கான் பகதூர் தொடர்ந்து கூறினார், "அதுக்கப்புறம் மேகர் பானோடு சந்திப்பு ஏற்படலே. கடிதப் போக்குவரத்தும் இல்லே. நான் பஞ்சாபிலேருந்து வங்காளத்துக்கு மாற்றலாயிட்டேன். இரகசியப் புலன் விசாரணை இலாகாவில் போட்டுவிட்டார்கள். அதிலேருந்து இங்கேயே இருக்கேன். கதை இத்தோட முடிஞ்சது."
"முடிஞ்சு போச்சா?" என் ஆவல் தீரவில்லை. "அப்புறம் என்ன ஆச்சு? சூரஜ்பான் என்ன ஆனா? மேகர்பான் என்ன ஆனார்?" நீராவிப் படகு நீரைக் கிழித்துக் கொண்டு விரைந்தது. நீர்த்துளிகள் எங்கள்மேல் விழுந்தன. சிற்றுண்டி அருந்தி வெகு நேரமாகிவிட்டது. நான் இரவுச் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தேன். இப்போது கான்பகதூர் என் விருந்தினர். "சொல்லக் கஷ்டமாயிருக்குங்க.. மனிதர்களைப் புரிந்து கொள்வதிலேயே காலங் கழிஞ்சிடுச்சு. கிழவனாயிட்டேன். ஆனா அப்போ எனக்கு இவ்வளவு தெரியாது. அதனால்தான் திடுக்கிட்டுப் போயிட்டேன்."
"ஏன், ஏன்?" நான் ஆவலடங்காமல் கேட்டேன்.
"மேகர்பான் நிசமாகவே அவ மூஞ்சியிலே அமிலத்தைக் கொட்டப் பார்த்திருக்கான். ஒரு சில துளிகள் அவளோட கன்னத்திலோ, கழுத்திலோ விழுந்துவிட்டது. அதனாலே அவ இப்போ விருந்து வைக்கறதில்லே, வீட்டைவிட்டு வெளியே வரதில்லே. நல்லவேளை, அதிகக் கேடு ஏற்படலே, அவகிட்ட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்தது. அவ அதையெல்லாம் அப்படியே மேகர்பான்கிட்டே கொடுத்திட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி வந்தா. நேரே சியால்கோட் வந்து சேர்ந்துட்டா."
நான் அருவருப்பில் காதுகளைப் பொத்திக் கொண்டேன்.
இந்த அக்கிரமத்தைக் கேட்கப் பிடிக்கவில்லை எனக்கு.
"மேகர்பானுக்கு நகைகளைப் பத்திரப்படுத்துவதில் கவனம், அவன் எப்படி அவள் பின்னால் ஓடுவான்? எது முக்கியம் - நகையா? அல்லது நாயகியா? நகைதான் அவனுக்கு முக்கியமாகத் தோன்றியிருக்கு.."