(Reading time: 149 - 298 minutes)

 சத்யசந்திரனுடைய அப்பாவிற்கு அவனிடம் மிகுந்த பிரியம் உண்டு. அவன் அவரை விலக்கியதன் காரணம், அவருக்கும் சீதாவிற்கும் இடையில் அவன் ஒரு சிக்கலாக இருக்க விரும்பவில்லை. உண்மையில் விஸ்வநாதன் மணம் புரிய விரும்பியது சீதாம்மாவைத்தான். அவருடைய சீனியரின் மகளான அவன் அன்னை மேகலாவிற்கு இந்த விவரம் தெரிந்தும் தந்தையின் பாசத்தினை பயன்படுத்தி விஸ்வநாதனை மணந்து கொண்டாள். அந்த பாவத்தின் விளைவாக சத்யாவிற்கு  ஒரு வயதாகும் போது மூளைகாய்ச்சல் வந்து இறந்துவிட்டாள்.

பிறகு சீதாவின் தந்தையான விஸ்வநாதனின்  தாய்மாமன், விஸ்வநாதனுக்கு இரண்டாம் வாய்ப்பு தந்து திருமணம் செய்துவைத்தார். இருந்தாலும் சத்யாவை முன்வைத்து மேகலாவின் தந்தை அடிக்கடி சீதாவிடம் சண்டையிட ஒரு கட்டத்தில் அவன் வெறுத்துபோய் தன்னுடைய எட்டாவது வயதில் தந்தையை ஒதுக்கி தாத்தாவுடன் சென்றுவிட்டான். அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் தலையிட விரும்பியதும் இல்லை. தாத்தா இறந்தபின் தந்தையுடன் செல்ல விரும்பினாலும் ஏதோ ஒன்று தடுத்துவிட்டது.

மற்றபடி, அவன் அங்கு வந்தது மதுமதிக்காக மட்டுமே. அவன் அறியாமலே அவனின் உள் மனம் அந்த பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அன்று காலையில் தனவர்சினியை மிக அருகில் பார்த்தபோது அவனுக்கு அந்த பழைய வெறுப்புணர்ச்சி தோன்றிவிட்டது. அவன் மனதில் மதுவிற்கு மட்டுமே இடம் உண்டு என்பதையும் மதுமதிக்காக என்னென்ன செய்துள்ளான் என்பதையும் அவருக்கு புரிய வைப்பான்..

வீட்டிற்கு திரும்பிய விஸ்வநாதன் மதுமதியிடம் “உங்கள் இருவரையும் பார்க்கும்போது இப்படியே இணைந்து இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் அவன் ஒரு…. நீ அவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் தந்துவிடும்மா. இதுபோன்ற துரோகத்தை என்னால் மன்னிக்கவே முடியாது.”  என்று கடுமையாக கூறினார்.

“மாமா, இந்த வழக்கு முடியட்டும் நானே அதனை செய்வேன். அதற்கு முன் சத்யனின் மனைவி என்பது எனக்கு ஒரு பிடிமானத்தை தரும். வனமலைக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதை புரிவைப்பேன்” என்று உறுதியாக உரைத்தாள்.

அவர், அவள் கூறியதை ஒப்புக் கொண்டு அறைக்கு சென்றார். சத்யனின் செயலை மன்னிக்க முடியாமல், அலைபாய்ந்து கொண்டிருந்தார். துரோகம் என்பது ரத்த சம்பந்தமுடையது போலும். அந்தப் பெண் மதுமதி தெளிவான உறுதியான நோக்கமுடையவள். அதனால், அவள் இதனை தாங்கிக் கொண்டாள். என்று எண்ணினார்.

ஆனால், மதுமதிக்கும் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவள் அவனை நம்புவதா வேண்டாமா?   அவனின் மனைவியாக அவள் நீடிப்பாள் என்று நம்பவில்லை. ஆனால், வனமலையை காப்பாற்றுவதாக கூறினானே அதனை காப்பாற்றினாலும் போதும் என்று தோன்றியது.  வேறு எதையோ  நினைவூட்ட எத்தனித்த மனதை திட்டி அடக்கிவிட்டு அமைதியானாள்.

அங்கு வந்த  நித்யனும் ரெமியும் “இது உண்மையா?” என்றனர். அவள் ‘ஆமாம்” என்றாள்.

“நான் என்ன நினைத்தேன் என்றால். அன்று மழையில் நனைந்தபடி நீங்கள் இருவரும்…. உண்மையிலேயே ஒரு அன்பு உருவாகிவிட்டது என்று எண்ணினேன். அண்ணன் இப்படி செய்வார் என்று எனக்குத் தோன்றவில்லை. மீண்டும் உங்களைத் தேடி வருவார்”

“காலையில் என்ன நடந்தது என்று தெரியாமல் உளறக் கூடாது. அவர் என்னைத் தேடி வருவார். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க….”

“அண்ணி….”

“இன்னும் என்னை ஏன் அப்படி அழைக்க வேண்டும். மதுமதி என்றே கூப்பிடலாம். நித்யன்… உன் அண்ணன் என்னிடம் வரும்போது நான் என்னுடைய பேரத்தை ஆரம்பிப்பேன்.”

“இதெல்லாம் சரியா…”

“வியாபாரத்தில் வெற்றுகை வீச நான் தயாரில்லை. அவர் மட்டும்தான் வியாபாரியா..?”

“அவனுக்கு உன்னிடம் உண்மையான அன்பு இருப்பதை நான்  நிறைய சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன். அது எல்லாவற்றையும் சரி செய்யும்” . அங்கு வந்த விக்ரம் கூறினான்.

“அப்படியே ஆகட்டும்” என்று கை நீட்டி ஆசிர்வதித்தாள். சத்யனை ஆதரித்ததால் அவளுக்கு வந்த கோபம் புரிந்து மற்றவர்கள் வெளியே கிளம்பினர்.

அப்போது அவளுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. தனவர்சினி…!

“கதை முடிந்துவிட்டது தெரியுமா? இனி உன்னால் ஒரு உபயோகமும் இல்லை தெரிந்துவிட்டது. சத்யன் வெளிநாட்டு பயணத்திற்கு தயாராகிவிட்டார்….. என்னுடன்தான்.”

“சரி, ஊர் சுத்துவதற்குகூட என்னிடம் அனுமதி பெறவேண்டுமா என்ன?”

“நான் அனுமதி ஒன்றும் கேட்கவில்லை. விவரம் கூறுகிறேன். நாளை காலையே அவன் வருவானா.. என்று காத்திருப்பாயல்லவா, அதற்காக தெரிவித்தேன்”

“ஆயிரம் கழுதையுடன் ஊர் சுற்றினாலும் கடைசியில் என்னிடம் வந்து நின்றுதானே ஆக வேண்டும்.  மஞ்சள் தண்ணி தெளித்து வீட்டிற்குள் அழைத்துக் கொள்வேன். இதெல்லாம் உனக்குத் தெரியாதா.. நான்தானே அவருடைய வொய்ப்பூ” கிண்டலாக கூறினாள். மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. மதுமதி சிரித்துக் கொண்டாள்.

சாப்பாட்டு மேஜையில் வழக்கம்போல உணவருந்திய  அவளை சீதாம்மா கவலையுடன் நோக்கினார். “உனக்கு ஒன்றும் இல்லையா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.