(Reading time: 26 - 51 minutes)

ரிஷி” என்று அழைத்தவன் அவள் முன் மண்டியிட்டான். சரித்திரன் முகத்தில் கொப்பளித்த சந்தோஷமும், அவன் மண்டியிட்டு அமர்ந்த விதமும் அவளது கற்பனை குதிரையின் காலில் லாடம் கட்டி ஓட விட்டது.

“சொல்லு ரிது!”

“ரிஷி எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்” என்றான் அவன்.

“ஹெல்ப்பா? என்னடா?”

“ரிஷி” என்ற சரித்திரன் அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“ரிஷி.. என் அம்மாவுக்கு அப்பறம் உனக்குத்தான் என்னை முழுசா தெரியும். உன்னால் மட்டும்தான் என்னை புரிஞ்சுக்க முடியும்! இதுவரை நீ எனக்கு எல்லா விஷயத்திலும் துணையிருந்துருக்க.. எப்பவும் என் லைஃப்ல நல்லது நடக்கும்போது அதில் உன் பங்கு இருக்கும்.. இப்போ என் காதலிலும் நீ எனக்கு உதவணும். முடியாதுன்னு சொல்லாத ப்ளிஸ்” என்றிருந்தான் அவன். வானிலிருந்து இடியொன்று அதிவேகமாய் தனது சிரசை துளைப்பது போல உணர்ந்தாள் ஆதர்ஷினி. அவன் பேச்சினால் எழுந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு,

“காதலா?” என்று வினவினாள். அவளைப் பார்த்து சிரித்தவன்,

“ஆமா காதல் தான். இப்போ இல்ல ரொம்ப நாளாகவே அவளை நான் லவ் பண்ணுறேன். சொல்லுறதுக்கு தான் பயமா இருக்கு. இன்னைக்கு இவினீங் அவளை வீட்டுக்கு வர சொல்லியிருக்கேன். நீயும் வரனும்..! நீ என்கூட இருந்தால்தான் என்னால என் காதலை சொல்ல முடியும்” என்றான் அவன். அவனது இருபொருள் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை. அவளது நிலையை அறிந்து கொள்ளும் நிதானமும் அவனிடம் இல்லை. சந்தோஷமாய் அதை கூறி விட்டு ஓடியிருந்தான் சரித்திரன்.

அதுதான் அவன் அவளை கடைசியாய் பார்த்தது. அன்று விரைவாகவே தன் ஊருக்கு கிளம்பிவிட்டிருந்தாள் ஆதர்ஷினி. அவளால் அவனை இனி சந்திக்க முடியாது, சந்திக்கவும் கூடாது என்ற தீர்மானத்தில் இருந்தாள் அவள். அவளை தேடி தேடியே ஓய்ந்து போனான் சரித்திரன். நாட்கள் பம்பரமாய் சுழன்றிட, தான் அவளிடம் காதலை சொல்ல வந்ததை ஆதர்ஷினி கண்டுபிடித்திருக்க வேண்டும். நண்பன் என்ற நிலையில் இருந்தவன் காதலைச் சொல்வது பிடிக்காமல்தான் பிரிந்து விட்டாள் என்று அவனே அந்த பிரிவிற்கு விளக்கமொன்றை எண்ணி கொண்டான்.

ந்து ஆண்டுகளுக்குப் பின், ஆகாஷின் மூலமாக சரித்திரன் உண்மையைத் தெரிந்து கொண்டிருந்த வேளை, அவன் காதலித்த பெண் தான்தான் என்ற உண்மையை ஜானவியை மூலமாக அறிந்திருந்தாள் ஆதர்ஷினி.

“அம்மா.. கவலைப்படாதீங்க.. இனிமேல் எல்லாமே நல்லதுதான் நடக்கும்.. நானும் ரிதுவும் சீக்கிரம் உங்களை தேடி வருவோம்” என்று உறுதியளித்துவிட்டு ஃபோனை வைத்தவள் அந்த ஆளுயர கண்ணாடியின் முன் தன் உருவத்தை பார்த்தாள்.

“அய்யயோ, இவனுக்கு பிடிக்காததை பண்ணனும்னு ஜீன்ஸ் போட்டு நின்னுமே.. கேடி என்ன நினைச்சானோ ? ரிஷி செல்லம், உன்னுடைய ரிது கெட்டப்பையன் ஆகுறதுக்கு முன்னாடி கெட்டப் சேஞ்ச் பண்ணிடுமா” என்று சொல்லிக் கொண்டவள், உடனே அங்கிருந்து ஜூட் ஆகினாள்.

காஷிடம் பேசி முடித்த சரித்திரன் அவனது அறைக்கு ஓடி வந்தான். இப்போதே தன்னவளை இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் வந்தவனை காலி அறையும் கட்டில் மேல் இருந்த கடிதமும் வரவேற்றது.

“இவ எங்க போயிட்டா? நான் கீழே தேடி பார்க்கிறேன்” என்றபடி அவ்வறையிலிருந்து வெளியே ஆகாஷ் ஓட, நடுங்கும் விரல்களுடன் அந்த கடிதத்தை பிரித்தான் சரித்திரன்.

என்னவனாகிய என் அவனுக்கு (நண்பன் &காதலன்),

டேய்.. உன்னைய கட்டி வெச்சு உதைக்கணும்னு தோணுது. ஆனால் என் மாமியார் ரொம்ப பாவம், அவங்களை நீ ஏற்கனவே ரொம்ப படுத்தி எடுத்ததினால் உனக்கு கொடுக்கவேண்டிய தண்டனையை குறைச்சிக்குறேன். எப்படியும் நடந்ததை உனக்கு ஆகாஷ் என்கிற உளறுவாயன் சொல்லியிருப்பான். இருந்தாலும் என் பங்குக்கு நானும் என் ஸ்டைலில் (கவிதையில்) நடந்ததை சொல்லிடுறேன்..

நண்பன் என்று அறிமுகமாகினாய்!

என் அகமெல்லாம் நிறைந்த முகமாகினாய்!

தேய்பிறையாய் வாழ்ந்தவளை பூரணநிலவாய் ஜொலிக்க வைத்தாய்!

அடிக்கடி புலம்ப வைத்தாய்!

அதை மறக்கும்படி சிரிக்கவும் வைத்தாய்!

என்னில் என்னை களவாடிவிட்டு

உன்னை என் உயிருக்குள் ஊற்றினாய்!

கண்களால் சிரிக்கவும், இதழ்களால் வெறுக்கவும்

உனக்கு மட்டும்தான் தெரியும்!

உன் பாசாங்கையெல்லாம் பாசவலையில் கட்டிவைக்க

எனக்கு மட்டும்தான் தெரியும்!

அடிக்கடி என் நோயாகினாய்!

நீயே மருத்துவனாகவும் மாறினாய்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.