(Reading time: 20 - 40 minutes)

“ஆசை இருக்கு, ஆனா இப்போ வேண்டாம்  அண்ணா.இப்பொழுது தான் உங்க கிட்ட வந்து சேர்ந்துருக்கேன், மறுபடியும் பிரிய விருப்பம் இல்லை.”

“அவ சொல்றதும் சரிதான் அபி. என் பேத்தியவிட்டு இனி யாரும் ஒரு கணம் கூட விட்டு பிரியமாட்டோம்” என தாத்தா கூற,

“சரி, தாத்தா, பாப்பா என்ன சொல்றாலோ, அதுபடியே கேட்டுக்கொள்கிறேன்” என அபி சொல்ல..

“பாப்பாவா? அப்ப நாங்க?..” என மீனு,மினு, ஆழினி கேட்க

“அதற்கு பதில் சந்திரன் சொல்லுவான்” என அபி எழுந்து “ஒரு கால் பண்ணிட்டு வரேன்” என்று சொல்லி வெளியே சென்றான்.

இப்போது அனைவரும் சந்திரனை பார்க்க அவன் தன் அக்காவை பார்த்து ரகசியமாய் புன்னகைத்து..

“பதில் சொல்லவா?..”

“ம்ம்,சொல்லு..”

“நீங்க எல்லாம் குரங்குங்க” என கூறி விட்டு அவன் ஓட,

“ஆ.. டேய், நீதான்டா குரங்கு” என அவர்கள் கூறி அவனை விரட்டி பிடிக்க பின்னால் ஓடினர்.

இதைப்பார்த்து அனைவரும் சிரித்தனர், பின் தாத்தாவின் மொபைலில் அழைப்புமணி ஒலிக்க அனைவரும் அமைதியாகவும், தாத்தா வெளியே போய் பேசினார்.

வீட்டுக்குள் வந்த தாத்தா அனைவரையும் அழைத்து அமர சொல்லி முக்கியமான விசயம் சொல்லனும் என ஆரம்பித்தார்,

“சங்கரஐயா தான் போனில் அழைத்தார், மூத்தபேத்தி வந்துட்டாங்களானு கேட்டாரு, ஆமாமென்றேன், அப்புறம் நாளை மறுநாள் பௌர்ணமி நம் குலதெய்வகோவிலில் விளக்கு பூஜை இருக்கு,நம் வீட்டு பொண்ணுங்க முக்கியமாக கலந்துகொள்ளனும் என்று சொல்லிருக்காரு, எல்லோரும் குடும்பத்தோட வரனும்னு சொல்லிருக்காரு, நாளை மதியம் எல்லோரும் கிளம்பறமாதிரி இருக்கும், ரெடியா இருங்க. நந்தினியம்மா உன் உடம்பு பரவாயில்லை தான, வரமுடியுமாமா? எதுக்கும் டாக்டரிடம் கேக்கறேன்” எனவும்,

“இல்லை மாமா, நான் நல்லாதான் இருக்கேன், என் பொண்ணு வந்ததுக்கப்புறம் என் உடம்பு சீக்கிரம் சரிஆகிடும், இனி அவளைவிட்டு என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது.”

“அது சரிதான் அக்கா, ஆனால் அவளுக்கு கல்யாணம் ஆகிட்டா இன்னோர் வீட்டுக்கு போய்தான ஆகனும், இப்போது 20 வயசு ஆகுது, இப்போதே வரன் பார்க்க ஆரம்பித்தால்தான் நல்ல இடம் அமையும், பார்க்க ஆரம்பித்து விடலாமா” என சங்கரி கூற, “எனக்கு கல்யாணம் வேண்டாம்” என அழுத்தம் திருத்தமாக கூறினாள் அமிர்தா.

“ஏனம்மா அப்படி சொல்ற, இப்போது இல்லைனாலும் எப்போதாவது நடந்து தான ஆகனும், இல்லை கல்யாணம் ஆகிடுச்சா?..” என பாட்டி கேட்க,

“எனக்கு எப்பவும் கல்யாணம் நடக்காது, இதப்பத்தி எதும் என்ன கேட்காதிங்க, இந்த பேச்சை இதோட விடுங்க, ப்ளீஸ்” என கூறிவிட்டு அவள் அறைக்குள் ஓடினாள்.

என்னாயிற்று இவளுக்கு என அனைவரும் குழம்பி நின்றனர், பாட்டி “இவள பத்தி தெரிந்துக்கதான் கல்யாணப்பேச்சை எடுத்தோம் ஆனா இவ இப்படி பேசிட்டுபோறா.” என்றவர், வாசுதேவனை கேள்வியாய் நோக்கினார்.

“மாப்பிள்ளை. நீங்க தான் சொல்லனும், ஏன் அவ இப்படி பேசிட்டு போறா?..”

“அத்தை, எனக்கும் புரியல,நான் முதன்முதலில் அவளை பார்த்தப்போ அவளும் யமுனாவும் மட்டும் தான் இருந்தாங்க, அவ பேமலில இருந்தவர்கள் சில நாட்களுக்கு முன் ஒரு ஆக்சிடெண்ட்ல   இறந்துட்டாங்கனு கேள்விப்பட்டேன், அதனாலதான் அவ டிப்ரெஸ்சன்ல இருக்கா.. நான் அமிர்தாகிட்ட அவளை வளர்த்தவங்கள பத்தி கேட்டதிற்கு அவள் எதுவும் என்கிட்ட சொல்லவில்லை.. நான் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது  அவர்கள் யுஎஸ் இருந்து வந்தவங்க என்றும்  சென்னை வந்து 6மாதம்தான் ஆனது என்றும், அப்போது  கார் ஆக்சிடெண்ட்-ல இவளும் யமுனாவும் தான் உயிர் பிழைத்ததாக சொன்னார்கள். மத்தவங்க இறந்துட்டாங்கனு கேள்வி பட்டேன், மற்ற விவரம் எதும் தெரியல.. அதனால கூட கல்யாணம் வேண்டாம்னு அவ சொல்லி இருக்கலாம்..”

“ஆனா அதுதான் காரணம் என்றால் நம்மகிட்ட சொல்லிருக்கலாமே? யமுனாவ அவ பொண்ணுங்கறா. அப்போ யமுனாவோட அப்பா யாரு?..” என பாட்டி வினவ

“தெரியல. கொஞ்ச நாள் போகட்டும், மெல்ல நானே அவளிடம் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் அனைவருக்கும் சரி எனப்பட்டது.

“யாரும் கவலைபட வேண்டாம். சங்கரஐயாகிட்ட இதப்பத்தி பேசிக்கலாம், இந்த பேச்சை இத்தோடு விடுங்கள், அப்புறம் வாசு மாப்பிள்ளை உங்க தம்பி கோவிலுக்கு  வரமுடியுமா?..” என தாத்தா கேட்க

“இல்லை மாமா, அவனுக்கு இப்போ நிறைய மீட்டிங் இருக்குனு சொன்னான், தமிழ் இங்கதான் இருக்கான், அவன கூட்டிட்டு போலாம்”

“சரிப்பா, நான் எதுக்கும் அவர்கிட்ட வரமுடியுமானு கேக்கறேன், அப்புறம் விக்கி எங்க? அவனை போன் போட்டு வர சொல்லுங்கள், இந்ததடவ அவன் எந்த எக்ஸ்கியூசும் சொல்ல கூடாது, அப்புறம் மித்ராவையும் கூட்டிக்கிட்டு வரச்சொல்லுங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.