(Reading time: 34 - 67 minutes)

"நானும் வரேன்னு முடிவே பண்ணிடீங்களா அண்ணா?"

"குறுக்க பேசாத. முழுசா கவனி அவசரக்குடுக்க"

"சே, காவ்யாவுக்கு அவமானம். எங்க அந்த மதி?", என்று கேட்டாள் காவ்யா.

"இங்க தான் டி இருக்கேன்", என்று சத்தம் கொடுத்தாள் கலைமதி.

"உன் புருஷனை என்னை திட்ட விட்டு வேடிக்கை பாக்கியா டி மதி? அண்ணன் என்னை அவசரக்குடுக்கைன்னு சொல்றாங்க? நீ என்னனு கேளு மதி"

"என் அத்தான் உண்மையை சொன்னா நான் ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்க மாட்டேன் பா", என்று மதி சொல்வதும் "சமத்து டி செல்லம்", என்று சூர்யா கொஞ்சுவதும் காவ்யாவுக்கு கேட்டது.

"ஒண்ணுகூடிட்டாங்கய்யா, ஒன்னு கூடிட்டாங்க. இனி நான் என்ன சொல்ல? உங்க பிளானை சொல்லுங்க அண்ணா", என்றாள் காவ்யா.

"அப்படி வா வழிக்கு. அவன் சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்ட பட்டவன் மா", என்று ஆரம்பித்தான் சூர்யா.

"கஷ்ட பட்டவர் வீட்டுக்கு போனா நமக்கு எப்படி  அண்ணா சாப்பாடு கிடைக்கும்?", என்று தன் சந்தேகத்தை முன் வைத்தாள் காவ்யா.

அவளுடைய எதிர் கேள்வியில் கடுப்பான சூர்யா, "ஹ்ம்ம் அவன் வீட்டு வேலை செஞ்சாவது உனக்கு மூணு வேலையும் சாப்பாடு தந்திருவான் சரியா? அதனால உன் சாப்பாட்டு கவலையை விடு", என்றான்.

"சே, பாவம். ரொம்ப ஏழை போல", என்று எண்ணி கொண்டு "அப்படின்னா சரி. மித்த கதையை சொல்லுங்க", என்றாள் காவ்யா.

"அவன் சின்ன வயசா இருக்கும் போதே அவனோட அம்மா இறந்து போய்ட்டாங்க. அவனுக்கு ஒரு தங்கச்சி உண்டு. ரெண்டு பேரையும் வளர்க்க அவனோட அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டாரு. கிட்ட தட்ட மதி கதை மாதிரி தான். ஆனா ஒரு சின்ன வித்தியாசம் அவனோட சின்னம்மாவுக்கு இவனை மட்டும் தான் பிடிக்காது. இவனோட தங்கச்சியை ரொம்ப பிடிக்குமாம். ஆனா அதையும் இவன் நடிப்புன்னு சொல்லுவான். அந்த பொம்பளை இவன் தங்கச்சிகிட்ட இவனை பத்தி தப்பு தப்பா பேசி கொஞ்சம் கொஞ்சமா இவன் கிட்ட இருந்து அவளை பிரிச்சு அது பக்கம் இழுத்துக்கிச்சாம். இப்ப அவனோட தங்கச்சியை பழைய படி பாசமா இருக்குற மாதிரி மாத்தணும்", என்று முடித்தான் சூர்யா.

"இதுக்கு நான் என்ன அண்ணா செய்ய முடியும்?"

"நீ வந்தேன்னா நானும் கலையும் ஊரை சுத்தி பாப்போம். நீ அவனோட தங்கச்சி கூட ஜாயிண்ட் அடிச்சு அவ மனசை மாத்தி...."

"அட பாவிகளா? உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? எப்படி எப்படி இவங்க என்ஜாய் பண்ணுவாங்களாம். நான் அவங்க குடும்பத்து அக்கப்போரை பாக்கணுமா?", என்றாள் காவ்யா.

"வாழ்க்கையிலே இந்த வேலையாவது உருப்படியா செய் தங்கச்சி", என்று சிரிப்புடன் கூறினான் சூர்யா.

"அண்ணா, அப்ப நான் எந்த வேலையும் உருப்படியா செய்றது இல்லையா?", என்று சிணுங்கிய காவ்யா "சரி சரி என்னோட அண்ணன் சொன்னதுக்காக வரேன். ஆனா உங்க கூட எங்க அம்மா, அப்பா விட மாட்டாங்களே", என்றாள்.

"அங்கிள் ஆண்ட்டி கிட்ட மதி சம்மதம் வாங்குவா. நீ கவலை படாதே", என்று மதியை மாட்டி விட்டான் சூர்யா.

தே மாதிரி அன்று வேலைக்கு போய் விட்டு வந்த சூர்யா மதியை அழைத்து கொண்டு காவ்யா வீட்டுக்கு சென்றான்.

முடியாது என்று பல காரணம் சொல்லி மறுத்த திலகாவையும் சுந்தரையும் மதி தான் சம்மதிக்க வைத்தாள். போதா குறைக்கு அவர்களையே அழைத்தாள்.

மதிக்காக சம்மதித்த அவர்களும் நாங்கள் வரவில்லை என்று கூறி காவ்யா மட்டும் செல்ல அனுமதி கொடுத்தார்கள்.

ஷியாம் பிரகாஷ் அவனுடைய வீட்டுக்கு சென்று திரும்பிய பின்னர் அவன் போன் செய்து சொன்னவுடன் இங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.

தன்னுடைய வீட்டுக்கு சென்ற ஷியாமோ  தயக்கத்துடன் தான் உள்ளே நுழைந்தான். அவனை பார்த்த அவனுடைய சித்தி விசாலாட்சி "ஓ நீயா? இந்த நேரத்துல யாருடா எந்த வழிபோக்கன்னு நினைச்சேன்", என்று எள்ளலாக கேட்டு அவனுக்கு சினமூட்டினாள்.

இவனை கண்டு பாசமாக அவனுடைய தந்தை மோகன் ஓடி வந்ததும் "வா மகனே", என்று நடித்து கொண்டிருந்தாள்.

அவளுடைய நடிப்பை கண்டு அவளை பார்த்து முறைத்து கொண்டிருந்தான் ஷியாம் பிரகாஷ்.

"உன்னோட சித்தி உன்னை எவ்வளவு பாசமா கூப்பிடுறா? நீ தான் டா அவ மேல வெறுப்பை வச்சிருக்க. சரி சரி இத்தனை நாளா பாக்க வராம இப்பவாது வரணும்னு தோணுச்சே. எங்க டா உன்னோட திங்ஸ் எல்லாம்? கார்ல இருக்கா? சரி சரி நீ உள்ள வா", என்று அழைத்தார்.

எரிச்சலுடன் தான் உள்ளே நுழைந்தான் ஷியாம் பிரகாஷ். அப்போது மாடியில் இருந்து இறங்கி வந்தார்கள் அவனுடைய தங்கை காயத்ரியும், விசாலத்தின் மகன் விஷ்ணுவும். இருவருமே இவனை வெறுப்புடன் தான் கண்டார்கள்.

அதை பார்த்து மனம் கலங்கினாலும், "எப்படி இருக்க காயத்ரி? இந்தா உனக்கு பாரின்ல இருந்து நிறைய வாங்கிட்டு வந்தேன். விஷ்ணு உனக்கும் தான்", என்று அவர்களிடம் நீட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.