(Reading time: 24 - 47 minutes)

" .. ஒண்ணுமில்ல " என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விட்டு வாசலுக்கு விரைந்தான் அஷ்வின் .. எப்போதும்  ஒரு முறை மிதித்தாலே தொடங்கிவிடும் பைக் , இன்று பலமுறை மிதித்தும் ஸ்டார்ட் ஆகாமல் பிரச்னை கொடுத்தது .. அவன் இருந்த மனநிலைக்கு நிச்சயம் இதையும் ஒரு சாதாரண அறிகுறியாய் எடுத்து கொள்ள முடியவில்லை .. மனதிற்குள் எழுந்த போராட்டத்தை ஒன்று திரட்டி அவன் மிதித்த வேகத்தில் பைக் ஸ்டார்ட் ஆக, ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் கிளம்பினான் அஷ்வின் , அந்த நிம்மதியின் ஆயுட்காலம் குறைவுதான் என்று அறியாமல் ..

தினம் தினம் தன்னை சுற்றி மட்டும் ஏதோ மர்மமாக நடப்பது போல உணர்ந்தான் அஷ்வின் .. அருகில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் வேலைகளை செய்து கொண்டிருந்த மனைவியை பார்த்தான் .. அனன்யா இயல்பிலேயே தைரியசாலி தான் என்றாலும் கூட, தன்னைப்போல சூழ்நிலைகளை சந்தித்து இருந்தால் அதை நிச்சயம் மறைத்து வைத்திருக்க மாட்டாள் ..அப்படியென்றால் , இதெல்லாம் இவனுக்கு மட்டும்தான் நடக்கிறது போலும் .. எந்த காரணம் கொண்டும் இதைப் பற்றி பேசி அவளது தைரியத்தை அசைத்து  பார்க்க வேண்டாம் என்று முடிவெடுத்தான் அஷ்வின் .. சரியாய் அந்த நேரம் காலிங் பெல் சத்தம் கேட்டதும் , லேசான அதிர்வுடன் இயல்பு நிலைக்கு வந்தான் .. அதற்குள் அனன்யா கதவை திறக்க போக, அவளை தடுத்து நிறுத்தினான் அஷ்வின் ..

" என்னடா"  என்று கணவனை புதிராய் பார்த்தாள்  அனன்யா ..

" ஒன்னும் இல்ல டீ .. என் ஆபீஸ் ப்ரண்ட் தான் நினைக்கிறன் " என்று  பொய் சொல்லிவிட்டு கதவை திறந்தான் அஷ்வின் .. " அச்சு கண்ணா , அனன்யா தங்கம் எப்படி இருக்கீங்க ??" அவனுக்கு மிகவும் பரிட்சயமான குரலை கேட்டதும் மலர்ந்து சிரித்தான் அஷ்வின் .. அவர்கள் அவனது பெற்றோர் !.

" வாங்கப்பா ..வாங்கம்மா " என்று அவன் நிம்மதியாய் அவர்களை பாரத்து புன்னகைத்து வரவேற்க , கணவனை தள்ளிவிட்டு மகன் மருமகள் இருவரையும் அணைத்து  கொண்டார் அஷ்வினின் தாயார் ..

" ஹும்கும்ம் .. இதுக்குத்தான் பேக் ஐ என் கையில கொடுத்தியா டீ " என்று அவன் தந்தை சிரிக்க , அதே புன்னகை மற்ற மூவரின் முகத்திலும்  உதித்தது .. “நல்லா இருக்கீங்களா அம்மா,அப்பா” என்று இருவரையும் பார்த்து புன்னகைத்தாள் அனன்யா.. நால்வரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததால் பேசிக்கொள்ள நிறைய கதைகள் இருந்தன. அன்று வானொலியை திறக்கவில்லை அஷ்வின் ..தனது பெற்றோருடன் பேசி கொண்டே வேலைக்கு தயார் ஆனான் அவன் .. சில நாட்களின் மர்மங்களுக்கு பிறகு, இன்றுதான் அவன் கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தான் .. அன்று மாலையே அது மறையப்போவது தெரியாமல் !

மாலை, சற்று விரைவாகவே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் அஷ்வின் . அனன்யாவிற்கு போன் போட்டு சொல்லிவிடலாம் என்று நினைத்தவன் , பின்பு "வேண்டாம் சர்ப்ரைஸ்ஸா  இருக்கட்டும் " என்று நினைத்தான் .. உற்சாகத்தோடு வீட்டை நோக்கி நடைபோட்டவனை பூட்டிய வீடே வரவேற்றது ..

" இந்த நேரத்துல எங்க போயிருப்பாங்க ?" என்று முணுமுணுத்தவாறே  காலிங் பெல்அழுத்தினான் அவன் .. ஐந்து  நிமிடம் பத்து நிமிடங்களாகியும் எந்த பதிலும் இல்லாமல் போக , தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை திறக்கலாம் என்றெண்ணி பாக்கெட்டில் சாவியை தேடினான் .. பாக்கெட்டில் சாவி இல்லாமல் போகவும் கொஞ்சம் பதட்டமானான் அஷ்வின் .. " எப்பவும் பாக்கெட்ல தானே இருக்கும் இந்த சாவி ? கார்ல வெச்சு இருப்பேனா ? ச்ச ..  " என்று அலுத்துக்கொண்டே மீண்டும் காரை பார்க் செய்த இடத்திற்கு சென்றான்... காரில் கண்ட காட்சியில் துணுக்குற்றான் அஷ்வின் .. அவனது காரில் சிறிய பெண் பொம்மை இருக்கும் .. அனன்யாவிற்கு பிடித்ததென்று வாங்கி காரில் வைத்திருந்தான் ..சற்று முன்பு காரை விட்டு இறங்கும்போது கூட அந்த பொம்மை அருகில் ஒன்றும் இல்லை .. ஆனால் இப்போது அவன் தேடி வந்த சாவியோ அந்த பொம்மையின் அருகில் தான் இருந்தது ..

" அஷ்வின் கூல்  டா .. அவசரத்துல கவனிச்சு இருக்க மாட்ட " என்று தன்னைத்தானே சமாதானபடுத்தி கொண்டு , சாவியை எடுத்துச் சென்றான் .. வீட்டிற்குள் நுழைந்ததும் அடுத்த அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது அவனுக்கு .. வரவேற்பறையில் அவர்களது ஆடைகள் சோபாவில் களைந்து கிடைந்தது .. சாதாரணமாய் எடுத்து வைத்தது போல அல்லாமல்  , யாரோ தூக்கி அங்கும் இங்கும் எறிந்ததை  போல இருந்தது அந்த காட்சி .. " நம்ம அனன்யா இப்படி பண்ண மாட்டாளே " என்று நினைத்தவன் , " அனன்யா ... அனன்யா எங்க இருக்க ?" என்றபடி அவர்களது அறைக்கு சென்றான் .. நிசப்தமாய் இருந்தது அவர்களது அறை ..சட்டென சமையலறை பக்கம் சத்தம் கேட்கவும்

" ஹே கூப்பிட்டுகிட்டு இருக்கேன்ல என்னடி பண்ணுற ?" என்று கேட்டபடி அங்கு வந்தவன் , யாரும் இல்லாததை  கண்டு இன்னும் பதட்டமானான்.. " சத்தம் கேட்டுச்சே ... அந்த பூனையா இருக்குமோ ? முதலில் இந்த பூனையை ஏதாச்சும் பண்ணனும் " என்றவன் மற்ற அறைகளிலும் அவர்களை தேட தொடங்கினான் ..

" அம்மா ... அப்பா ... அனன்யா " .. யாரையும் காணவில்லை .. ! அனன்யாவிற்கு போன் போட்டான் அஷ்வின் .. பல முறை  அழைத்தும் பதில் இல்லாமல் போகவும் , பதட்டமும் கோபமும் தலைக்கேறியது அவனுக்கு .. இதற்குமேல் வீட்டில் அமர்ந்து இருப்பது வீண் என்றே தோன்றியது .. மேலும் அந்த தனிமையும் நிசப்தமும் அவனுக்கும்  பயத்தை உருவாக்க, வீட்டை பூட்டி விட்டு கிளம்பினான் அஷ்வின் .. அவன் இரண்டடி எடுத்து வைக்கவும் , அவன் தந்தை அங்கு வரவும் சரியாய் இருந்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.