(Reading time: 21 - 42 minutes)

அவளின் கையை பார்த்தவன்... காலம் முழுதும் தன் கைவிரல்களோடு சேர்ந்திருக்கும் என்று நினைத்த அவளின் தளிர் விரல்களை, தீண்டுவது, இதுவே கடைசி முறையாகிவிடுமோ என்ற எண்ணம், எத்தனை தடுத்தும் மனதிலெழுந்து இம்சித்தது.  இருந்தாலும் ஒரு பேராசை, தன்னை ஏற்றுகொள்ள மாட்டாளா? ஏக்கம் பெருமூச்சாக மாறி அவனிடமிருந்து விடைபெற்றது.

“ஸோ இது உங்கிட்டயே இருக்கட்டும்” அவள் கையில் ஒரு சிறு பெட்டியை வைத்தான்.

“என்னோட காதல் உன்னை தொடும்னு நம்பினே.. அது நடக்கலைங்கறது கஷ்டமாதா இருக்கு.  அதுக்காக உன்னை வற்புறுத்த, எனக்கு விருப்பமில்லை”

அவளின் கைகளிலிருந்து தன் கையை எடுத்துகொண்டவன், அவளிடம் சொல்லிக்கொள்ளாமலே அங்கிருந்து அகன்றான்.

சிறிது நேரம் கழித்து அவளுடைய கண்கட்டு அவிழ்க்கபட்டது.  ஒரு சில நொடிகள் எதையும் பார்க்க முடியாது கண்கள் கூசின.  அவனை பார்த்துவிடும் நோக்கத்தில் கண்களை அவசரமாக கசக்கி கொண்டு பார்த்தவளுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.  இவளையும், இவளை இங்கு அழைத்து வந்த அந்த வெய்ட்ரெஸையும் தவிர யாருமே இல்லை.

அவனை தேடிய அவசரத்தில் அந்த இடத்தின் அழகு சற்று மெதுவாக தான் அவளுடைய மூளையை எட்டியது. 

அழகில் மயங்கிய கண்கள் விரிய, இதழ்கள் அவள் அனுமதியின்றியே, “வாவ்!” என்றன.

இவளிருந்தது ஒரு படகில்.  நீர்பரப்பே கண்ணுக்கு தெரியாதபடி மெழுகுவர்த்திகள் மிக நெருக்கமாக, அந்த படகோடு சேர்ந்து மிதக்க... அவை, கண்ணாடி மேற்கூரை வழியாக தெரிந்த அந்த விண்மீன்களோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

அவளின் முன்பு ஒரு இதய வடிவ அனிச்சல் (cake).  இவளுக்கு பிடித்த ரெட் வெல்வெட் ஃப்லேவரில்.  அதனருகில் ஒரு பூங்கொத்து.  அதிலும் இவளுக்கு பிடித்த வண்ண வண்ண மலர்கள் இருக்க... கடைசியாக கையிலிருந்த சிறு பெட்டியை திறந்த போது ஒரு அழகான ப்லாட்டின மோதிரம், இவளை பார்த்து சிரித்தது. 

அவளை சுற்றியிருந்த எல்லாமே அவளுக்கு பிடித்தவையாக இருக்க மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டது. 

‘என்னை ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல முடியல’ என்று நினைத்தவளை கலைத்தது ரோஷினியின் அழைப்பு.

அதன் பிறகு தோழிகளோடு சிறிது நேரம் செலவழித்தவள் வீடு சென்றுபோது இரவு 9 மணியாகியிருந்தது.

நேரம் கழித்து வீடு சென்றதால் வடிவின் வசைகளை சமாளிக்க முடியாமல் ஜெய்யின் சிபாரிசில் தப்பித்து அவளறைக்கு வருவதற்குள் 10 மணியானது.

படுக்கையில் கிடந்தவளுக்கு தூக்கம் வரவில்லை.  மாறாக காலையிலிருந்து நடந்தவையே மனதினில் மீண்டும் மீண்டும் வலம் வந்து கொண்டிருந்தன.  அவன் தன்னிடம் பேசியதிலிருந்து, நெஞ்சோரத்தில் உருத்தி கொண்டிருந்த ஒன்று, இப்போது ஞாபகம் வரவும் சட்டென துள்ளி எழுந்தாள்.

‘அந்த ஸ்பெஷல் பார்டி (மைத்ரீயை ஸ்பெஷலா ஃபீல் பண்ண வச்சதால அதான் அவனோட பேரு), என்னை மையூனு கூப்பிட்டானே.  இதே மாதிரி வேற யாரோ என்னை கூப்பிட்டிருக்காங்க.  யாரது? அப்போ அவனுக்கு என்னை முன்னாடியே தெரியுமா? யாரவன்?....யாரவன்?’   

பையிலிருந்த மோதிரத்தை எடுத்து தொட்டு பார்த்தவளுக்கு, அவன், தன் கையில் அதை வைத்த போது உணர்ந்து கொண்ட அவனுடைய விரல்களின் நடுக்கம் நினைவுக்கு வந்தது. 

‘உன்னை நினைச்சா ரொம்ப பாவமாயிருக்கு, ஸ்பெஷல் பார்டி!’

எதற்காக அவனுக்காக பாவம்படுகிறாள் என்று தெரியாமலே தூங்கி போனாள்.

தினந்தோரும் ஏதோ ஒன்று அவனை ஞாபகபடுத்தி விடும்.  நாட்கள் மெல்ல நகர அவன் யாரென தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.  நாளுக்கு நாள் அவளையும் அறியாமல் அவன் மேல் காதல் கொண்டாள்.

அவனுடைய வார்த்தைகள் அன்றே அவள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.  ஆனால் அந்த தாக்கத்தின் முன் பயம், தயக்கம், சந்தேகம், நம்பிக்கயின்மை என அனைத்தும் பூதாகாரமாக இருந்தன.

நாட்கள் செல்ல செல்ல அவைகளின் தாக்கம் குறைந்து மறைந்து போயின.  அவனுடைய வார்த்தைகள் பசுமையாக அவள் மனதிலிருக்க, அது சுலபமாக காதலாய் உருபெற்றுவிட்டது.

ரயூவின் கேள்விகளிலிருந்து தப்பித்த ஜெய், வடிவோடு அந்த அறையில் இருந்தான்.

“என்னமா? என்னாச்சு? எதுக்கு இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?” ஜெய் கேள்விகளை அடுக்க..

இவ்வளவு நேரமாக மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்வியை கேட்டார் வடிவு,

“ஜெய் கண்ணா! உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா?” கைகளைப் பிசைந்தவாறு குற்ற உணர்வில் அவன் முகத்தையே பார்த்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.