(Reading time: 21 - 42 minutes)

“எங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் இல்லம்மா! உங்களுக்கு என்னாச்சு? உங்க முகமே சரியில்லையே.... வாங்க... வந்து இப்படி உட்காருங்க” வடிவின் கையை பிடித்து பக்கத்திலிருந்த சோபாவில் அமர வைத்தவன், கொஞ்சம் தண்ணீரை குடிக்க கொடுத்தான்.

வடிவு குடித்து முடித்த பின்னர், 

“இப்போ சொல்லுங்க யாருக்கு என்ன பிரச்சன?” ஜெயின் அன்பில் நெகிழ்ந்த வடிவின் கை அவன் தலையை வருடியது.

“ராகுல்க்கும் மைத்ரீல்கும் ஏதாவது பிரச்சனையா?”

வடிவின் கேள்வியில் திகைத்தவன், “எனக்குத் தெரிஞ்சு அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லம்மா”

“இல்லடா கண்ணா! மைத்ரீக்கு இந்த ஏற்பாட்டில் விருப்பம் இல்லனு நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.  ஆனால் ராகுலை பார்த்ததுக்கப்புறம் அவளோட முகமே சரியில்ல”

அதை அவனும் கவனத்திருந்தான்.  ‘அம்மா சொன்னது போல அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா? அதை பற்றிதான் எங்கிட்ட பேச வந்தாளா?’ என்று நினைத்தாலும் வடிவை சமாதான படுத்தினான்.

“மைதிக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை.  அது உங்களுக்குமே தெரியும்மா.  யாரோ வருவாங்கனு நினைச்சிருப்பா... ராகுலை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியா இருந்திருக்கும்.  நீங்க தேவையில்லாம யோசிச்சு மனச குழப்பிக்காதீங்க”

வடிவின் முகம் இன்னமும் தெளியாததை கண்டவன், “நீங்க வேணா பாருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில, மைதி சந்தோசமா வந்து உங்ககிட்ட பேசுவா”

“நீ சொல்றது நடந்தா, எனக்கும் சந்தோசம்தான்” என்று சொன்னவரின் குரலில் அப்படி நடக்குமா என்ற ஏக்கம் மறைந்திருந்தது.

வடிவை சமாதான படுத்த அப்படி சொல்லிவிட்டான்.  ஆனால்... தன் வாழ்க்கைக்காக மைத்ரீ, அவளுக்கு விருப்பமில்லாத இந்த திருமணத்துக்கு சம்மதித்து விடுவாளோ என்ற கவலை எழுந்தது.  அப்படி எதையாவது அவள் செய்தாலும் தானே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான் ஜெய்.

ம்... ராகுல் கல்யாணத்தை நீ நிறுத்து! உன்னோட, சொல்லாத காதலுக்கு, அவன் சங்கு ஊதட்டும்.  உனக்கு சரூவோட சப்போர்ட்டும் கிடையாது.  நீ உன் காதலை வாயை திறந்து சொல்லாத... அந்த மக்கு சரூவா, உன்னோட காதலை புரிஞ்சுக்கிட்டு, அதுக்கு பிறகு உங்க கல்யாணம்... வாவ்! அடுத்து ஜென்மத்துல கண்டிப்பா இது நடக்கும் போல! என்று ஜெய்யின் மனம் அவனை சீண்டியது.

என்னோட கல்யாணம் நடக்காமலே போனாலும் சரி... மைதிக்கு விருப்பமில்லைனா, நிச்சயமா இந்த கல்யாணத்தை நடக்க நான் விடமாட்டேன் என்று மனதிற்கு பதிலளித்தான்.

ன் காதல் கதையை சொல்லி முடித்தவளின் எதிரே உணர்வுகளை துடைத்த முகத்தோடு உட்கார்ந்திருந்தான் ராகுல்.

அவன் முகத்தை பார்க்கவே மைத்ரிக்கு பாவமாக இருந்தது.  எவ்வளவு சொல்லியும் கேட்காது, அவளுடைய காதலனை பற்றி தெரிந்து கொண்டான். அவனுடைய நிலையறிந்தவளுக்கு, மேலும் பேசி அவனை வருத்த விருப்பமில்லை.

சிறிது நேரம் கழித்தும் அவன் ஏதும் பேசாது, அவளையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தது, சங்கடத்தைக் கொடுத்தது.

அவளின் மனதை படித்தவன் போல் பேசத் தொடங்கினான்.

“ஸோ.... ஊரு பேரு தெரியாத ஒருத்தனுக்காக என்னை வேணாம்னு சொல்ற?”

அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவள் அதிர்ந்தாள்.  தன்னுடைய நிலையை சொன்ன பிறகு, புரிந்துகொள்வான் என்று அவள் நினைத்திருக்க, இவனோ இப்படி மறுபடியும் முதலிருந்து ஆரம்பிக்கிறானே என்று நொந்து போனாள்.

அவளின் முகத்தையே கூர்ந்திருந்தவன், அதில் தோன்றிய அதிராச்சியை கண்டபோதும் சற்றும் இளக்கமில்லாதவனாக

“அடுத்து என்ன செய்யப் போற?” அதிகாரமாய் கேட்டான் ராகுல்.

‘இது என்ன கேள்வி?’

“இப்படி முழிக்கறத நிறுத்திட்டு, அடுத்து என்ன செய்ய போறன்னு சொல்லு?” என்றான் சற்று கடுமையாக.

முதலே அவன் கேள்வியில் குழம்பியிருந்தவளுக்கு, இப்போது கடுமையும் சேர்ந்து கொள்ள, வார்த்தைகள் தந்தியடித்தன, “எ...என்ன செய்யப்போற? புரியல”

“அவன தேட போறியா? அதுவும் அவனப் பத்தி ஒண்ணுமே தெரியாம” என்றவனின் குரலில் மட்டுமில்லாது முகத்திலும் ஏளனம் நிறைந்திருந்தது.

சுள்ளென மூண்ட கோபத்தோடு பொரிந்தாள், “அதைப்பற்றிய கவலையெல்லா உங்களுக்கு வேணா! எதை செய்யனும், எப்படி செய்யனும்னு எனக்கு தெரியும்.  அதை நான் பார்த்துக்கிறேன்” அவனை முறைத்து கொண்டிருந்தாள்.

மைத்ரீயின் முறைப்பு அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை என்பதை போல், “இப்போ கூட ஒண்ணும் கெட்டு போகலை.  நீ உன்னோட முடிவை மாத்திக்கலாம்.  உனக்கு வாழ்க்கை கொடுக்க நான் தயாராயிருக்கேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.