(Reading time: 34 - 67 minutes)

அதை கண்ணால் கூட காணாதவர்கள் போல இருந்தவர்கள் நேராக விசாலம் அருகில் சென்று "சித்தி நான்  இன்னைக்கு ரெட்கலர் கார்ல போகட்டா?", என்று காயத்ரியும் "ஆமா, நானும் அக்கா கூடவே ஸ்கூலுக்கு போறேன் அம்மா", என்று விஷ்ணுவும் கேட்டு கொண்டிருந்தார்கள்.

"உங்களுக்கு பிடிச்சதை செய்ய இந்த அம்மா என்னைக்காவது தடை சொல்லிருக்கேனா? சந்தோசமா போயிட்டு வாங்க", என்று தேனொழுகும் குரலில் கூறினாள் விசாலாட்சி.

அவர்களும் அவளிடம் சொல்லி விட்டு, மோகனிடமும் சொல்லி விட்டு  அவனை திரும்பி பாராமல் சென்று விட்டார்கள்.

"உள்ள போய் ரெஸ்ட் எடுப்பா. நீ இருந்து கவனிக்க வேண்டிய ஆபிஸ். நான் தனியா கஷ்ட போட்டுட்டு இருக்கேன். சரி நான் ஆபிஸ் கிளம்பி வரேன்", என்று ஆபிஸ் அறைக்குள் சென்று விட்டார் மோகன்.

அதே இடத்தில் அடி பட்ட தோற்றத்துடன் நின்ற ஷியாமை பார்த்து ஏளனமாக சிரித்தாள் விசாலாட்சி.

அவளுடைய ஏளன சிரிப்பை காண முடியாமல் அப்படியே அங்கிருந்து திரும்பி விட்டான் ஷியாம் பிரகாஷ்.

அவன் இப்படியே சென்றால் "அந்த விசாலம் அப்பாவிடம் என்னை திட்டி விட்டுட்டு இங்கிருந்து போய்ட்டான். நான் எப்படி கெஞ்சுனேன் தெரியுமா? என்னை தள்ளி விட்டுட்டு போய்ட்டான்னு சொன்னாலும் சொல்லுவா", என்று எண்ணிக்கொண்டான்.

"இவளை பத்தி இந்த காயத்ரி எப்ப தான் புரிஞ்சிக்க போறாளோ?", என்று ஒரு விரக்தி புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

நேராக வீட்டுக்கு வந்தவன் சூர்யாவை அழைத்தான். அவன் அழைப்பு வந்ததும் குழப்பத்துடன் எடுத்தவனுக்கு அவனுடைய சோகமான குரலே என்ன நடந்திருக்கும் என்று உணர்த்தியதால் "இன்னைக்கு நாங்க கிளம்புறோம் டா", என்று சொல்லி போனை வைத்து விட்டு மதியை கிளப்பி அவனும் கிளம்பி காரை எடுத்து கொண்டு காவ்யாவையும் அழைத்து கொண்டு கிளம்பி விட்டான்.

காரில் மதி, காவ்யா பின்னே அமர்ந்திருந்தார்கள். "நான் தனிமையை உணர கூடாதுன்னு நினைச்சு தான் அண்ணா மதியை பின்னாடி உக்கார வச்சிருக்காங்க", என்று எண்ணி கொண்டாள் காவ்யா.

காரும் குளிர்ச்சியான மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. காவ்யாவும் மதியும் வழக்கடித்து கொண்டிருந்தார்கள்.

ஒரு பெரிய மாளிகையின் முன் காரை நிறுத்தினான் சூர்யா. அவனை கண்டதும் செக்யூரிட்டி உள்ளே அனுமதித்தான்.

காவ்யாவும், மதியும் அந்த அழகான மாளிகையும் சுற்றி பூத்து குலுங்கி கொண்டிருந்த மலர்களையும் கண்டு வியந்து போனார்கள்.

அவர்கள் வரும் நேரம் என்பதால் குளிருக்கு இதமாக டீ தயாரித்து கொண்டிருந்த ஷியாம் அவர்கள் வரவை அறிந்து வெளியே ஓடி வந்தான்.

வந்தவன் அங்கே பூவை ரசித்து கொண்டிருந்த அவனுடைய பூவான காவ்யாவை கண்டு திக் பிரம்மை அடைந்தான். சூர்யாவை வரவேற்க வேண்டும் என்பதை கூட மறந்து அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். ஒரு நிமிடம் "கனவு காண்கிறேனோ?", என்று கூட எண்ணி கொண்டான். தன்னவள் தன்னுடைய வீட்டில் இருக்கும் அந்த நொடி அவனுக்கு வெகு அழகாக தோன்றியது. வெறும் நிழல் படத்தை பார்த்து மட்டும் காதல் கொண்டு அவளுடனே வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு அவள் வருகை இன்ப ஊற்றாக இருந்தது.

அவன் பார்வை போன திசையை கண்ட சூர்யா, "அது கலையோட பிரண்ட் காவ்யா டா. அவளுக்கும் லீவ்.  அதான் கூட்டிட்டு வந்தேன்", என்று விளக்கம் கொடுத்தான்.

சூர்யா பேச ஆரம்பித்த பின்னர் தான் மதியும், காவ்யாவும் ஷியாம் பக்கம் திரும்பினார்கள். அப்போது தான் சுயநினைவுக்கே வந்தான் ஷியாம் பிரகாஷ்.

சூர்யாவை கட்டி கொண்ட ஷியாம் "எப்படி டா இருக்க? ரொம்ப வருஷம் ஆச்சு பாத்து. மதி எப்படி மா இருக்க? உள்ள வா டா.  நீயும் உள்ள வா மா. நீங்களும் உள்ள வாங்க", என்று காவ்யாவையும் அழைத்தான்.

"நல்லா இருக்கேன் டா", என்று சூர்யாவும் "எப்படி அண்ணா இருக்கீங்க?", என்று மதியும் கேட்டார்கள்.

அவர்களுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு "செமையா இருக்கான் இவன்", என்று தோன்றியது. "பாவம் இவன் தான் அண்ணாவோட ஏழை பிரண்ட் போல? இந்த பங்களாவை பாத்துக்குற வேலை தான் செய்றானா? கண்டிப்பா இவனை இவன் தங்கச்சி கூட சேத்து வைக்கணும்", என்று எண்ணி கொண்டாள்.

அடிக்கடி அவள் பக்கம் போக துடித்த பார்வையை அடக்கி ஆள்வதுக்குள்  வெகுவாக களைத்து போனான் ஷியாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.