(Reading time: 149 - 298 minutes)

 ‘சீதாவுடைய ஊகம் சரியென்றால், அவன் அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியே வந்திருக்கலாமே.  குவாரி  நடத்த  அனுமதி கோரி ஏன் புதியதாக வழக்கு தொடர வேண்டும்.’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட  விஸ்வநாதனுக்கும் அதே காத்திருத்தல் நிலைதான்...

மதுமதியோ, சத்யன்தான் அவளை காப்பாற்றியவன் என்பதை இன்னும் நம்பவில்லை. ஒருவேளை அது அவனாக இருந்தால்…   அவளிடம் காட்டிய அக்கறை ஒருவிதமான உரிமையாக இருக்கலாம்.. சிறிய வயதில் களிமண் பிடித்து ஒரு பொம்மையை செய்து விளையாடியபோது அந்த பொம்மையின் மேல் அவளுக்கு ஏற்பட்ட படைப்பின் உரிமையை அவளிடம் கொண்டிருக்கிறான். அந்த பொம்மை உடையாமல் நிறம் மாறாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள். அதுபோலவே அவனும் அவளை  பார்க்கிறானோ. ஆனால், அவள் இவ்வாறு நினைப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவள் மனம் விரும்புகிறது அவ்வளவே… .அவளுடைய ஊகம் சரியா என்பதை தெரிந்து கொள்ள அவளும் காத்திருக்க வேண்டியதுதான்.

னைவரும் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. முத்தண்ணன் வந்து “நீ வரவேண்டாம் அம்மா. வாழும் வயது இதிலிருந்து ஒதுங்கி இரம்மா” என்று சொன்னார். அவரையும் மிரட்டிவிட்டானா?

“அண்ணே நான் வருவேன். அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வேன்.. என்னாலான முயற்சிகளை செய்வேன்.”

“நீ உன்னால் முடிந்த அத்தனையையும் உயிரை பணயம் வைத்து செய்துவிட்டாய். போதும் இனி உனக்கு ஒரு ஆபத்து வருவதை நாங்கள் விரும்பவில்லை. ஜட்ஜ் ஐயா, நாம் மட்டும் போகலாம்” அவர் விஸ்வநாதனை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். சத்யன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?  

அவள் கோபமாக சத்யனுக்கு அலைப்பேசியில் அழைப்பு விடுத்தாள். “இது என்ன திட்டம் சத்யன். எனக்கு ஆபத்து என்று மிரட்டியிருக்கிறீர்கள்.”

“உனக்கு ஆபத்தா…? அப்படி நான் எதுவும் சொல்லவில்லை. அவ்வாறு சொல்வது என்னுடைய திறமையை நானே குறைத்து மதிப்பிடுவதுபோல். மனைவியைக்கூட காப்பாற்ற முடியாதவனா நான்… உண்மையில் நீ இன்று அங்கு வரவேண்டும் என்றுதான் நினைத்தேன். உன்னுடைய போராட்டம் வெற்றி பெற்றதை  நீ கொண்டாடுவதை கண்கூடாக பார்க்க நான் நினைத்தேன்”.

‘அவள் வெற்றி பெறுவதா… அவன் ரசிப்பதா… ஆகாயத்திலிருந்து ஐஸ்கட்டிக்கு பதிலாக ஐஸ்கிரீம் மழையே பெய்துவிடாதா?’ அவள் எண்ணும்போதே,

“நான் உடனே அங்கு வருகிறேன். உன்னை அழைத்துச் செல்கிறேன். தயாராக இரு”. சொன்னபடி கால் மணி நேரத்தில் அவன் கார் வாசலில் வந்து நின்றது. அவன் கடைசி நிமிட முயற்சி எதுவும் செய்கிறானோ என்று பயந்த அவள் அவனுடன் செல்ல மறுத்துவிட்டாள்.

“நான் வரமாட்டேன். தேவைப்பட்டால் ஜட்ஜ் அங்கிள் வந்து என்னை அழைத்துச் செல்வார்.”

“ஏன் என்னுடன் வரமாட்டாயா?”

“மாட்டேன்”

“என்ன ஒரு நம்பிக்கை!. வீட்டில் வேறு யாரும் உள்ளனரா?”

“அதுபற்றி உங்களுக்கென்ன…?”

“நீ தனியாக இருக்க வேண்டாம் என்று நினைத்தேன்.. சரி நீ பத்திரமாக இரு. நான் கிளம்புகிறேன்”

அவளுக்கு அசந்தர்ப்பமாக அவளுடைய பாதுகாப்பை நினைத்து பயம் வந்தது. அவள் தனியாகவேதான் இருந்தாள். அந்த சமயம் பார்த்து ரகு வரவும் அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

“வா, ரகு அத்தான்.”

“இன்றைக்கு வனமலை வழக்கு நடக்கிறது. நீ சென்றிருப்பாய் என்று நினைத்தேன்.”

“மற்றவர்கள் சென்றிருக்கிறார்கள். நான் உனக்கு காபி போட்டு வருகிறேன்” அவள் சமையலறைக்கு சென்றாள்.

“ஏன் மது, சத்யன்தான் அவ்வளவிற்கும் பின்னே இருந்த சூத்திரதாரியாமே” பின்னோடேயே வந்து கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் பாலை பாத்திரத்தில் ஊற்றினாள்.

“என்னை எத்தனை முறை அறைந்திருக்கிறாய்? உன் திமிருக்கு இது நல்ல பாடம்தான்” அவனுடைய தொனி மாறியதை புரிந்து கோண்டவள் திகைத்தாள்.

“என்ன அத்தான். குரல் மாறுகிறது. என் கை இன்னும் உறுதியாகவே இருக்கிறது.” என்று இயல்பாக கூறிவிட்டு அறையைவிட்டு வெளியே நடக்க முயற்சித்தாள். அவளை தடுத்து நின்றவன்,

“இப்படி நீ கெட்டலைந்து போனபின்பும் உனக்கு புத்தி வரவில்லையா?”

“நாய் பேயெல்லாம் அறிவுரை சொல்லும் அளவிற்கு எனக்கு புத்தி கெட்டு போய்விடவில்லை” என்றவள்,  சுற்று சூழலை நிதானித்து கவனித்தாள். இனி ஒரு அடி அவளை அவன் நெருங்கினாலும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.