(Reading time: 96 - 191 minutes)

சாயுங்கால நேரம் 5 மணி .... மரங்கள் அடர்ந்த மாத்தூர் கிராமத்தை , தென்றல் காற்று வருடிக்கொண்டிருந்தது .... அந்த மாலை வேளையில், கொட்டாப் பாக்கும் , சுண்ணாம்புடன் , வாயில் வெற்றிலையை மென்றவாறே , தென்னந்தோப்பில் , உட்கார்ந்திருந்தார் மாத்தூர் கிராமத்தின் ஊர்த்தலைவர் தவபுண்ணியம் . உடன் அவர் வேலைக்காரன் பொன்னையா வெற்றிலையை மடித்து வைத்துக் கொண்டு நின்றிருந்தான் . தவபுண்ணியம் - வயது 53ன் விளிம்புகளில் இருக்கும் நல்ல வாட்ட சாட்டமான உடல் தொடர்ந்து 5 ஆவது முறையாக மாத்தூர் கிராமத்தின் ஊர்த்தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டவர் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : டேய் ! பொன்னையா ! என்னடா அவனுங்கள இன்னும் காணோம் ? வந்து இவ்ளோ நேரமாச்சு ?

பொன்னையா : ஐயா ! வந்துருவாங்கய்யா என்று சொல்லி முடிப்பதற்குள்சிவநேசனும் , ரமாலிங்கமும் தென்னந்தோப்புக்குள் நுழைந்திருந்தார்கள். இருவரும் வயதில் ஐம்பதைக் கடந்திருந்தார்கள் . ஊர்த் தலைவர் தவ புண்ணியத்தைக் கண்டவுடன் , வணக்கம் வைத்தவாறே எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : (....... சற்றே கோபமான தொனியுடன் ....... ) , குமாரசாமி கேஸ விசாரணை பண்றதுக்கு , தூத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புது இன்ஸ்பெக்டர் வர்றானாம் .அநேகமா இன்னிக்கு ராத்திரியே இங்க வந்துருவான்னு நெனைக்கிறேன் .

சிவநேசன் : தலைவரே ! இதுக்குத்தான் இவ்ளோ அவசரமா வரசொன்னீங்களா ? நான் வேற , என்னமோ ஏதோன்னு நெனச்சு பயந்துட்டேன் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : யோவ் ! அதெல்லாம் ஒன்னும் இல்ல . ஆனா அவன் கொஞ்சம் கெடுபிடியான ஆள்னு எல்லாரும் சொல்றாங்க . யாரையும் அவ்ளோ சீக்கிரமா நம்ப மாட்டானாம் . அதனால , குமாரசாமி விவகாரத்துல , அவங்கிட்ட நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் .

ராமலிங்கம் : அவன் வந்து என்ன பண்ணீரப் போறான் ? ........ தலைவரே ! குமாரசாமியக் கொன்னது , செத்துப்போன அந்த வெண்ணிலா பொண்ணோட , ஆவிதான்னு ஊரே சொல்லுது . அத மீறி அவனால என்னத்த பண்ணீர முடியும் ? நீங்க தைரியமா இருங்க . பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரத்த ஊரை விட்டு ஓட வெச்ச மாதிரி இவனையும் ஓட வெச்சுடலாம் ஹ்ம்ம் .... அத விடுங்க . நம்ம கலையரசன் கல்யாண விஷயம் என்னாச்சு ? பொண்ணு பாத்துட்டு இருக்கறதா சொன்னீங்க ? .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : நாங்களும் பொண்ணு பாத்துட்டுதான்யா இருக்கோம் . ஆனா அவன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான் . செத்துப் போன அந்த வெண்ணிலா பொண்ண , அவன் இன்னும் மறக்கவே இல்ல . அவளையே நெனச்சு நெனச்சு , தினம் தினம் செத்துகிட்டு இருக்கிறான் இதுல , அவளோட தற்கொலைக்கு நான் தான் காரணம்னு சொல்லி , என்கிட்டயே சரியா பேச மாட்டீங்கறான் என்றார் விரக்தியுடன் .

சிவநேசன் : தலைவரே ! இந்தக் காலத்து பசங்க மனசு , குரங்கு மாதிரி , அப்பப்ப மாறிகிட்டே இருக்கும் . அதெல்லாம் போகப் போக சரியாயிரும் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : அப்புறம் இன்னும் ரெண்டு நாள்ல , அந்த உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரங்க கூட ( NEXTGEN FRETILIZERS LTD (உரம் தயாரிப்பு நிறுவனம்) ) ஒரு மீட்டிங் இருக்கு . அத முடிச்சுட்டு , அவங்க அக்ரிமெண்ட்ல SIGN பண்ணியாச்சுன்னா , நாம காச வாங்கிட்டு வந்தர்லாம் . அவ்ளோதான் .

சிவநேசன் : தலைவரே ! இதுல ஏதாவது பிரச்சனை வருமோன்னு நான் நெனைக்கிறேன் ...

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : சிவநேசா ! ... நம்ம ஊர்ல , நம்ம வைக்கிறதுதான் சட்டம் . யாரும் நம்மள எதிர்த்து பேச மாட்டாங்க . பழைய உரத்த தூக்கி எறிஞ்சுட்டு , இத பயன்படுத்துங்கன்னு சொன்னாப் போதும் . நம்ம பேச்சுக்கு , மறுபேச்சு பேசாம கேட்டுக்குவானுங்க நம்ம ஊர்க்காரங்க . இதுல யார் பிரச்சனை பண்ணாலும் , குமாரசாமிக்கு நடந்த கதிதான் அவங்களுக்கும் !!!! (என்றார் கறாராக) .

சற்று நேரத்தில் , வேலைக்காரன் பொன்னையா , இளநீரை வெட்டி , அதில் நாட்டுச்சாராயத்தைக் கலந்து தயாராக வைத்திருந்தான் .

ராமலிங்கம் : தலைவரே ! இன்னொரு விஷயம் . நம்ம ஊர்ல உண்மையாலுமே பேய் நடமாட்டம் இருக்குன்னு , ஊர் மக்கள் எல்லாம் பயப்படறாங்க . குறிப்பா அந்த சாமியார் கூட அத உண்மைன்னு சொல்லிருக்காரு . அதான் கொஞ்சம் பயமா இருக்கு .

இதைக் கேட்டவுடன் சத்தம் போட்டு சிரித்தார் தவபுண்ணியம் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : யோவ் ! யாரு அந்த அன்பாலயம் வேதாந்த சாமியாரா ? .. அவனே ஒரு ஏமாத்துக்காரன் . அவன் சொல்றதப்போய் நம்பிட்டு ....... குமாரசாமியக் கொன்னதே நாமதான் . அவன பேய் தான் கொன்னுச்சுன்னு , ஒரு வதந்திய கெளப்பிவிடலையா ? அந்த மாறிதான் இதுவும் .......... இவ்ளோ பெரிய மனுசனாயிட்ட , இதுக்குப் போய் ஏன்யா பயந்துட்டிருக்கற . அடேய் ரமாலிங்கம்...... , அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க .. அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது . நீ தைரியமா இரு என்று சொல்லி ,அந்த இளநீர் பானத்தை எடுத்து கையில் கொடுத்தார் . இத ஒரு ரவுண்டு உள்ள உடு .. எல்லா பயமும் வெளில வந்துரும் என்றார் சிரித்துக்கொண்டே ..

மூவரும் , கிட்டத்தட்ட நான்காவது ரவுண்டைத் தாண்டியிருந்தார்கள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.