(Reading time: 149 - 298 minutes)

 அது ஒரு கிராமம். மஞ்சள் வெயிலடித்த ஒரு மதிய வேளையில் ஏரிக்கரை பக்கம் குளிப்பதற்காக சென்றிருந்தான். அப்போது ஏரிமடுவின் கரையிலிருந்து ஒரு சிறுமி அல்லது சிறுபெண் தவறி நீரில் விழுந்துவிட்டாள். விரைவாக நீரில் பாய்ந்து அவளை கரை சேர்த்தான். நீரை குடித்து மயங்கி இருந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை செய்தான். செயற்கை சுவாசம் தந்து அவளை மூச்செடுக்க செய்தான். அவள் நன்றி தெரிவித்து தடுமாறியபடியே அவ்விடம் விட்டு அகன்றாள். மிகவும் சாதாரண விசயம், அதை வருடக் கணக்காக அவனுக்குள் உறைய விட்டது அவனுடைய கிராமத்து நண்பனின் பேய்க் கதைதான்.

அந்தபெண் அவ்விடம் விட்டு அகன்றதும், அவன் தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு  நண்பனின் வீட்டை  நோக்கி விரைந்தான். செல்லும் வழியிலேயே அவனை பார்த்துவிட, சைக்கிளைவிட்டு இறங்கி அவனுடைய சாகசத்தை கூறிக் கொண்டே  நடந்தான். “சத்யா, எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது. நாம் ஒரு முறை ஏரிக்கரைக்கு சென்று பார்த்து வருவோமா. அவள் வெகு தொலைவு சென்றிருக்க வாய்ப்பில்லை” என்று கூற, அவனும் சம்மதித்து கிளம்பினான். அங்கே அவன் குறிப்பிட்டபடி அவளைக் காணவில்லை. அதுவும் அவள்  நடந்துதான் சென்றாள். கண்ணுகெட்டிய தூரம்வரை அவளைக் காணவில்லை.

“இங்கேதான் பச்சை நிற உடையணிந்து நின்றாள்” என்று சத்யன் விளக்க,

“அது பச்சை உடை இல்லைடா. பச்சை நிறத்தில் இருந்திருப்பாள் மத்தியான வேளையில் பச்சை மோகினிப் பேய்தான் ஏரிக்கரைக்கு வரும்.  நம்மை போன்ற வயசுப் பசங்களை பார்த்தால் விடாது. மீண்டும் இரவில் வந்து அவனை பார்க்குமாம். காதல் கொள்ளுமாம்” ” அவன் நண்பனாகப்பட்ட கிராதகன் அவனை பயமுறுத்த,

இது போன்ற கதைகளை சத்யன் நம்பவில்லை என்றாலும், தனித்து உறங்கிய அந்த இரவின் அமானுஸ்யம் அவளின் நீரில் நனைந்த முகத்தை கனவாக நனவாக காட்டி மிரட்டியது. ஒரு கட்டத்தில் அவனுக்கு குளிரெடுத்து சுரம் வந்துவிட்டது. அந்த மோகினிக் கதை நண்பனின் வீட்டினர் சாமியாடியை வரவழைத்து பூஜை போட்டு மேலும் அவனை பயமுறுத்தினர்.. மோகினியின் பிடியிலிருந்து தப்பிக்க அவன் மறுநாளே மும்பைக்கு கிளம்பி சென்றுவிட்டாலும், தொடர்ந்து இரவு வேளையில் அந்த  நீர் கோலமிட்ட முகம் வந்து அவனுள் பதிந்துவிட்டது. அதுதான், அவன் வளர்ந்த பின் எந்தவொரு பெண்ணும் அவனிடம் நெருங்கும்போது பரிட்சயமான  அந்த முகத்தை தேடி… ஏமாந்து… வெறுப்பை கிளப்பி அடித்து தள்ளிவிட்டது. இதுதான் அவனின் சைக்கோ கதை. இப்போது மதுமதியின் மழையில் நனைந்த முகத்தை பார்க்கவும் நினைவு வந்துவிட்டது.

(ஆனால், அவனுக்கும் தெரியாத இன்னும் ஒரு ரகசியம் உள்ளது. அந்த விவரம் அவனுக்கு எப்போதாவது தெரியும்போது  நாமும்  தெரிந்து கொள்வோம்.) 

அந்த இரண்டாவது விசயம், மதுமதியின் காதலன் அவன்தான் என்ற விடையும் அவனை சிந்திக்க வைத்தது. இப்போது அவன் தன்னுடைய கொள்கை முடிவின்படி அவளுடன் சேர்ந்து வாழ்ந்து வாழ்நாள் முழுவதும் அவளை பத்திரமாக கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள. வேண்டும். இந்த மலை… குவாரி… கிரானைட்… சிக்கலையும் தீர்க்க வேண்டும். அதற்கொரு வழி கண்டுபிடிக்க வேண்டும். இதற்கிடையில் அவனும் இந்த மலைவெட்டி குரூப்பில் ஒருவன் என்பது மதுவிற்கு மட்டுமல்ல அவன் குடும்பத்தில் யாருக்கும் தெரியக் கூடாது. சிக்கல் தீர்ந்தபின் அவன்தான் அவள் தேடிய மதுவின் சந்திரன் என்பதை புரியவைக்க வேண்டும். அந்த  நேரம் அவன் வாழ்க்கையிலேயே முக்கியமான நொடியாக அமையும் என்பது உறுதி. அவனுடைய… அவளுடைய இத்தனை நாட்கள் தவம் முடிந்து சொர்க்கத்திற்குள்  நுழையும் காலம் அதுவாக இருக்கும். அவனின் இதழில் ஒரு புன்னகை பரவியது.

 ஆனால், அவன் திட்டமிடும்வரை காலம் காத்திருக்காது அல்லவா? திடீர் திருப்பங்களை தந்து ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணத்திலும் நவரசம் குறையாமல் பார்த்துக் கொள்வது விதியின் வேலை. அது  சத்யசந்திரனிடமும் இறங்கி நின்று வேலை பார்த்தது.

துமதியின் வழக்கின் விவரம் தெரிந்த அந்த கோமா குற்றவாளியும் நினைவு திரும்பாமல் இறந்துவிட, சத்யனுக்கு தான் காப்பாற்றப்பட்டுவிட்டதாக தோன்றியது. ஆனால், ரெமியின் பிறந்தநாள் பரிசாக நகை வாங்க பிரபல நகைக்கடைக்குள் மதுமதியுடன் சென்ற அவனை பார்த்து வீரய்யனின் வடிவில் விதி சிரித்தது. அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நெக்லஸ் எதுவுமே பிடிக்காமல் மதுமதி தலையை ஆட்டி திருப்தியின்மையை வெளிக்காட்டிட, அவன் வேறு நகைகளை காட்டச் சொல்லிக் கொண்டிருந்தான். 

“தம்பி, வணக்கம். நல்லாயிருக்கீங்களா?”, அவனிடம் பேசிக் கொண்டே அருகிலிருந்த மதுமதியை கேள்வியாக பார்த்தார்.. வீரய்யனின் வணக்கம் அவனை அதிர வைத்தாலும் அப்போதுகூட  நிலைமையை சமாளிக்க முடியும் என்று சத்யன் நம்பினான். கடையின் மேற்பார்வையாளர் அவன் அருகில் வந்து,

“சார், அங்கே எடுத்து வைத்திருக்கும் நகைகள் உங்கள் மனைவிக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். வாருங்கள், மேடம்”.

 வீரய்யனின் பிரவேசத்தால் குழம்பியிருந்த மதுமதி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நகைகளை பார்வையிட ஆரம்பித்தாள். அவள் கவனிக்கவில்லை என்று நினைத்த வீரய்யன் சத்யனிடம் உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.