(Reading time: 25 - 50 minutes)

அவனோடு போராடிக்கொண்டிருந்தாலும் பேசிப் பார்க்கும் முயற்சியில் இறங்கினாள்.

“எனக்கும்தா இது பிடிக்கலை! உன்னை பார்த்தன்னைக்கே, நீ எனக்கானவனு மனசு முடிவு செய்துடுச்சு.  ஒன்னா ரெண்டா நம்மளோட வாழ்க்கையை நினைச்சு எத்தனை கனவுகள்... ஆனா நீதான் என்னை புரிஞ்சுக்கவே இல்லையே.  இப்ப எனக்கு இதை தவிர வேற வழியுமில்லை”

“உனக்கு ஒரு கனவிருந்த மாதிரி எனக்கும் கனவுகள் இருக்கலாமில்ல?” அவன் வழியிலேயே அவனை மடக்க.... அதுவே அவளுக்கு வினையாகியது...

“என்னடி கனவு? அந்த சஞ்சயை கல்யாணம் செய்ற கனவா? முடியாதுடி! நானிருக்க வரைக்கும் அதை நடக்கவிட மாட்டேன்” என்று கத்தியவன் சரயூவை மரங்களுக்கிடையிலிருந்து இழுத்து வந்து கீழே தள்ளி அவள் மேல் படர்ந்தான்.

“ஏய் என்னை விடுடா... என்ன செஞ்சாலும் நீ நினைக்குறது நடக்காது.... நான் அதுக்கு விடமாட்ட... விடுடா என்னை” கைகால்களை உதைத்து அவனை எதிர்த்து திமிறினாள்.

“நீ என்ன செய்தாலும் தப்பிக்க முடியாது சரயூ.  எதுக்கு சும்மா இப்படி கத்தி தொண்டையை புண்ணாக்கிக்குற?” என்றபடி அவள் முகத்தை நோக்கி குனிய...

“போடா பொறுக்கி! ஒழுங்கு மரியாதையா என்னை விட்று... இல்லைனா நடக்குறதே வேற” ஆவேசமாக கூவ

“விடலைனா என்ன சரயூ செய்வ? ஓ... எங்கிட்ட கெஞ்ச போறியா....? அதை விட ஒரு நல்ல ஐடியா இருக்கு சொல்லட்டுமா....?” என்று நிறுத்தியவன் “என்னன்னு கேட்க மாட்டியா செல்லம்? சரி நானே சொல்ற... கெஞ்சறதுக்கு பதிலா என்னை கொஞ்சினன்னு வை, உனக்கும் ரொம்ப கஷ்டமில்லாம எல்லாம் முடிஞ்சிரும்” பெண்ணான அவளால் தன்னை என்ன செய்திட முடியும் என்ற அகங்காரத்தில் பேசிட...

திடீரென மூளையில் மின்னல் வெட்ட தனது எதிர்ப்பை நிறுத்தி அடங்கிவிட்டாள்.

இவ்வளவு நேரம் போரடியவள் சட்டென அடங்கிட.. அவனிடம் ஆச்சரியம் எழத்தானே செய்யும்! அவன் பேச்சுக்கான எதிரொலியென, அவன் நினைக்க...

அந்த நொடி நேர கவனச்சிதறலை உபயோகித்து உடலின் மொத்த வலிமையையும் திரட்டி அவனை தன் மேலிருந்து தள்ளியவள், அவன் சமாளிக்கும் முன்பாக கால்களின் ஷூக்களால் அவன் கழுத்தில் அடுத்த அட்டாக்.  அதே சமயத்தில் கைப்பையிலிருந்த சிறிய கத்தியை எடுத்து அவன் கழுத்தை சரசரவென கீறிவிட்டு ஓடிக்கொண்டிருந்தாள்.

மெல்லிய தோல் போர்த்திய கழுத்து பகுதியின் நரம்புகளைத் தீண்டும் சிறுக் கீறல் கூட இரத்த கசிவை ஏற்படுத்தி, கடைசியில் உயிரைக் குடிக்கும்.  அது தெரிந்து தானே கிரணின் கழுத்தைக் குறிவைத்தது இவளுடைய கத்தி.

நேர்மை, நியாயம், நீதியென அப்பாவிடம் கற்றிருந்தவைகளுக்கு முற்றிலும் எதிர்மறையான செயலை... அதுவும் திட்டமிட்டு செய்துவிட்டு ஓடிக்கொண்டிருப்பவளுக்கு எப்படி இருக்கிறதாம்? 

பேசித் தீர்க்க முடியாததென எதுவுமே இல்லையென்று அப்பா சொல்லியிருக்க... இவளும் பேச தானே செய்தாள்! இருந்தும் கிரண் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையே.  எனில் அவளுக்கு பேச தெரியாமல் தோற்று போனாளோ?

தோல்வியில் இழப்பு என்பது உறுதியானது.  ஆனால் இவளின் தோல்வி அவன் உயிரின் இழப்பு!

எவ்வளவு போராடினாள் அவனிடமிருந்து தப்பிக்க.. கடைசியில் இதை தவிர வேறு வழியிருக்கவில்லையே அவளுக்கும்!

ஒரு சிறிய கத்தியை கொண்ட சாவிக்கொத்து! முதல் பார்வையிலேயே அவளை ஈர்த்துவிட அதை வாங்கியிருந்தாள்.  அதனோடு கோர்க்க சாவியில்லாது, அது உபயோகமற்று வீட்டில் பல மாதங்கள் விழுந்துகிடக்க...  தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும் பெண்களுக்கு எதிரான குரூர செயல்களை கேட்டபோது அவளுள் எங்கோ ஒரு மூலையில் ஏதோ சொல்லிட அந்த கீச்செயினை எடுத்து கைப்பையில் பத்திரபடுத்தினாள்.  அன்றிலிருந்து கைப்பையை மாற்றினாலும் மறக்காது இதை அதில் போட்டுவிடுவாள். 

ஓரிரு முறை ஆப்பிளின் ருசியை மட்டுமே கண்டிருந்த அது இன்று மனித இரத்தத்தை ருசித்து இவளை காப்பாற்றியிருக்கிறது.

அது நல்லாதா கெட்டதா என்று தான் புரியவில்லை! இவளை காப்பாற்றினாலும் கிரணின் உயிரை குடித்துவிட்டதே.. தன்னை தற்காத்து கொண்டதை எண்ணி மகிழ்வாதா... ஒருவனைக் கொன்று கொலைகாரியாக மாறியிருப்பதை நினைத்து அழுவதா அவள்?

எதை எதையோ யோசித்தபடி ஓடிக்கொண்டிருந்தவளின் மூளையில் அவள் அடுத்த என்ன செய்ய வேண்டுமென்று மட்டும் தோன்றவே இல்லை.  பயம், தன்னுடைய இரும்பு கரத்தால் சரயூவின் மனதை இழுத்து பிடித்திருக்க... காட்டிலிருந்து வெளிவந்தவள் எதிரில் வந்தக் காரில் மோதிவிழுந்தாள்.

ஷ்விதா சொன்ன போதும், கனவில் கண்டிருந்த போதும், அடையாத துன்பத்தை இந்த கணம் உணர்ந்த ஜெய்யின் உயிர் உலர்ந்து போனது.  தலையில் உதித்த கோபத்தீ உடலெங்கும் பரவிட கண்களும் முகமும் இரத்தமென சிவந்து உக்கிரமாக நின்றிருந்தவனை கவனியாது அன்றைய நிகழ்வின் தாக்கத்தில் உடலுதற அழுதுக் கொண்டிருந்தாள் சரயூ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.