இந்த சமயத்தில்தான் அவன் என்னிடம் யோசனை கேட்க என்னை அஜ்மீருக்கு அழைத்தான்.
அவர்கள் திருமணம் செய்து கொண்ட செய்தி கேட்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் முஸ்லீம். இந்த மாதிரிக் கலியாணத்தில் எனக்கு அருவருப்பு இல்லை. மேகர்பான் கோபித்துக் கொள்வானோ என்று பயந்துதான் நான் முன்னமேயே அவனுக்குக் கலியாண யோசனையைச் சொல்லவில்லை. என் யோசனையைக் கேட்காமலேயே இந்தச் சரியான காரியத்தை அவன் செய்ததில் எனக்குத் திருப்திதான். ஆனால் இனியும் மனைவியைச் சந்தேகிப்பது! இது அசட்டுத் தனம். வாழ்நாள் முழுதும் குடும்பம் நடத்த வேண்டிய மனைவியிடம் இந்த மாதிரி சந்தேகப்படலாமா?
நான் அவனைக் கடிந்து கொண்டபோது அவன், "ஆனா அவ ரொம்ப அழகாச்சே! அவ அவலட்சணமாயிருந்தா சந்தேகப்பட மாட்டேன்.."
மனைவியின் அழகுக்குத்தான் அவன் பயப்படுகிறான் என்று புரிந்தது எனக்கு. இந்த பயம் எப்படித் தெளியும்? அவளுக்கு ஏழெட்டுக் குழந்தைகள் பிறந்தாலா? அல்லது தீராத நோய்வாய்ப் பட்டாலா? அல்லது அவளது இளமை கழிந்த பிறகா?
ஆனால் இவற்றுக்கெல்லாம் நிறைய நேரமிருந்தது. சூரஜ்பான் எங்கள் வயதுதான். அகாலத்தில் கிழமாகும் எண்ணம் அவளுக்கில்லை.
"மனைவி அவலட்சணமாயிருக்கணும்னு ஆசைப்படாதே! உன் ஆசை நிறைவேறினா அப்புறம் கஷ்டப்படப் போறவன் நீதான்!"
அமிலத்தைக் கொட்டி அவளை அவலட்சணமாக்கலாமா என்றுகூட நினைத்தான் அவன்! ஏதோ தற்செயலாக நிகழ்ந்த மாதிரி அமிலத்தைக் கொட்டி விடுவது! நான் திடுக்கிட்டேன். அவனைக் கடுமையாகக் கடிந்து கொண்டேன். "அப்படீன்னா அவளை விவாகரத்து பண்ணிடு, அல்லது அவளை விட்டுட்டுப் போயிடு!" என்றேன்.
அதற்கும் தயாரில்லை அவன். "நான் போலீஸ் வேலையிலே இருந்திருந்தா சம்பளமும்