(Reading time: 96 - 191 minutes)

இன்ஸ்பெக்டர் ரவி : சரிங்க ! சுவாமிஜி ! நான் ஏதாவதுன்னா ! உங்கள தொடர்பு கொள்றேன் . நான் வர்றேன் என்று நடையைக் கட்டியிருந்தார் .

போலீஸ் ஜீப் அன்பாலயத்திலிருந்து வெளியே கிளம்பியிருந்தது .

சாயுங்கால நேரம் 6.3௦ மணி . இருட்டு மெல்ல மெல்ல , பரவ ஆரம்பித்திருந்தது . காற்றின் வேகம் சற்று அதிகரித்திருந்தது . வயலில் இறங்கியிருந்தவர்கள் , அவசர அவசரமாக வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் . பஞ்சாயத்து அரச மரத்தின் கீழே , மிகப் பெரிய கூட்டம் நின்றிருந்தது . கிராமத் தலைவர் தவபுண்ணியம் எதோ ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார் .சிவநேசனும் , ராமலிங்கமும் உடன் அமர்ந்திருந்தார்கள் . வேலைக்காரன் பொன்னையா வெத்தலைப் பொட்டியுடன் , ஒரு ஓரமாக நின்றிருந்தான் . முகம் முழுவதும் பயத்தால் உறைந்திருந்த ஒரு பெண் , பஞ்சாயத்தில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தாள் . அந்த வழியாக வந்துகொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , கூட்டத்தைப் பார்த்ததும் , வண்டியை நிறுத்தி விட்டு , உள்ளே சென்று , நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் . இவர்கள் இருவரையும் பார்த்த தவபுண்ணியம் , கையால் சைகை காட்டினார் . அந்த பெண் பேச ஆரம்பித்தாள் .

 ஐயா ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் , என்னோட ரெண்டு மாடுகளையும் தொழுவத்துல கட்டிட்டு , வெளிய வரும்போது , எனக்கு முன்னாடி , திடீர்ன்னு எதோ ஒரு உருவம் வந்துட்டு போன மாதிரி இருந்துச்சு . அது ரொம்ப பயங்கரமா இருந்துச்சு . அத நெனச்சா இன்னும் பயமாயிருக்குதுங்கய்யா . ஊருக்கு ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடுகளப் பண்ணுங்கய்யா “ என்று பயந்த படியே சொல்லிக்கொண்டிருந்தாள் அந்தப்பெண் . இன்ஸ்பெக்டர் ரவி அந்த பெண்ணையே சற்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் . தவபுண்ணியம் பக்கத்தில் அமர்ந்திருந்த ,சிவநேசன் எழுந்து பேச ஆரம்பித்தார் .

சிவநேசன் : “ அதுக்குத்தாம்மா ! இப்ப நம்ம ஊருக்கு புது போலீஸ் அதிகாரிங்க வந்துருக்காங்க . அவங்ககிட்ட நம்ம பிரச்சனையை சொல்லுவோம் . அவுங்க பாத்துக்குவாங்க ! “ என்று இன்ஸ்பெக்டர் ரவியை அடையாளம் காட்டினார் சிவநேசன் . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் கூட்டத்தின் நடுவே வந்து நின்று வணக்கம் வைத்தனர் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ தூத்தூர் காவல் துறை சார்பில் , உங்கள் எல்லாருக்கும் வணக்கம் ! . “ எந்த நேரத்திலும் , உங்கள் கிராமத்துக்கு முழு பாதுகாப்பு கொடுக்க நாங்க தயாரா இருக்கிறோம் . எங்கள் இரவு நேர பாதுகாப்புப் படை வீரர்கள் , எப்போதும் ரோந்து பணியில் இருப்பார்கள் . எதுவாக இருந்தாலும் எங்களுக்கு INFORM பண்ணுங்க . அவசர உதவிக்கு உடனே தொடர்புகொள்ள , காவல் துறை உதவி எண் 04329 - 2669082 . நம்பிக்கையோட இருங்க . நாங்க இருக்கோம் என்றார் .

கூட்டம் மெல்ல மெல்ல கலைய ஆரம்பித்திருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியின் பக்கம் வந்த தவபுண்ணியம் ,

 தம்பி ! இது தான் இங்க நடக்கிற பிரச்சனை . நாங்க உங்கள முழுமையா நம்புறோம் . நீங்க தான் ஏதாவது பண்ணனும் .” என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : சார் ! இன்னும் எனக்கு இதுல நம்பிக்கை வர்ல . இருந்தாலும் , இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது . இது சம்பந்தமா எங்க மேலதிகாரிகிட்ட பேசிட்டோம் . எங்களோட நடவடிக்கைகள மேலும் துரிதப்படுத்தப் போறோம் . ஊர் முழுவதையும் எங்க கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரப்போறோம் . இரவு முழுவதும் எங்க படை வீரர்கள் ரோந்து பணியில் சுத்திட்டு இருப்பாங்க . என்ன அசம்பாவிதம் நடந்தாலும் , உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் போயிரும் . நான் இந்த ஊருக்கு வந்த மொதல் நாளே , வேளாண் ஆசிரியர் குமாரசாமி பத்தின சில தகவல்கள சேகரிச்சுட்டேன் . அவரோட பிரேத பரிசோதனை ரிப்போர்ல எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு சார் ...... ஏன்னா ! குமாரசாமி பேயடிச்சு செத்துப் போயிட்டதா நாம நெனச்சுகிட்டு இருக்கோம் . ஆனா ! அவரோட பிரேத பரிசோதனை ரிப்போர்ட்ல , அவரோட இதயத்துல ஏற்பட்ட ஏதோ ஒரு அழுத்தத்தினால , இதய வால்வுகள் சிதைந்துபோயிருக்குன்னு குறிப்பிடப்பட்டுள்ளது . எனக்கு சந்தேகமே அதுல தான் .

திடுக்கிட்டுப் போயிருந்தனர் தவபுண்ணியமும் , அவரோட சகாக்களும் .

ராமலிங்கம் : அதுல என்ன சந்தேகம் ? . குமாரசாமி வயசான ஆள் . அவருக்கு வயசு 65 இருக்கும் . வயசானாவே ! நம்ம உடம்புல ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் . சாதாரண விஷயம் தானே இது .

இன்ஸ்பெக்டர் ரவி : சார் ! நானும் அப்படிதான் நெனச்சேன் . ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி , மத்திய அரசாங்கம் ஒரு கணக்கெடுப்பு எடுத்திருக்கிறாங்க . அதாவது கிராமத்துல வாழ்றவங்களோட உடல் நிலையையும் , நகரத்துல வாழ்றவங்களோட உடல் நிலை பற்றியும் ஒரு சர்வே எடுத்திருக்கிறாங்க . அதுல நம்ம குமாரசாமியும் ஒருத்தர் . நம்ம குமாரசாமியோட உடல் நிலைய சோதிச்சு பார்த்த , அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் . காரணம் அந்த 6௦ வயசிலும் , அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இருந்திருந்தது . கிட்டத்தட்ட ஒரு 25 வயது இளைஞனின் ரத்த ஓட்டம் அவருக்கு இருந்திருக்கிறது . இதயம் சீராக இயங்கியிருந்தது . இதய வால்வுகள் சீராக இருந்திருக்கின்றது . இதுக்கான ரிப்போர்ட் என்கிட்ட இருக்கு .குமாரசாமியிடம் அவர்கள் இது பற்றி கேட்ட பொழுது அவர் சொல்லியிருக்கிறார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.