தொடர்கதை - காரிகை - 16 - அமுதினி
வீணை அடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணும் இடம் தோரும் நின்றன் கண்ணின் ஒளிவிசுதடி
மானுடைய பேரரசி வாழ்வு நிலையே கண்ணம்மா
வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணு சுத்தி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா
காருண்யா இல்லம் விழா கோலம் பூண்டிருந்தது. அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் உற்சாகமாக இருந்தனர்.
அன்று மதிய உணவாக பரிமாறப்பட்ட அறுசுவை உணவை எல்லோருக்கும் பரிமாறி கொண்டிருந்தனர் பவித்ராவும், சத்யாவும், லட்சுமி அம்மாவும்.
பவித்ரா ஒரு பெண்ணுக்கு பரிமாறும்போது அவள் கைகளை பிடித்து கொண்ட அந்த பெண், "அக்கா ரொம்ப தேங்க்ஸ் கா. எப்பவுமே மூணு வேளை சாப்பாட்டுக்கு கூட இன்னொருத்தரை எதிர்பாக்கற நிலைமை. நான் எல்லாம் எதுக்கு வாழறோம் அப்படினே தெரியாம இருந்தேன். ஆனா இப்போ தான் எனக்கு ஒரு நம்பிக்கை வருதுக்கா. சார் சொன்னாரு, உங்களை எல்லாம் நம்பி, உங்க மேல எல்லாம் இருக்கற நம்பிக்கைல தான் பவித்ரா இந்த முயற்சியை ஆரம்பிச்சிருக்காங்க அப்படினு. ரொம்ப தேங்க்ஸ்க்கா. எங்களுக்கே எங்க மேல நம்பிக்கை இல்லாதப்போ நீங்க நம்பிக்கை வெச்சுருக்கீங்க. கண்டிப்பா அதை பொய்யாக்க மாட்டோம்க்கா." அந்த பெண் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பவித்ராவின் மனதிற்குள் இனம் புரியா ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது. இது தான் அடுத்தவரை மகிழ்வித்து பார்க்கும் போது கிடைக்கும் உணர்வோ என என தோன்றியது பவித்ராவுக்கு.
பரிமாறிவிட்டு ஓரமாக வந்து நின்றவள் கண்களில் பட்டது அந்த புதிய கட்டிடங்கள் இரண்டு. அது ஆஸ்ரமத்து பெண்களுக்காக தொடங்கப்பட்ட புதிய டைலரிங் மற்றும் பேக்கரி தொழில்களுக்காக அமைக்கப்பட்டவை.
பெரிய கட்டிடங்கள் இல்லை. சிமெண்ட் சீட் கொண்டு வேயப்பட்ட இரண்டு நடுத்தர அளவிலான கட்டிடங்கள் தான். ஆனால் இன்று அது இந்த பெண்கள் மத்தியில் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கைக்கும் உற்சாகத்திற்கும் அளவு சொல்ல முடியாது. இது எல்லாம் ஒரு நாளில் நிகழவில்லை. மூன்று மாத போராட்டம். அங்கே ஒரு பாட்டியிடம் குனிந்து அவருக்கு கேட்கும் வண்ணம் ஏதோ பேசி கொண்டிருந்த சத்யாவை பார்த்தாள்.