(Reading time: 149 - 298 minutes)

 “கல்லூரி நண்பன்..?”

“இல்லை..”

“உறவினனா?” கேட்கும்போதே இல்லையென்று தோன்றியது, அப்படியெனில் அது விக்ரமிற்கும் தெரிந்திருக்குமே. அவர்களுடைய திருமணத்தை தவிர்த்திருப்பானே?

“உன்னுடன் இந்த மலைக்காக போராடுபவனா…?”

“இல்லை” என்று அவள் சொல்லும்போதே மழைதூற ஆரம்பித்துவிட்டது.  நனைவதன் அளவை குறைத்துக் கொள்ளும் வகையில், தலையில் கை வைத்து மறைத்தபடி அவள் நடையை விரைவுபடுத்தினாள்.

“மழையில்   நனைந்தால் உன் தலையில் உள்ள களிமண் கரைந்துவிடும் என்ற ரகசியம் இப்போது வெளிப்பட்டுவிட்டது பார்.” என்று சிரித்தபடியே அவனும் விரைந்தான்.

“மரமண்டை உள்ளவர்களுக்கு அந்த கவலையெல்லாம் இல்லையல்லவா?”என்று பதில் தந்து திரும்பினாள்.

“யாரை மரமண்டை என்கிறாய்? திட்டு வாங்கி முழுதாக இரண்டு  வாரம் ஆகிவிட்டதே என்று நினைத்தேன்.” என்று அவளை நோக்க, அவன் பின்னே தொலைவில் இடிஇடித்ததில்  கண்களை சற்று மூடித் தடுமாறினாள்..

வழக்கம்போல் அவன் அவளை தாங்கிப்பிடிக்க, முழநீள இடைவெளி குறைய, மிக அருகில் தெரிந்த அவள் முகத்தில் மழைத்துளி கோலமிட, அவனுள் நினைவு மின்னல் வெட்டியது. இதுதான் அவனின் மனம் மறைத்த ரகசியமா? அது அவனது இளவயது ரகசியம். அவளை இறுக பற்றிய அவனுக்கு இப்போது வெறுப்பு தோன்றவில்லை. உடல் பதறவில்லை. அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும் முடியும் என்று தோன்றியது. ஆனால், அவனுடைய கொள்கை முடிவிற்கு இது எதிரானதல்லவா? அவளை பிடித்து விலக்கியவன், தன்னுடைய நடையை தொடர்ந்தான். அவள் குறும்பாக சொல்லிக் கொண்டாள்.

“இப்போதும் என் கன்னம் தப்பிவிட்டது. நல்ல நேரம்தான்”.

“சரி, நீ அவன் யார் என்று சொல். எனக்கு முக்கியமாக தெரிய வேண்டும்.”

“முடியாது…”

“உன்னுடைய வனமலையை நான் காப்பாற்றுவதாக உறுதியளித்தாலும் கூற மாட்டாயா?”

“நீங்கள் எப்படி …?”

“என்னால் இதனை அரசியல் மேலிடத்திற்கு கொண்டு செல்ல முடியும். கொள்கை முடிவாக இதனை செயல்படுத்த செய்யவும் முடியும். என்னை நம்பினால் என் கேள்விக்கு பதில் கூறு”

”எனக்கே அவர் யாரென்று தெரியாது. நான்  கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகி சுயநினைவு இல்லாமல் இருந்தபோது யாரோ ஒருவர் என் கையை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தார். எனக்கு யாரென்று தெரியவில்லை. ஆனால் அந்த குரலில் மிகுந்த வசீகரம் இருந்தது. அதில் அன்பு தெரிந்தது.” குரல் கமற தொடர்ந்தாள்,

“யாரையாவது பார்த்தால்தான் காதல் வரவேண்டும் என்று இல்லை, எனக்கு அந்த குரல்மீது நம்பிக்கை வந்தது. உண்மையில் அந்தக் கையை வாழ்நாள் முழுவதும் பற்றிக் கொண்டு இருக்க நினைத்தேன். இது காதல்தானே?. மனதளவில் இவ்வாறு நினைத்துவிட்டு வேறு ஒருவனை மணப்பது என்னால் முடியாது காரியம். இன்னும்கூட  என் கைகள் அவரின் பிடிக்குள் இருப்பதை உணர முடிகிறது. அந்த கைகள் மூலம் பரவிய மிதமான வெப்பச்சூடு இன்னும் எனக்குள் நினைவிருக்கிறது. அதை மறக்க முடியாது. மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இது போதும் என்று தோன்றுகிறது.. இதுதான் என் காதல் கதை. நீங்கள் என்னை இத்துடன் விட்டுவிடுங்கள்” என்று கண்கலங்கியவள், வீட்டிற்குள் விரைந்து சென்றுவிட்டாள்.

வெளியே மழை வலுத்துவிட்டது. அவனுக்குள் ஏதோ ஒரு வேதனை கிளம்ப,  உள்ளே செல்ல விரும்பாமல், வாசலிலேயே அமர்ந்துவிட்டான்.  அவனின் நிலை அறிந்து மொத்த மேகக் கூட்டமும் வாசலில் கூடி நின்று மழையை பெய்து அவனை குளிர்விக்க முயற்சித்தன. அவனை நனைத்து உடலை குளிர வைத்த மழை அவன் மனதையும் குளிர வைக்குமோ? அவனின் மனம் கவர்ந்தவள் அவனையே காதலிக்கிறாள். வாழ்நாள் முழுவதும் அவன் யார் என்று தெரியாவிட்டாலும் அவனை நேசிப்பாள். அவளின்  நித்திய பூஜையும் வேண்டுதலும் அவளுடைய மனம் கவர்ந்தவனின் நலனுக்காக என்று அவள் முன்பு ஒருமுறை கூறியதும் நினைவிற்கு வந்தது. இதைவிடுத்து அவன் வேறு எங்கே செல்வான்?

ஆனால், அவன்தான் அவளுடைய முதல் எதிரி என்று தெரிய வந்தால், காறி உமிழ்ந்துவிடுவாள். அவளுடைய மண்பாசம் அப்படிப்பட்டது.  இறைவா, இந்த சுழலில் என்னை இந்த முறை காப்பாற்றிவிடு. வாழ்நாள் முழுவதும் உன் புகழ் பாடுவேன். என்று தூரத்தில் தெரிந்த மின்னலை இறைவன்  நீட்டிய அபயகரமாக நினைத்து வேண்டிக் கொண்டான்.

இரவு படுக்கையில் படுத்தபின்னும் தூக்கம் வரவில்லை. அவனுக்கு இரண்டு விசயம் விளங்கிவிட்டது. ஒன்று அவனுடைய பெண்ணை பிடித்து தள்ளும்  பிரச்சினைக்கு காரணம், அவனுக்கு அப்போது பதினெட்டு வயது இருக்கும். ஒரு  நண்பன் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.