(Reading time: 20 - 40 minutes)

“அப்புறம் அமிர்தா பிறந்த ஹாஸ்பிடல் போய் உண்மையான பிறந்தநாள் நேரத்த வாங்கிட்டு வாங்க, சங்கர ஐயா கேட்டாரு”

“சரிங்க மாமா.”

“விக்கி அத்தான் வராரா. ஐ, ஜாலி” என அனைத்து வாண்டுகளும் கத்திக்கொண்டு அமிர்தாவின் அறையை நோக்கி ஓடினர்..

இங்கு அமிர்தாவோ கவலையில் இருக்க, உள்ளே வந்த சந்திரன்,மினு,மீனு,ஆதினி “அக்கா” என கத்தவும், திடுக்கிட்டு அவர்கள் புறம் திரும்ப, அமிர்தாவின் கண்களை கண்ட மீனு, “அக்கா உங்களுக்கு என்ன பிரச்சினை? எங்ககிட்ட சொல்லுங்க கா, ப்ளிஸ்”

“ஒன்னும் இல்லைடா.”

“எனக்கு தெரியும், உங்கள வளர்தவங்க இறந்துட்டாங்க, அதுதான..”

“ம்ம், அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனா அவங்க என்னை விட்டு போயிட்டாங்க” என அமிர்தா வருந்த, பின் அனைவரும் இருப்பதை உணர்ந்து தன்னை கட்டுபடுத்திக்கொண்டு அவர்களை பார்த்து “சரி, என்ன விசயம்” என்றாள்.

பேச்சை மாற்ற எண்ணிய சந்திரன்..

“அக்கா, உங்களுக்கு ஒன்னு தெரியுமா?..”

“என்ன தம்பி?..”

“விக்கி அத்தான் இங்க வராரு.”

“யாரு?..”

“வாசுமாமாவோட பையன் அக்கா.”

ஓ..

“ரொம்ப ஜாலியா இருக்கும்கா. அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.”

“அப்படி என்ன அவர் ஸ்பெஷல்?..”

“ஐய்யோ அக்கா, அவர் உனக்கும் அத்தான்தான். அவரை பாக்கும்போது உனக்கே தெரியும், அவர்கூட இருந்தா போரே அடிக்காது” என சந்திரன் கூற மற்றவர்கள் அமைதி காத்தனர்.

“ஏன் நீங்க சைலன்ட் ஆகிட்டிங்க” என மீனு,மினு,ஆதினியிடம் அமிர்தா கேட்க,

“நாங்க அவருக்கு எதிரா என்ன கலாட்டா பண்ணலாம்னு பிளான் போடுறோம், எப்ப பாத்தாலும் எங்க 3 பேரையும் கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பாரு.”

“அட பொண்ணுங்களா, அவன் அத்தைபையன்னு உங்கள சும்மா கிண்டல் செய்வான், அதப்போய் பெருசா எடுத்துக்கலாமா” என அங்கு யம்முவுடன் வந்த பாட்டி, “யம்மு உன்னை கேட்டா, அதான் கூட்டிக்கொண்டு வந்தேன்..”

“அப்போ அமிர்தா அக்காவையும் கிண்டல் செய்வாரா” என மீனு கேட்க, “கண்டிப்பா” என பாட்டி கூற,

“ஓ! அப்படியா பாட்டி?, யாரு யார கிண்டல் பண்றாங்கனு பொறுந்திருந்து பார்க்கதான போறிங்க, கேர்ள்ஸ் நானும் இருக்கிறேன், ஒரு கை பார்த்திடலாம். என்ன?..”

டண் அக்கா.. என மூவரும் கூறினர்.

“சரி வாங்க, எல்லாரும் விளையாடலாம்” என யமுனா கூப்பிட, அனைத்து வாண்டுகளுடனும் அமிர்தாவுடன் தோட்டத்தில்  கண்ணாமூச்சி விளையாடினார்கள், இருட்டிய பிறகுதான் வீட்டினுள் நுழைந்தனர்., ரொம்ப நாள் கழித்து தான் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு இருப்பதை அமிர்தா உணர்ந்தாள்.. அவள் வாழ்க்கையில் நடந்து முடிந்த நினைவுகள் அவள் கண்முன்னே நிழலாடின, ஒருமுறை கண்களை இறுக்கமூடி திறந்தவள் பின் இனி அதைப்பற்றி நினைக்ககூடாதுஎன தனக்குள்ளே திரும்ப திரும்ப கூறிக்கொண்டாலும், மனதின் ஒரு மூலையில் அவள் அனுபவித்த வலிகள் ஆறாமல் அடிக்கடி அவளுக்குள் நினைவுபடுத்திக்கொண்டே இருந்தன.. இங்கு வந்தப்பின் தன் வாழ்க்கையில் அவ்வலிகளுக்கு இனி இடம்தர கூடாது என அவளை மாற்ற முயற்சித்து அதில் சிறிது வெற்றியும் கண்டாள்.

பின் வீட்டில் உள்ள அனைவரும் ஷாப்பிங் சென்ற விசயத்தையும் தன் அம்மா மூலம் அறிந்தவள், எதற்காக என யோசித்தபோது அனைவரும் உள்ளே வருவதை பார்த்தாள்.

“என்ன தாத்தா திடீரென ஷாப்பிங்?..”

“உனக்குதான்டா..”

“எனக்கா? எனக்கெதுக்கு?..”

“நாளைக்கு முதன்முதலில் கோவிலுக்கு வரப்போற, புது டிரஸ் போட வேண்டாமா?..”

“அப்போ என் தங்கச்சிகளுக்கு?..”

“அவங்களுக்கும்தான்டா. இந்தா தங்கம், டிரஸ் பிடிச்சிருக்கா பாரு.”

தாத்தாவிடமிருந்து வாங்கிய அமிர்தா உள்ளே ஆகாய நீலத்திலும்,மெரூன் கலரிலும், ரோஸ்கலரிலும் இருந்த தாவணிகளை பார்த்தவள்,

“இது என்ன தாவணி. எனக்கு தாவணி போட்டு பழக்கம் இல்லை, எனக்கு தாவணி எப்படி போடறதுனு கூட தெரியாதே” எனவும் அனைவரும் சிரிக்க, “ஏன் சிரிக்கறீங்க” என கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.