(Reading time: 149 - 298 minutes)

அதுவரைக்கும் சத்யனுக்கு நிலைமை சாதகமாகவே இருந்தது. மதுமதிக்கு அனைத்தையும் புரிய வைத்துவிடலாம் என்று நினைத்தான். வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் வருகைக்காக கோர்ட் அறைக்கு வெளியில் காத்திருந்தனர்.

“உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்…” என்று அவன் ஆரம்பிக்கையில், அங்கு முத்தண்ணன் உடன் விக்ரம் வந்தான்.

“நன்றி சார். சாட்சி சொல்ல மதும்மாவை அழைத்து வந்ததற்கு. வாருங்கள் உள்ளே செல்வோம்” என்று அழைத்தார்.

“நீ அவர்களுடன் செல்.” என்று அனுப்பிவைத்தான்.

இந்த வழக்கு தொடர்புடைய மற்றவர்களும் அங்கு வந்துசேர, விக்ரமுடன் மதுவும் அவர்களுடன் சென்றாள். கோர்ட் ஹாலில் ஒரு புறமாக அமர்ந்தனர் பதிமூன்றாவது வழக்காக அவர்களுடையது இருந்த்தது. திடீரென்று அருகில் வந்த அவர்களுடைய வழக்கறிஞர்,

“இன்றைக்கு நம்முடைய வழக்குடன் தொடர்புடைய இன்னும் இரண்டு வழக்குகளும் வந்துள்ளன. அவற்றை ஒன்றாக விசாரிக்கப் போவதாக நீதிபதி கூறிவிட்டார்.. எனவே, இந்த விரைவில் நம்மையும் அழைத்துவிடலாம்.” என்றவர்,…அப்போது  நீதிமன்றத்தினுள் நுழைந்த ஒரு வழக்கறிஞரை பார்த்து. “இவர் இங்கு என்ன செய்கிறார்” என்றார்.

“யார் அவர்?” வினவிய விக்ரமிடம்,

“இவர் புகழ்பெற்ற லாயர். டெல்லியை சேர்ந்தவர். சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுவார். மிகப் பெரிய அரசியல் வழக்குகள் பலவற்றை  நடத்தியுள்ளார். காஸ்ட்லியான வக்கீல்” என்றார். அவருடைய வழக்குதான் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

“யுவர் ஆனர், நீதியரசருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் தீபக் சர்மா. இந்த வழக்கிற்காக வாதாடப் போகும் வழக்கறிஞர். இதோ அதற்கான டாக்குமென்ட்ஸ். என்னுடைய தரப்பை நான் விளக்க ஆரம்பிக்கலாமா மை லார்ட். ”

“யெஸ் மிஸ்டர் சர்மா. நீங்கள் தொடங்கலாம்.”

“நன்றி மை லார்ட்.. இந்த வழக்கினை அரசிற்கு எதிராக மலைமைந்தர்கள் என்ற ஒரு அமைப்பு தொடர்ந்திருக்கிறது. இந்த அமைப்பின் சார்பாக நாடு முழுவதும் மலையினில் உள்ள வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அதேபோலவே வனமலையின் பாதுகாப்பிற்காக இங்கும் தொடர்ந்துள்ளோம்.  வனமலையில் கிரானைட் குவாரி அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்டிருக்கிறது.  ” என்றவர் தொடர்ந்து,

“இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வனமலை ஒரு சிக்கலான புவியியல் அமைப்பை கொண்டிருக்கிறது. மலையின் பெரும்பகுதி மண் படிமங்களால் ஆனது. பொதுவாக மண் படிமங்களால் ஆன மலையில் மண் சரிவு ஏற்படுவது சகஜம். இங்கு அப்படி இதுவரை நடைபெறாததற்கு காரணம் அதனுடைய அடிவாரத்தை சுற்றி அமைந்துள்ள கிரானைட் குன்றுகள்தான்.  அவற்றின் கடினமான கட்டமைப்பு மலையின் சரிவுகளை பலப்படுத்தி உறுதியாக வைத்துள்ளது. அங்கு பூர்வீக குடிகள் மற்றும் சிறிய எட்டு கிராமங்களை சேர்த்து மொத்தம் இருபதாயிரம் பேர் வசித்து வருகின்றனர்.   இந்த மலையில் வெடி வைப்பதற்கும் கனரக இயந்திரங்களை பயன்படுத்துவதற்கும் தடை ஏற்கனவே உண்டு.  இப்போது இதுபோன்ற குவாரிகளை அனுமதித்தால், வனமலைக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது என்று எங்கள் அமைப்பு கருதுகிறது.”

“இதற்கான எழுத்துபூர்வ ஆதாரங்கள், உத்தரவுகள் ஏதேனும் உள்ளதா?”

“மை லார்ட், அவற்றை சமர்பிக்கவும், இது தொடர்பான ஒரு முக்கிய சாட்சியை இங்கு ஆஜர்படுத்தவும் எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தேவை. தயவு செய்து அதற்கு அனுமதிக்கவும்”. எதிர்தர்ப்பு வழக்கறிஞராக இருக்கும் அரசு வழக்கறிஞரை பார்த்து,

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.?”

“நன்றி யுவர் ஆனர். எதிர்தரப்பு நண்பர் குறிப்பிட்ட தடையுத்தரவு மலைமேல் மட்டுமே செல்லக் கூடியது. இங்கு கிரானைட் குவாரி அமையப்போவது மலைக்கு சற்று தொலைவில்தான். அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது என்ற ஜியாலஜிக்கல் ரிப்போர்ட்டை ஏற்கனவே கனிம வளத்துறை சமர்பித்துள்ளது. அதையும் நண்பர் படித்துபார்த்து தெளிவு பெறவேண்டுகிறேன். அவருக்குத் தேவையான அவகாசத்தை வழங்குவதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை மை லார்ட்”

“மிஸ்டர்.சர்மா, உங்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன். இந்த வழக்கின் அடுத்த ஹியரிங்கை பத்து நாட்கள்  கழித்து, பிப்ரவரி மாதம் இருபதாம் தேதியில் வைத்துக் கொள்ளலாம்.”

இந்த புது வரவை வனமலை பாதுகாவலர் அமைப்பு குழப்பமாக பார்த்தது. அவர்கள் ஜேடி மைன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து தொடர்ந்திருந்தார்கள். ஆனால் இந்த வழக்கு அரசை எதிர்த்து தொடங்கியுள்ளனர். அதற்குள் தீபக் சர்மாவின் விவரங்களை இணையத்தில் தேடி பார்த்துவிட்ட மதுமதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.