அருகில் வந்தால் என்ன ஏது என்று யோசிக்காமல், கற்பனையை பறக்கவிடுவதா? உங்கள் உளறலை நிறுத்தவே அவ்வாறு சொன்னேன்”
“ஓ… லூசு உளறத்தானே செய்யும்.. உன் காணாமல்போன காதலன் திரும்பிவந்து அதைச் சொன்னால், தெய்வவாக்கு போல் தோன்றுமல்லவா?” அவன் கேள்வியில் கோபம் தெரிந்தது. அவன் அருகில் அமர்ந்திருப்பது ஆபத்து என்று தோன்ற, சட்டென கார் கதவை திறந்து இறங்கினாள்.