(Reading time: 24 - 48 minutes)

“என்னங்க..?” என கேள்வியும் வருத்தமும் சேர்ந்து சிவாவின் முகத்தைப்பார்தாள் தர்ஷினி, அவன் வெறிப்பிடித்தவன் போல் நரம்புகள் தெரிக்க முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டான். செண்பகம் தளர்ந்து தரையில் அமர்ந்து அழுதார்.

மாணிக்கம் தர்ஷினியின் கைகளைப் பற்றி தர தரவென இழுத்துப்போனார். சிவா செண்பகத்தின் அருகே அமர்ந்து வெகுநேரம் அவரை சமாதானப்படுத்தி கீழே அழைத்துபோய் படுக்க வைத்தான். அவன் திரும்பும்போது அவன் கைகளை பற்றிக்கொண்டு, “சிவா, தர்ஷினி வேண்டாம்டா நமக்கு! ஏற்கனவே பட்டதெல்லாம் போதும்.. மாணிக்கம் நாம நினைச்சத விட மோசமானவானா இருக்கான், நிச்சயமா அவன் தர்ஷினி உன்ன கல்யாணம் பன்ன சம்மதிக்கமாட்டான்!” சிவா அவரது தோளைத்தட்டி சமாதானப்படுத்தி உறங்க வைத்தான்.

தன் அறைக்குள் வந்து மெத்தையில் விழுந்தான், விஷ்ணு, தர்ஷினியின் ஒரு மென்மையான துப்பட்டாவை கைகளில் சுற்றியவாரே உறங்கிக்கொண்டிருந்தாள். தர்ஷினியை இழக்க நேரிட்டால் அவனை விட அதிகம் ஏமாற்றமடைவது விஷ்ணுவாகத்தான் இருக்குமென தோன்றியது. இதயம் ஏற்பட்ட இரணத்தில் வெந்துகொண்டிருந்தது. இரவு முழுவதும் அதீத மன அழுத்தத்தால் சிக்குண்டு கிடந்தான் அவன். விடியலின் ஒளி வீட்டிற்குள் நுழையும் வரை அவன் கண்கள் மூடவில்லை.

ரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அந்த அலுவலகத்தின் முதல் தளத்திற்கு கடும் வேகமாக வந்தவள், ரிஷியின் அலுவலக அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள், அங்கே ரிஷிக்கு பதில் இளமாறன் தான் இருப்பானென இவளுக்கு தெரியாதா என்ன? மடிக்கணினியில் கணகளைப் பதித்திருந்தவன், நிமிர்ந்து அவளைப்பார்த்தான். யாராய் இருந்தாலும்,  நிச்சயம் ஒருமுறை அவளைப் பார்க்கத்தோன்றும் அழகுதான், தெய்வீகமான அழகு, பெண்மையின் நளினமும் செல்வமும், கலையும் கலந்த அழகு. இளஞ்சிவப்பு வண்ண அனார்கலியில், சிறிய கிளிப்பிற்குள் அடக்கிய கூந்தல் விரிந்து மார்பின் மீதும் முதுகின்மீதும் தழுவ, ஒப்பனை சிறிதும் இல்லாது, தெளிந்த முகத்துடன் வந்து நின்றவளை அந்த அறையில் இளமாறனின் அருகே நின்ற இரண்டு பொறியாளர்களும் வாயைப்பிளந்து பார்த்தனர்.

இவளது கூர் பார்வை அவன் மீது மட்டும்தான் நிலைத்திருந்தது. “ரிஷி இல்ல, நீங்க அவர பார்க்கனும்னா, அவரோட கெஸ்ட் ஹவுஸ் தான் போகனும், மத்தபடி நீங்க வேற ஏதாவது கேட்கனும்னா, மேனேஜர பார்த்து பேசலாம்” கையில் சுழற்றிய பேனாவை மேசையின் மீது தட்டியவாரே பேசினான்.

“ஓ, பட் இங்க இளமாறன்னு ஒருத்தர்கிட்ட கம்யூனிகேட் பன்னினா போதும்னு ரிஷி சொன்னான், சாரி நான் நீங்க தான் அவர்னு நினைச்சுட்டேன்!” வெளியேற திரும்பியவளை மாறனின் அருகே நின்ற பொறியாளர் தடுத்தார்.

“மேம், இவர் தான் இளமாறன், மேனேஜர் ஷண்முகம் இன்னிக்கு லீவு!”

மென்புன்னகையுடன் திரும்பினாள். நீங்க பேசி முடிச்சுட்டு என்ன கூப்பிடுறீங்களா, அன்டில் ஐ வில் வெயிட் அவுட்சைட்”

“சாரி மேம் நீங்க பேசுங்க” இரு பொறியாளர்களும் வெளியே செல்ல காத்திருந்தவள். மெதுவாக இவன் அருகே வந்து நின்றாள்.

“என்ன வேணும்” – இளமாறன்

“கேட்டா அப்படியே கொடுத்திருவீங்க.. கொஞ்சம் சிரிப்பு வேணும்!”

“மிஸ் கீர்த்தனா.. இது என்னோட ஆஃபீஸ்..வம்பளக்கிற இடமில்ல!”

“அட தெரியும் சார், நாங்க மட்டும் இதென்ன சந்தைனா சொன்னோம் ஆஃபீஸ் தான், உங்க ஆஃபீஸ் தான்…கொஞ்சம் பேசிட்டு நான் கேட்டவரை நீங்க தெளிவா பதில் சொல்லீட்டீங்கன்னா நான் கிளம்புறேன்!”

என்னவென்பதுபோல் பார்த்தான்.

“செல்வி கல்யாணம் எப்போ?”

ஒரு முறை ஆச்சரியத்தில் மின்னியது இவன் கண்கள், மனதில் அதை குறித்துக்கொண்டவள்..

“எவ்ளோ நாள் வயசு பொண்ண வீட்டுல வச்சுட்டு இருப்பீங்க மாறன், சட்டுபுட்டுனு கல்யாணம் பன்னி கொடுத்தாதானே மத்த காரியமும் நடக்கும்?”

“என்ன சொல்லவர்றீங்க மிஸ்!”

ஒரு சில நொடி மௌனமானாள் அவள், பின் குறும்புகளற்ற குரலில் தீர்க்கமாக, “ரிஷி கல்யாணம் முடிஞ்சா அப்பா அலெயன்ஸ் பார்க்க ஆரம்பிச்சுருவாரு மாறன், எனக்கு ரொம்ப டைம் இல்ல.. உங்கக்கிட்ட தெளிவா எதையும் பேச முடியல, புது பிரச்சனைகள் ஏதும் ஆரம்பிக்கும் முன்னாடி சீக்கிரமா ரிஷிகிட்ட பேசுறீங்களா மாறன்.. ப்ளீஸ்!.”

மார்புக்கு குறுக்கே கைகளைக்கட்டிக்கொண்டு அவளை ஆழமாக பார்த்தான், இவன் பதிலுக்கு ஏங்கி பெண் அவனது முகத்தைப்பார்த்தாள்.

“கீர்த்தனா உங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும் நினைச்சேன்.. அன்னைக்கே நான் உங்கக்கிட்ட சொல்லியிருக்கனும்…அதுவந்து மதுனு என் மாமா பொண்ணு, அவளை நான் கல்யாணம் பன்னனும்னு அம்மா விரும்புறாங்க..!”

அவன் சொல்லிமுடிக்கும் முன் பாய்ந்து வந்து அவன் சட்டைக்காலரைப் பிடித்தாள் கீர்த்தனா. “யோவ். பொறுமையா நீ வழிக்கு வருவேனு வெயிட் பன்னினா, அம்மா சொன்னாங்க ஆட்டு குட்டி சொன்னங்கன்னு எவளுக்காவது தாலி கட்டலாம்னு நினைச்ச அப்புறம் நான் மனுஷியா இருக்கமாட்டேன்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.