(Reading time: 21 - 42 minutes)

பதிலேதும் சொல்லாமல் இவள் யோசித்தபடி அமர்ந்திருக்க,

“ஹாப்பி பர்த்டே மைத்ரீ! உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திட்டிருக்கு.  என்னோட வாங்க” அங்கிருந்த ஒரு கதவை சுட்டிக்காட்டி புன்னகைத்தாள், அந்த பெண்.

‘சர்ப்ரைஸ்க்காக தான் இந்த பொண்ணு என்னையே பார்த்திருக்கா... நல்ல வேளை! நான் சுற்றி பாத்துக்கிட்டு இருந்ததை இவ கவனிக்கல’ நிம்மதி பரவ, அடுத்த யோசனை எழுந்தது.  ‘யாரு....? ஓ....இதுக்காக தான் டிராஃபிக்ல மாட்டிகிட்டதா பொய் சொல்லி இருக்காங்க.... போதும்டி! உங்க திட்டத்தை கண்டுபிடிச்சிட்ட...’

“தேங்க்ஸ் ஃபார் யுவர் விஷஸ்” வெய்ட்ரெஸ் தன்னை தவறாக நினைக்கவில்லை என்ற நிம்மதி புன்னகை இவளிடம்.

தனக்காக தோழிகள் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளும் ஆவலோடு எழுந்து கொண்டவளை, “ஒரு நிமிஷம் உட்காருங்க, இதை கட்டிவிடுறேன்” அவளுடைய கையிலிருந்த கருப்பு துணியைக் காட்டினாள் வெய்ட்ரெஸ்.

‘இது வேறயா?! உங்களை என்ன செய்றேன்னு பாருங்க?’ தன் தோழிகளிடம் மனதில் பேசியவள், உட்கார்ந்தாள்.

கருப்பு துணியால் மைத்ரீயின் கண்களை கட்டியபின் மெதுவாக அவளை அழைத்து சென்றாள்.

ஆதர்ஷும் ஜெய்யும், இவளின் பிறந்த நாளுக்கு நிறைய ஆச்சரியங்களை கொடுத்திருந்த போதும், மைத்ரீக்கு இது முற்றிலும் புதுமையான அனுபவமாக இருந்தது.  கண்கள் கட்டப்பட்டிருக்க, தோழிகள் தனக்காக என்ன ஏற்பாடு செய்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொங்கிய உற்சாகத்தோடு, வெய்ட்ரெஸ் வழிநடத்த நடந்தாள்.

“உங்க முன்னாடி நாலு படியிருக்கு, மெதுவா ஏறுங்க மைத்ரீ” சொல்லிகொண்டே அந்த பெண், இவளின் கையை பிடித்து முன்னேற, மைத்ரீயும் மெதுவாக அடி மேல் அடி வைத்து நான்கு படிகளையும் கடந்தாள்.

“நாம வரவேண்டிய இடத்துக்கு வந்தாச்சு மைத்ரீ! கடைசியா இங்க இருக்க படில இறங்க போறீங்க” என்று இதுவரை அவளை துணைநடத்திய வெய்ட்ரெஸ் விலகி கொண்டாள்.

மெதுவாக வலது காலை கீழே வைத்தவளுக்கு, அந்த இடம் நிலையில்லாமல் தள்ளாடுவது போலிருக்கவும் சட்டென சுதாரித்து பின்னேறினாள்.

“எருமைகளா! உங்க சர்ப்ரைஸை கெடுக்க கூடாதுனு அமைதியா இருந்தா, எங்கடி என்னை கடத்திட்டு வந்திருக்கீங்க? பத்தாதுக்கு கண்ணை கட்டி கீழே தள்ளிவிட திட்டம் போட்டிருக்கீங்களா?” கைகளை இடுப்பில் வைத்தபடி அதிகாரமாய் கேட்டவளை ரசித்தான் அவன்.

மைத்ரீயின் கண்கள் கட்டபட்டதிலிருந்து... அவள் தன்னை பார்த்துவிட போகிறாளென்ற பயமில்லாது, சுதந்திரமாக, அவளை பார்த்திருந்தான்.  அதை மட்டுமே தன் கடமையாக செய்திருந்தவனுக்கு அவளின் ஒவ்வொரு அசைவும் அழகாக தெரிந்தது.  அந்த நான்கு படிகளை ஏறிய போதும், இப்போது இறங்க நினைத்து கவனமாக காலை வைத்து விழாமல் சுதாரித்தது போதும், அவளுக்காக நீண்டிருந்த தன்னுடைய கையை அறியாது (கண்கள் கட்டியிருக்க அவள் பார்க்க நியாயமில்லை) தன்னை அவளுடைய தோழிகள் என்று நினைத்து உரிமையாக திட்டியதென அவளின் எல்லா செயல்களும் அவனுக்கு அழகாய் தெரிந்தன.

“ஹேய் இருக்கீங்களா? இல்லை என்னை தனியா கத்தவிட்டு போயிட்டீங்களா? இது சரி வராது! உங்களை நம்பினா கத்தி கத்தி என் தொண்டை தண்ணிதான் வத்திரும்” என்று பொரிந்தவள் கண்ணோடு கட்டியிருந்த துணியை பிரிக்க கையை மேலெடுக்கவும் சரியாக அவளின் வலது கையை பிடித்தான் அவன்.

தோழிகளின் மீதிருந்த செல்ல கோபத்தில், கையை பிடித்து அவள் இறங்க உதவியது யாரென்று கவனிக்கவில்லை.

“அது.... அந்த பயமிருக்கட்டும்! இந்த மைத்ரீன்னா சும்மாவா” என்றவளின் பேச்சினால் எழுந்த சிரிப்பை அடக்கியபடி அவளை உட்கார வைத்திருந்தான்.

“அடுத்து என்ன? கண்ணை கட்டி கூப்பிட்டு வந்தா பத்தாதுடி, ஏதாவது செய்யனும்”

‘இவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போயி, நான்தா சர்ப்ரைஸ் ஆயிருக்கேன்.  உனக்கு இவ்வளவு பேச தெரியுமா? அமைதியான பொண்ணுன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்’ மனதோடு தன்னவளை கொஞ்சியவன், முகத்தில் பூத்த புன்னகையோடு, அவளேதிரே அமர்ந்து, கிட்டாரை வாசிக்க ஆரம்பித்தான்.

கிட்டாரின் இசையை கேட்டவளின் செவிகள் வேலை செய்ய, வாய் தற்காலிகமாக ஓய்வு பெற்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.