(Reading time: 34 - 67 minutes)

அவர்கள் வந்து சேர்ந்ததே மாலை என்பதால் இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். "வேலைக்காரியும் காலையில்  தானே வருவான்னு வாட்ச்மேன் சொன்னார். அப்ப   நைட் வெளிய ஆர்டர் பண்ணிரலாமா?", என்று யோசித்தவனுக்கு "ஹோட்டல் கூட்டிட்டு போகலாம்", என்ற யோசனை வந்தது.

பின் நிம்மதியுடன் சோபாவில் சாய்ந்தவன் டிவி பார்க்க ஆரம்பித்தான்.

ஜம்பமாக ஹீட்டர் ஆன் பண்ண தெரியும் என்று சொன்ன காவ்யாவோ பாத்ரூம் சென்று விழித்து கொண்டிருந்தாள். அங்கே உள்ள ஹீட்டர் புது விதமாக இருந்தது.

திருப்பி போய் அவன் கிட்ட கேட்டா என்னை பத்தி என்ன நினைப்பான்? அதுக்கு பச்சை தண்ணிலே குளிச்சிரலாம்", என்று நினைத்து கொண்டே ஜில் தண்ணீரில் கை வைத்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்த தண்ணீரில் குளித்தால் அவள் விறைப்பது உறுதி. அவன் கிட்டயே கேட்கலாம் என்று நினைத்து வெளியே வந்தவள் ஷியாம் அருகே வந்து அவனை பார்த்தாள்.

அவளை ரசிக்க தூண்டிய மனதை அடக்கியவன் "என்ன ஆச்சுங்க? எதாவது வேணுமா?", என்று சாதாரணமாக கேட்டான்.

"அந்த ஹீட்டர் ஆன் பண்ண தெரியலை அதான்", என்று மென்று முழுங்கினாள் காவ்யா.

"அதுக்கு தான் சொன்னேன். ஆனா உங்களுக்கு தெரியும்னு சொன்னீங்களே? ஆனா பரவால்ல மத்தவங்க மாதிரி கேட்க அவமான பட்டு நிக்காம என்கிட்டே கேட்டதுக்கே உங்களை பாராட்டணும். வாங்க நீங்க குளிக்க, நான் ஹெல்ப் பண்றேன்", என்று முன்னே நடந்தான்.

"என்னது?", அதிர்ச்சியாக முழித்தாள் காவ்யா.

"ஐயையோ, நான் நீங்க குளிக்க ஹீட்டர் விசயத்துல ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன்", என்று அவசரமாக சொன்னான் ஷியாம்.

அதில் நிம்மதியாக மூச்சு விட்டவள் அவன் பின்னால் சென்றாள். அங்கே சென்றவுடன் அனைத்தையும் சொல்லி கொடுத்தான் ஷியாம். அதுக்கு தேங்க்ஸ் சொன்னாள் காவ்யா.

"இதுக்கெல்லாம் தேங்க்ஸ் வேண்டாம்ங்க", என்றான் ஷியாம்.

"நீங்க சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னை பாராட்டும் போது நான் தேங்க்ஸ் சொல்ல கூடாதா?", என்று கேட்டாள் காவ்யா.

புரியாமல் விழித்த ஷியாம் "என்ன பாராட்டுனேன்?", என்று அவளிடமே கேட்டான்.

"நான் மறுபடி வந்து ஹெல்ப் கேட்டதுக்கு பாராட்டுனீங்கள்ல? இதுல மான ரோசம் பாத்தா பச்சை தண்ணீர்ல விறைக்க வேண்டியது தான். இதுக்கெல்லாம் இனி பாராட்ட வேண்டாம். எனக்கு எல்லாம் சூடு சுரணை கம்மி"

அவளுடைய எளிமையான பேச்சில் கவர பட்டவன் ஒரு புன்னகையை அவளிடம் சிந்தி விட்டு வெளியே வந்து  மறுபடியும் டிவி பார்க்க அமர்ந்தான்.

அறைக்கு வந்த காவ்யா தன்னுடைய போனை எடுத்து தன் அப்பாவை அழைத்து இங்கே வந்து சேர்ந்து விட்டதை சொன்னவள் குளிக்க சென்றாள்.

குளித்து முடித்து மற்றொரு சுடிதாரை அணிந்தவள் அதன் மீது துப்பட்டாவை போடாமல் ஒரு சுவட்டரை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.

எங்கேயோ வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான் ஷியாம் பிரகாஷ். அவனுடைய நினைவில் காவ்யா தான் இருந்தாள். "காவ்யா மனசுல வேற யாராவது இருக்காங்களான்னு தெரிஞ்சிக்கணுமே", என்பது தான் அவன் எண்ணமாக இருந்தது.

அவனுடைய எண்ணத்தின் நாயகியே அவன் எதிரே வந்து நிற்பதை அறியாமல் கனவுலகில் இருந்தான் அவன். அவனுடைய கையில் இருந்த ரிமோட்டை யாரோ பிடுங்குவதை உணர்ந்து சுயநினைவுக்கு வந்தவன் எதிரே தன்னை முறைத்து கொண்டிருந்தவளை பார்த்து திகைத்தான்.

"எதுக்கு இப்படி முறைக்கிறா?", என்று நினைத்து கொண்டு அவளிடமே "என்னங்க ஆச்சு?", என்று கேட்டான்.

"என்ன என்ன ஆச்சு? உங்களுக்கு என்ன ஆச்சு? நான் இங்க அஞ்சு நிமிசமா உங்களை கூப்பிட்டுட்டு இருக்கேன்? ஏங்க, சார், மங்கின்னு  கூட கூப்பிட்டேன். இன்னும் டா போடாதது மட்டும் தான் குறை. நீங்க என்னடான்னா, அப்படியே அசையாம இருக்கீங்க?"

"நீ டா சொல்லி கூப்பிட்டா அதை விட பெரிய பாக்கியம் என்ன இருக்கு?", என்று எண்ணி கொண்ட ஷியாமோ "சாரிங்க. ஏதோ யோசனையில் இருந்துட்டேன். எதுக்கு கூப்பிட்டீங்க?", என்று கேட்டான்.

"எப்பவும் மனசுல உள்ள கவலையே நினைக்க கூடாதுங்க", என்றாள் காவ்யா.

"நான் என்ன கவலையை நினைச்சேன்?", என்று மனதுக்குள் எண்ணி கொண்டு "சரி இனி கவலை படலை", என்றான்.

"தட்ஸ் குட். சரி நான் இப்ப எதுக்கு கூப்பிட்டேன்னா, எனக்கு ரிமோட் வேணும்னு கேட்க தான் கூப்பிட்டேன்"

"ஓ, ஆனா நல்ல மூவி தான ஓடிட்டு இருக்கு. எதுக்கு மாத்தணும்?"

"நல்லா கேட்டிங்க போங்க? எங்க வீடா இருந்தாலும் சரி, யார் வீடா இருந்தாலும் சரி சரியா ஆறரைக்கு பாலிமர்ல நினைத்தாலே இனிக்கும் பாத்துருவேன்"

"நினைத்தாலே இனிக்குமா அந்த மூவி தினமுமா போடுவான்?"

"ஐயோ அது மூவி இல்லை சீரியல். சாரி நேரம் ஆகிட்டுன்னு தான் அவசரமா பிடுங்கிட்டேன்", என்று சொல்லி கொண்டே சேனலை மாற்றி கொண்டே அந்த சீரியலை வைத்தாள்.

ஒரு புன்னகையுடன் அவளை பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவளுடைய மனதை அறிய இது தான் சரியான நேரம் என்று தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.