(Reading time: 25 - 50 minutes)

கிரணின் வார்த்தைகள் கொடுக்காத விளக்கத்தை கண்கள் சொல்லிட பெண்மைக்கு அவனெண்ணம் புரிகிறது.  திடுமென மனதிலிருந்து கிளம்பிய பய அலைகள் நொடிப் பொழுதில் உடலெங்கும் பரவிட... வெடவெடக்க சமைந்திருந்தவளின் மூளை கட்டளையிட, சட்டென காரின் கதவைத் திறந்து மண்மேட்டை நோக்கி பாய்ந்தோடினாள்.

இச்செயலை சற்றும் எதிர்பார்க்காதவன் காரிலிருந்து இறங்கவும்... அவள் மண்மேட்டை எப்படி ஏறினாள் என்று வியக்குபடி ஏறி, காட்டின் கருமையில் கலந்திருந்தாள்.

“எங்க ஓடினாலும், நீ இன்னைக்கு எனக்கு சொந்தமாக போறதை யாராலும் தடுக்க முடியாது” என்று உற்சாகமாக கூவிக்கொண்டே மண்மேட்டை ஏறி விட்டிருந்தான் கிரண்.

அது என்ன மரமென்று தெரியவில்லை... ஆனால் மிகப்பெரிதாக இவள் மறைந்து கொள்ள வசதியாக இருக்க அங்கேயே நின்றுவிட்டாள்.

அடுத்து என்ன? அவசரமாக யோசிக்க.... கண்ணில் தட்டுபட்ட எல்லாமே பயத்தை விதைக்கிறதெனில் அதனால் எழுந்துகொண்ட பதற்றத்தில் இருதயம் ஜெட் வேகத்தில் துடிக்க, அதற்கு போட்டியானது உதடுகள். 

துக்கம் தொண்டை அடைக்க தானாக தலைவனை தேடுகிறது.  சற்று முன் காதலை உணர்ந்த போதிருந்த மகிழ்ச்சிக்கும் இப்போதிருக்கும் அவளின் நிலைக்குமான இடைவெளி சுயபட்சாபத்தை கொடுக்க.... காதலை உணராது அவனை வதைத்ததால் தான் இப்படி தானாக வந்து சிக்கலில் மாட்டியிருக்கிறாளோ? இதிலிருந்து தப்பித்து ஜெய்யின் முகம் பார்ப்பாளா என்ற நொடி இத்தனை நாட்கள் இவளுக்கு புரியாமலிருந்த அவனுடைய காதல் பார்வைகள் வரிசைக்கட்டி நிற்க... கதறி அழுது அவன் தோள் சாய்ந்திட துடிக்கிறது.  அவனுடைய அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கினாள்.  இந்த மூன்று நாட்காளாக இவளிடம் அதிகமாக பேசாவிடினும் இவளை அவன் பார்வை வட்டத்திலேயே வைத்திருந்த அவனுடைய அக்கறை பிடிக்கிறது.

அவனுடைய அருகாமையை வேண்டிய மனது, ஒன்று இவனோடு போராடி கற்போடு திரும்பிடுவது... முடியாவிடில் கற்போடு உயிரை விடுவது என்று முடிவு செய்து கொள்ள.... சற்று முன் இவளின் அழுகையை கண்டு அதிர்ந்த ஜெய்யின் முகம் நினைவுக்கு வருகிறது.  என்றால் இவள் அழுதது அவனுக்கு தெரிந்திருக்குமே... வருவான் இவளை தேடிக் கண்டிப்பாக வருவான்! 

தனது இடது தோளில் மாட்டி வலது காலை தொட்டுக்கொண்டிருந்த அவளுடைய கைப்பையை கை தானாக தொட்டு பார்த்து, அடுத்த நொடி, அதிலிருந்த கைபேசியை எடுத்து ஜெய்யை அழைத்தாள்.

“ஹலோ சஞ்சு! என்னை காப்பாத்து சஞ்சு! இந்த கிரணோட கார்ல வீட்டுக்கு போகலாம்னு வந்தேனா.... அவன் திடீர்னு என்னென்னமோ போசுறா... எனக்கு பயமாயிருக்கு சஞ்சு! சீக்கிரமா இங்க வந்து என்னை கூட்டிட்டு போ சஞ்சு!” இன்னும் என்ன பேசியிருப்பாளோ அதற்குள் காலடியோசை கேட்கவும், கூகிள் மேம்மில் தானிருந்த இடத்தை அவனுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு, ஃபோனை வைப்ரேஷனில் போட்டுவிடவும் மறக்கவில்லை.

ஜெய் இவளை அழைத்து அந்த சத்தமே கிரணுக்கு இவளிருக்கும் இடத்தை காட்டிவிடுமே... வைப்ரேஷனில் இருந்தால் தான் ஜெய் இவளை அழைத்தாலும் சமயம் பார்த்து அவனிடம் பேசுவதோ இல்லை பிறகு கூப்பிடுவதோ என்ற எண்ணம் இவளுக்கு.

எங்கு திரும்பினாலும் மரம்...மரம்...மரம்! மரங்களை தவிர வேறேதும் இருக்கவில்லை.  அந்த மரங்களிலிருந்து உதிர்ந்திருந்த வகைவகையான மலர்களும், இலைகளும், மரபட்டைகளும்... எத்தனை மாதங்களாக அல்லது வருடங்களாக சேர்ந்திருந்தனவோ தெரியவில்லை.... மண்த்தரையை முற்றிலும் மூடியிருக்க... மண்ணை ஆயுதமாக்க முடியாதென்பதை குறித்து கொண்டது மூளை.

தன்னிடமுள்ள எதையாவது ஆயுதமாக்க முடியுமா என்று அடுத்த ஆலோசனை கூட்டம் இவளுள் தயாராகியிருந்தது.

இவள் அணிந்திருந்த ஷூ வகை காலணி... விட்டு விட்டு பெய்யும் மழையின் காரணமாக மக்கும் மரங்களின் கழிவுகள் கொழகொழவென மாறியிருக்க... வழுக்காதிருக்க அது பெரிதும் உதவுகிறது.  அதனால் இதை கழட்ட வேண்டாம்... அவனை கீழே தள்ளி முகத்திலோ கழுத்திலோ மிதிக்கலாம்.

அடுத்து அவள் இடையில், உடைக்கு அழகு சேர்க்கவென மாட்டியிருந்த மெல்லிய செயின்.... ம்ஹூம்...இது உதவாது!

என்னதான் இவள் காட்டில் ஓடி ஒளிந்தாலும் பௌர்ணமி நிலவும், இவளின் வெள்ளை உடையும் இவளுக்கு எதிரியாகிப் போயின.

வேட்டையாடும் நரியாக ஒவ்வொரு மரத்தையும் அவனுடைய எக்ஸ்-ரே (X-Ray) கண்களால் துழாவ... இவள் நின்றிருப்பதை நிலவு பளீரெனக் காட்ட... ஓசையெழுப்பாது பதுங்கி இவளை நெருங்கிய வேளை...

உள்ளுணர்வு உறுத்த திரும்பியவள் இவன் கையில் சிக்காது, அங்கிருந்து மின்னலென ஓடினாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.