(Reading time: 149 - 298 minutes)

“சத்யன் சார், சரியான ப்ளான்! வாழ்த்துக்கள். இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை. மதுமதியை திருமணமே செய்து கொண்டீர்களா? இதுவும் ஒரு நல்ல ஐடியாதான். கையில் ரத்தக்கறை படியாமல் பார்த்துக் கொள்ளலாம். கணவனே கண் கண்ட தெய்வம் என்ற இந்த தமிழ்ப்பெண்களின் கொள்கையை. சரியாக பயன்படுத்திக் கொண்டீர்கள். வழக்கின் முதல் சாட்சியே பல்டி அடித்தால், கேஸ் நிற்காது. ” என்று வில்லத்தனமாக சிரித்தார்.

 சத்யனுக்கு விதி என்கிற விரோதி மேலேயிருந்து  அவனை பார்த்து சிரிப்பது புரிந்தது. மதுமதிக்கு கவனம் இங்கேதான் இருக்கும் என்பது அவனுக்கு நன்றாக தெரியும். அவனுடைய வாழ்க்கையில் இன்று ஒரு பெரிய மாற்றம் நடக்கப்போகிறது என்பதும் அவனுக்கு புரிந்துவிட்டது. அவளுக்கு அவனைப்பற்றிய உண்மைகளை கூற அவன் போட்ட ‘கமா’ அவனுடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதோ? என்று தோன்றியது. 

“நாம் இதுபற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் சார்” என்று கூற,

“ஆமாம், நாம் பிறகு விலாவாரியாக பேசிக் கொள்வோம்” என்று சொல்லிவிட்டு, அவன் அருகில் வந்த மதுமதியிடமும் வணக்கம் சொல்லி கிளம்பினார்.

நகையை வாங்கிவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவன் வாய் திறந்துபேச முடியாத நிலையில் இருந்தான். எதிர்வினை என்னவாக இருக்கும் என்று தெரியாத நிலையில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்க அவன் விரும்பவில்லை.

“ம்… சரியான ப்ளான்! வாழ்த்துக்கள் சத்யன் சார்.” அவள் ஆரம்பித்தவிதத்திலேயே, வீரய்யனின் பேச்சை முற்றிலும் கவனித்திருக்கிறாள் என்பது உறுதியாகிவிட்டது.

“ஏன் இந்த வழியை தேர்ந்தெடுத்தீர்கள்?. ஒருமுறை கொலை முயற்சி தப்பிவிட்டால், மீண்டும் முயற்சித்திருக்கலாமே.  ஓ அதெப்படி முடியும்? நான்தான் ஜட்ஜ் அங்கிள் பாதுகாப்பில் இருக்கிறேனே. அவரை தாண்டி முயற்சிக்க முடியாதே. அதனால் வேறு வழியில் முயற்சித்தீர்களா?. தூக்கு கயிறுக்கு பதில் மஞ்சள் கயிறு. ரத்த வாடையும் வீசாது.” அவன் மௌனம் சாதித்தான்.

“அப்புறம், உங்களுக்கு என்னைபற்றி தெரியாதல்லவா?. இந்த தாலி மஞ்சள் மகிமை எல்லாம் என்னிடம் செல்லாது. ஆனால், இந்த நடிப்பினை அங்கிள் தெரிந்தால் தாங்கிக் கொள்வாரா?. சற்றும் யோசிக்கவில்லையா?.”  அவன் காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தான்.

“பணம் இல்லாமல் எப்படி சாப்பிடுவது… எப்படி உறங்குவது… எப்படி கழுத்தறுப்பது…. இதெல்லாம் இல்லையென்றால் வாழமுடியுமா. துரோகம்… ரத்தவெறி.... பேராசை… இத்தனையும் இருக்கும் மனிதர்போல தெரியவில்லையே.. பணம்….பணம்…! பணத்தாசைக்காக பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் எல்லாம் சரிந்திருக்கின்றனவே. இந்த சின்ன வனமலை என்ன செய்யும்.” இன்னும்கூட காரின் வேகத்தை அதிகரித்தான்.

“உங்களுக்கு ஏது சென்டிமென்ட்ஸ், நல்ல விலை கிடைத்தால் உணர்வுகளையும் உறவுகளையும் விற்றுவிடுவீர்கள்.   தாய் மண்ணின் மதிப்பு தெரியாத உங்களுக்கு நல்லவேளையாக  தாய் இல்லை, இருந்திருந்தால் அவளையும் விலை….” அதற்குமேல் கேட்கும் பொறுமை இல்லாமல் அவனுடைய வாயில் விரலை வைத்து எச்சரித்தான்.

“டேர் நாட் டு ஸே….” கடும் குரலில் கூறினான். கார் அதிவேகத்தில் பறந்தது.  சற்று பொறுத்து மூச்சை இழுத்து பிடித்தபடி,

“நான் அவ்வளவு கேவலமானவன் இல்லை, மது. உன்னை அந்த சிறுமிகள் கடத்தல் கும்பலிடமிருந்து நான்தானே காப்பாற்றினேன்.. பிறகும்கூட…”

“பிறகு… என் மனதை கலைக்க முயற்சித்தீர்கள். பொய்யான வாக்குறுதி தந்து மடக்கப் பார்த்தீர்கள். நீங்கள் என்ன நினைத்தீர்கள்? உங்களுடைய வியக்கத்தக்க தகுதி பார்த்து மயங்கிப்போய் நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிவிடுவேன் என்றா?. ஆனால்,  நான் பணத்திற்கு மயங்கமாட்டேன். மனம்  கவர்ந்தவனுடன் மரத்தடியில் அமர்ந்து கஞ்சி குடிப்பதையே விரும்புபவள்.. கொஞ்சம் நான் தடுமாறி இருந்தாலும், என்னை போராட்டக் களத்திலிருந்து விலக வைத்திருப்பீர்கள். நான் மனஉறுதியுடன் இருந்ததால், உங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.”

“அதை அப்படி உறுதியாக சொல்கிறாய். எதுவானாலும்…. நான் உனக்கு வாக்கு தந்திருக்கிறேன் உன் வனமலைக்கு .  ஒரு ஆபத்தும் வராது. நான் காப்பாறுவேன்”

“நம்பிட்டேன்… கையில் ஒரு பெரிய கொடுவாளை பிடித்துக் கொண்டு மலையின் அடிவாரத்தில் நீங்கள் காவல்காத்து நிற்பதிலிருந்து தெரிந்து கொண்டேன்.”… அந்த நிலையிலும் அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அந்த   நம்பிக்கையை அப்படியே வைத்துக் கொள்.. நடுகூடத்தில் நின்று ஏலம் போடாமல் இருந்தால் நல்லது”. வீட்டு வாசலில் காரை அப்படியே நிறுத்திவிட்டு, அவனறைக்கு சென்றுவிட்டான்.

அத்துடன் விசயம் முடியவில்லை. அவன் அவளுக்குத் தந்திருந்த தங்கச்சங்கிலி, ஆரஞ்சு  நிற லெஹங்கா முதலியவற்றை எடுத்துப்போய் அவனிடம் வீசினாள். அவன் அயராமல் பார்க்கவும், லெஹங்காவை எடுத்து பற்களால் கடித்து கிழித்தெறிந்து விட்டாள். அவனிடம் சிறிது அசைவுகூட தென்படவில்லை. அப்படியே அறைக்கு திரும்பிவிட்டாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.