(Reading time: 24 - 48 minutes)

ரயூவினுள் கண்வன் மீதான கோபம், வருத்தமெல்லாம் இருக்க தான் செய்கிறது.  ஆனால் அவைகளை அடித்து ஓர் மூலைக்கு துரத்திவிட்டு அவளை ஆக்கிரமித்திருக்கும் ஜெய்யின் உண்மையான அன்பும் காதலும் அவனிடமாக இவளை தள்ளிக் கொண்டிருக்கிறது என்றால்... காரணமேயில்லாது... அவன் சேலையை சரிசெய்துவிட்டு புன்னகைத்தானே...அதுவே மனதில் ஒருவகையான நிறைவையும் தித்திப்பையும் வீசி செல்கிறது.  ஏனோ அவனை அணைத்து முத்தமிட தோன்றிட... இத்தனை கூட்டத்தில் என்ன செய்வாளாம்?! அவனைவிட்டு பிரியாது பக்கத்தில் நின்றுகொண்டாள்.  உலகையே வென்ற உவகையும் பெருமையும் அப்படி அவனருகில் நிற்கையில்.

“இதை வாங்கிக்கோ சரூ!” என்று இரண்டு வைர வளையல்களை கொடுத்தவன், “உன்னையும் அழைச்சிட்டு போயி வாங்கனும்னுதா நேத்தைக்கு சீக்கிரம் வர பார்த்தே....ஆனா வேலையெல்லா முடிக்கவே லேட்டாகிடவும்...நானே வாங்கிட்டே.  உனக்கு பிடிச்சிருக்கு தானே?” முகத்தை கேள்வியோடு பார்த்திட, ஆமென இவள் தலையாடவும் புன்னகைத்தவன்,

“வா சரூ! மைதிக்கு போட்டுவிடலாம்” என்றுவிட்டு நடக்க...

மைத்ரீயின் வலது கையில் ஜெய்யும், இடது கையில் சரயூவுமென ஒரே நேரத்தில் ஆளுக்கு இரு வளையல்களை மாட்டிவிட்டனர்.

தோழிக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்திருக்கவில்லையே சரயூ! இப்போது திடீரென கணவன், இரு வளையல்களை இவளிடம் கொடுத்திடவும்....

என்னில் பாதி நீ என்பதாக இருந்த ஜெய்யின் செயலில் நெகிழ்ந்து உருகியவளுள், அவன் என் கணவன் என்ற உரிமை மேலோங்கிட... பெருமித பெருவெள்ளத்தில் மிதக்க வைக்கிறது இவளை.

மைத்ரீயின் கண்களில் நீர்படலத்தைக் காணவும், “ஹே என்னாச்சு மைதி?” இவள் பதற... ஜெய்யோ ‘எதுக்கு இந்த அழுகை?’ என்பதாக கண்டிப்புடன் பார்த்தான்.

“காலேஜ் முதல் நாளைக்கு நாம் ரெண்டு பேரும் கிஃப்ட் கொடுத்துக்கிட்டோமே ஜெய்... அதே மாதிரி இன்னைக்கு நானும் உனக்கு வைர வளையல் வாங்கினா... நீ எப்படி போட்டுக்குவனு நினைக்கவும் அழுக வந்திடுச்சு” என்று கண்ணீரோடு சிரித்தவளை பார்த்து சரயூ சிரிக்க...

காலேஜ் முதல் நாள் இருவரும் பரிசை பரிமாறிக் கொண்டதோடு சரி.  அதன் பிறகு அதற்கான சந்தர்பம் அவர்களுக்கு அமையாமல் போனது.  அதற்கான காரணங்களும் அது தந்த பிரிவுமென தோழியின் கண்கள் பல கதைகள் சொல்வதை புரிந்து கொண்டவனோ சிறு புன்னகையோடு,

“ஏன் நான் கிஃப்ட் கொடுத்தா, நீ திருப்பி கொடுக்கனுமா என்ன? லூசு மைதி!” என்று செல்லமாக அவள் தலையை வருட

தோழனை எப்போதும் சரியாக புரிந்திடுபவளுக்கு, கசப்பான சம்பவங்களை மறந்திட வேண்டுமென அவன் நினைப்பது புரியாமலிருக்குமா!

“என்னடா குரங்கே....இன்னும் என்னை லூசுனு சொல்ற? என்னோட பிள்ளை வந்து உனக்கு ஒரு குத்து வைக்கும்போது தான் தெரியும் யாரு லூசுனு” என்று அவனை மிரட்டிட...

“முதல்ல ராகுல்... இப்போ உன்னோட பிள்ளையா? சரி...சரி...யார் வந்தாலும் ஒரு கை பார்த்திர வேண்டியதுதா! ஒன்னை மறந்துறாத மைதி... உன்னோட பிள்ளைக்கிட்ட நான் சொல்ல போற முதல் விஷயமே, நீ அவங்க அப்பாவை துவச்சயே...அந்த கதைதா” குறும்பாக அவன் சொன்ன மறுநொடி., ராகுலை அவள் சந்தித்த அன்றைய நினைவில் வெடித்து சிரித்தாள்.

பக்கத்தில் நின்றிருந்த சரயூ, இவர்கள் பேசியது புரியாது விழிக்க...

மனைவியும் ஜெய்யும் இவனை பார்த்து சிரிப்பதில் அருகே வந்த ராகுலோ,

“இன்னைக்கு யாரை துவச்சீங்க?” என்று கேட்க

இவர்களின் சிரிப்பு சட்டென நின்றுவிட... ஆச்சரியத்தில் கண்கள் விரிய அவனை பார்த்தனர்.

“ஆச்சரியமா இருக்கா? நான் அன்னைக்கே சொன்னதுதா ஜெய்! கண்டுபிடிக்கிறேனு சொன்ன.. கண்டுபிடிச்சிட்ட” என்று புன்னகைக்க

“எப்படி பாஸ்?! அசத்துறீங்க போங்க” என்று ஆச்சரியத்தை வெளியிட

“மையூவை கலயாணம் பண்ணி, ஃப்ரெண்டுஷிப் என்ற பேருல உங்க ரெண்டு பேரோட சேட்டைய தாங்கும்போது, இந்த சுண்டைக்கா விஷயத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன?” என்று அவர்களை வார

“நாங்க ஒன்னும் சேட்டை செய்யல.... எப்பவுமே இப்படிதா” என்று கணவனுக்கு பதிலளித்துவிட்டு ஜெய்யிடம் ஹைஃபை கொடுத்திட...

இத்தனை நேரம் குழம்பி நின்றிருந்த சரயூவின் பொறுமை பறந்திருக்க,

“இங்க என்னதா நடக்குது?” என்று கேட்க..

“சரயூக்கு தெரியாதா? இதை போய் அவகிட்ட மறைக்க உனகெப்படி மனசு வந்தது ஜெய்?” என்று அதிர்ந்து கேட்டவன், தங்கையிடம் திரும்பி, “உங்கிட்ட போயி மறைச்சிட்டானே சரயூ.  உன்னோட புருஷனே மறைச்சதை, நாங்க எப்படி சொல்ல முடியும்?” என்று ஜெய் எதோ முக்கியமான ஒன்றை அவளிடமிருந்து மறைத்துவிட்டதை போல் பேசியவன் மைத்ரீ, ஜெய்யை பார்த்து கண்சிமிட்டு விட்டு சென்றுவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.