(Reading time: 149 - 298 minutes)

த்யன் சொன்னது போலவே, விஸ்வநாதனின் முகத்தில் அமைதி தெரிந்தது. சற்று அமைதியாக காணப்பட்டார். மறுநாள் குடும்ப வக்கீலை சென்று சந்தித்துவிட்டு வந்தார். இரண்டாம் நாள் எங்கேயோ சுற்றிவிட்டு வந்தார். வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் அலைப்பேசியை போல குத்திட்ட பார்வையுடன் உறைந்து அமர்ந்திருந்தார்.

“என்ன விஷயம் விஸ்வா?” என்று சீதா வினவ,

“மதுமதி சத்யனிடம் பிரியமாக இருப்பதுபோல் தெரிகிறது. அவனுடன் ஃபோனில்  பேசும்போது முகம் சிவந்து வெட்கப்பட்டாள். ரொம்ப அழகாக இருந்தது. அவள் இதுவரை தனக்கென்று எதையுமே எதிர்பார்த்ததில்லை. அவள் வாழ்க்கையிலும் எத்தனை சூறாவளிகள் வீசிவிட்டன. உண்மையில் சத்யன் மதுமதியை மனைவியாக ஏற்றுக் கொண்டான் என்றால், அவன் விதிக்கும் எந்தவித நிபந்தனைக்கும் நான் ஒப்புக் கொள்வேன்.”

“நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். சத்யனை ஒரு வயதிலிருந்து எட்டு வயதுவரை வளர்த்தவள் நான்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவன் சிக்கலை சரி செய்வான்”

“நான் எப்படி நம்ப முடியும்?. இத்தனை நாட்கள் நம்மை பாராமல் இருந்துவிட்டு இப்போது திடீரென்று வந்த நின்று, மதுமதியை திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அவனுக்கு ஏற்கனவே ஒருத்தி இருக்கும்போது… இது நம் கண்ணை கட்டும் நாடகம்தானே?”

“அவன் நமக்காக வரவில்லை. மதுமதிக்காகவே வந்திருக்கிறான் என்று எனக்கு தோன்றுகிறது.ம்…  நான் ஏன் அப்படி சொல்கிறேனென்றால்… என்னுடைய தோழி மருத்துவர் சாரதாவிடம்…”

“யார், உன்னுடன் மருத்துவம் படித்த பெண்தானே?. அங்கே சென்னையில் அரசு மருத்துவராக இருக்கிறாரே…”  

“அவளேதான். உடல் நலம் பாதிக்கப்பட்ட உறவினரை பார்க்கவென்று மருத்துவமனைக்கு வந்திருந்தாள். எனக்கு மதிய உணவு கொண்டு வந்த நம் மதுமதியை பார்த்துவிட்டு இந்தப் பெண் நலமாக இருக்கிறாளா என்று கேட்டாள். நானும் விபத்திற்குபின் என்னிடம்தான் சிகிச்சை பெற்றாள் என்றேன்”

“சரி அதெற்கென்ன…?”

“மது விபத்தில் சிக்கி சுயநினைவில்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது அவள்தான் சிகிச்சை அளித்திருக்கிறாள். அது ரகசியமான விசயம் என்றாள்..” சீதா இந்த விவரத்தை கூறும்போது,  மதுமதி அவரை அழைக்க வந்தாள். அவளுடைய பெயர் அடிபடவும் சப்தம் கிளப்பாமல் திரும்ப எத்தனித்தாள்.

“மதுவிற்கு உறுதுணையாக ஒருவன் அங்கு ஒரு வாரம்வரை இருந்து அவளின் உயிரை காப்பாற்றியிருக்கிறான் சாலையோரத்தில் கிடந்த அவளை தூக்கி வந்து சேர்த்தது முதல் மதுவை பிழைக்க வைக்க மிகுந்த முயற்சியெடுத்திருக்கிறான். முன்பின் தெரியாதவளுக்காக அவன் ஏன் அவ்வாறு சிரமப்பட வேண்டும்.” இதை கேட்கவும் மதுமதி அப்படியே நின்றுவிட்டாள். அவளுக்கு நினைவிருக்கின்ற ‘அவன்’…

“ஏனாம்..?” விஸ்வநாதன் கேட்க,

“தெரியவில்லை. ஆனால் அவள் சொன்ன அவனின் அங்க அடையாளங்கள் சத்யனை எனக்கு நினைவூட்டின.. மேலும் அவள் எளிதாக ஒரு விஷயத்தை கூறினாள். உயரமும், நடையும் புருவம் உயர்த்தி தோரணையாக பேசியதும் ஜட்ஜ் சாரை நினைவூட்டியது என்றாள்.”

“நீ என்ன சொல்ல வருகிறாய்…. ஆதி முதல் அந்தம் வரை மதுமதியின் விபத்து கதையில் அவன்தான் இருந்திருக்கிறானா?”

“அப்படி உறுதியாக சொல்ல முடியாது. அவள் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் என் மருத்துவ மனைக்கு வரும்போது சத்யன் புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறேன்.”

கேட்டுக் கொண்டிருந்த மதுமதிக்கு ஒரு புதிரை அவிழ்த்துவிட்ட உணர்வு வந்தது. அவள் உள் மனம் அது அவன்தான்… அவன்தான்  சந்தேகமேயில்லை அது சத்யன்தான் என்றது. இப்போது நினைவுபடுத்தி பார்த்தால்… அந்த தொடுஉணர்ச்சியும் அவளை மயக்கிய அந்த மென்மையான குரலும் சத்யனுடையதுதான் என்று தோன்றுகிறது. ஆனால், அப்படி இருந்திருந்தால் இந்நேரம் அதனை அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி இருப்பானே? ஆனால், அவன் அவளிடம் எதையுமே கூறவில்லையே, ஏன்?.

சில எண்ணங்களும் அவளுக்கு வந்தன. அவனே ஆள் வைத்து அடித்துவிட்டு அவனே காப்பாற்றவும் செய்வானா? அவன் அவளை  நெருங்குவதற்கு தர்மப்படி… அறிவியல்படி…. உலகவியல்படி எந்த ஒரு காரணமும் கிடையாது.  ஒருவேளை மதுவின் எதிர்காலத்தை பணயம் வைத்து எதிர்ப்பவர்களை சரிகட்ட முயற்சிக்கிறானா? 

சீதாம்மாவின் தோழி சாரதா சொல்லியதுபோல் இரண்டு நாட்கள் கழித்து வரவில்லை. அவளுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பி கேட்கலாம் என்றால், அந்த ஆதிகாலத்து அம்மணி ஆன்டிராய்ட் அலைப்பேசியை வைத்திருக்கவில்லை. வேறு யாரிடமும் இந்த விசயம் பரவக்கூடாது, பிறகு மதுமதிதான் ‘தேவி’ என்று அனைவருக்கும் தெரிந்துவிடும். முக்கியமாக மீடியாக்களுக்கு.  எனவே இப்போதைக்கு அமைதியாக இருப்பதுதான் சரியானது என்று நினைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.